ஆகஸ்ட் 13, 2011 அன்று அரோரா ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி) கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு உள்ளூர் நடனப் பள்ளிகளும் பிற கலைக்குழுக்களும் பங்கேற்ற சிறப்பான கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
லாஸ்யம் நடனப்பள்ளியின் குரு ஹேமா யடனபுடி அவர்களின் மாணவர்கள் வழங்கிய 'லிங்காஷ்டகம்' குச்சிபுடி நடனம், குரு விஜயலட்சுமி ஷெட்டியின் நடராஜ் நடன அகாடமி வழங்கிய 'நிருத்ய வந்தனம்' ஆகியவை வெகு அழகு. குச்சிபுடி நாட்ய விஹாரின் ஷோபா தம்மனாவும், ஆனந்தா டான்ஸ் தியேடரின் ஜானகி ஆனந்தவல்லி நாயரும் இணைந்து 'மரகத மணிமய சேலா' என்ற அற்புதமான தரங்கம் ஒன்றை குரு சமர்ப்பணமாக வழங்கினர்.
நிகழ்ச்சியின் மகுடமாக ஒளிர்ந்தது, சுனதா என்ற பார்வையற்றோர் குழுவினர் வழங்கிய பிரமிக்க வைத்த 'தீபாஞ்சலி' நிகழ்ச்சி. தமது கைகளில் தீபங்களை ஏந்தியபடி மாறி மாறி அணிகள் வகுத்தது நம்பற்கரியதாக இருந்தது. 'மோஹினி பஸ்மாசுரன்' என்ற குச்சிபுடி நாட்டிய நடனத்தை விசாகப்பட்டினத்தின் 'குச்சிபுடி கலாக்ஷேத்ரா' பள்ளியின் குரு ஹரி ராம மூர்த்தி வடிவமைத்து வழங்கினார். ஹரி ராம மூர்த்தி தாமே பஸ்மாசுரனின் வேடம் தாங்கி மிகவும் நேர்த்தியாக ஆடினார். மோஹினியாக நடனமாடிய சந்தியாஸ்ரீ ஆத்மகுரியின் தோற்றமும் நடனமும் பஸ்மாசுரனை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வசீகரித்ததில் ஆச்சரியமில்லை.
சரோஜா ரவி நிகழ்ச்சிகளைச் சுவைபடத் தொகுத்தளித்தார். ஸ்ரீ பாலாஜி கோவிலின் தலைவர் டாக்டர். ராமராஜா பி. யலவர்த்தி கலைஞர்களைக் கௌரவித்தார்.
செய்திக்குறிப்பிலிருந்து |