கல்லூரி நூலகத்தின் குறிப்பு நூல் (reference) பகுதியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணன். அதற்குப் பொறுப்பேற்றிருந்த சந்திரா மிகப் பொறுமையாக எல்லோருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணனின் முறை வந்தது. 'ஹை! நான் பங்குச் சந்தைகள் பற்றி விவரம் தேடிக் கொண்டிருக்கிறேன். உதவ முடியுமா?' என்றான். சந்திராவின் உதவியோடு அவன் தேடியெடுத்த தடிதடியான புத்தகங்களைச் சுமக்க அவனது கட்டுமஸ்தான உடல் சரியாக இருந்தது.
அன்று மாலை அவன் பஸ் நிறுத்தத்தில் சந்திராவைப் பார்த்தான்.
'அப்போ, நிதித் துறை சமாச்சாரங்களில் உனக்கு ஆர்வம்னு சொல்லு' என்றாள் சந்திரா.
கிருஷ்ணன் சிரித்தான். 'அப்படியல்ல. வர்ற வெள்ளிக் கிழமை எனக்கு ஒரு 'டேட்' இருக்கு. அவள் நிதித்துறையில் மேஜர் பண்றா. அவ முன்னால பேபேன்னு முழிக்கக் கூடாதே' என்றான்.
பஸ் வர்ற வரைக்கும் நான் உனக்கு சில விஷயங்களைச் சொல்றேன், கேட்டுக்கோ' என்றாள் சந்திரா.
கிருஷ்ணன் ஆச்சரியப்பட்டான்.
'ஓ! நல்லது. அப்படீன்னா, வா ஒரு கா·பியாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்' என்று கூப்பிட்டான் கிருஷ்ணன்.
இருவரும் கா·பி அங்காடியைப் பார்த்து நடந்தார்கள்.
சந்திரா பேசத்தொடங்கும் முன்னால் கிருஷ்ணன் 'இங்க பாரு, நிதி விஷயத்தைப் பொறுத்த வரையில் நான் பட்டிக்காட்டான். அதனால, கொஞ்சம் எளிமையாச் சொல்லு, சரியா?' என்றான்.
அவன் மனம் திறந்து பேசுவது அவளுக்குப் பிடித்தது.
'பொருள் வாங்குகிறவர்களும் விற்பவர்களும் இணையத்தில் சந்திக்க ஈ-பே (eBay) அனுமதிக்கிறது. விற்பவர் மிகக்குறைந்த விலையில் ஏலத்தைத் தொடங்குகிறார். ஆனால், மிக உயர்ந்த விலைக்குக் கேட்டவருக்குப் பொருள் கிடைக்கிறது.
'விற்பவரிடம் ஈ-பே விற்பனைச் செலவு என்று பணம் வசூலிப்பதன் மூலம் வருமானம் ஈட்டுகிறது. ஒவ்வொரு பொருள் விற்பனையிலும் அதற்கு வருமானம் கிடைக் கிறது. இந்தக் கூலியைக் கொடுத்துவிட்டு, விற்பவர் தனது பொருளை விவரிக்கலாம், வாங்குபவர் ஏலம் கேட்கலாம். உலகெங்கிலும் இருந்து மிக அதிகமான வாங்குவோரை ஈ-பே ஈர்ப்பதால், விற்பவர்கள் அதை விரும்புகிறார்கள். பங்குச் சந்தையை விட்டு விட்டு நான் ஏன் ஈ-பேயைப் பற்றிச் சொல் கிறேன் என்று தெரிகிறதா?' என்று கேட்டாள் சந்திரா.
'தெரியலையே!' ஒப்புக்கொண்டான் கிருஷ்ணன்.
'ஈ-பேயில் பொருள்களை வாங்கி விற்கலாம் என்றால், பங்குச் சந்தையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கலாம். பங்குச் சந்தையும் ஈ-பேயைப் போலவேதான் செயல்படுகிறது. பங்குச் சந்தை, நிறுனவங் களின் பங்குகளைக் கொண்டிருக்கிறது. அவற்றை மக்கள் வாங்கவும் விற்கவும் முடியும். அப்படி இல்லாவிட்டால், ஒவ்வொரு கம்பெனியாகத் தேடிப்போய், அவர்களிடமே பங்குகளை வாங்கவும் விற்கவும் நேரிடும். அது முடிகிற காரியமா என்ன!' விளக்கினாள் சந்திரா.
'வால்-மார்ட்டோ டார்கெட்டோ இல்லாமல் வீட்டு உபயோகப் பொருளை வாங்குவதைப் பற்றிக் கற்பனை செய்து பார்க்க முடியுமா!' தன் பங்குக்குக் கிருஷ்ணன் சொன்னான்.
'ரொம்பச் சரி. ஒரு கம்பெனி வங்கியிலே யிருந்து மட்டும்தான் பணம் பெறுகிறது என்றில்லை. பொது மக்களிட மிருந்து பணம் பெற வேண்டுமென்னும் போது, அது தன் பங்குகளைச் சந்தை மூலம் விற்கலாம்.'
'நான் சொல்றது சரியான்னு பாரு. ஈ-பே மாதிரிதான் பங்குச் சந்தையும் இருக்கு. அங்கே பங்குகளை வாங்கவும் விற்கவும் மக்கள் வர்றாங்க. ஒரு குறிப்பிட்ட பங்கின் விலைக்கு ஒப்புதல் ஏற்பட்டதும், அங்கே தானாகவே வணிகம் நடக்குது' என்று தொகுத்துச் சொன்னான் கிருஷ்ணன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் சந்திரா. 'ஆனால் அது ஈ-பேயிலே இருந்து எப்படி வித்தியாசப் படுதுன்னும் தெரிஞ்சுக்கணும். பங்குச் சந்தை பங்கின் விலையை நிர்ணயிப்பது கிடையாது. ஒரு பங்குக்கான தேவையும் வரத்தும் அதை நிர்ணயிக்கிறது. உனக்கு ஹோம் டெப்போவின் 100 பங்குகள் வேணும்னு வச்சுக்கலாம். அது நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ல கிடைக்குது. அதுதான் உலகின் மிகப் பிரபலமான பரிமாற்றத் தலம். வாங்குபவர் என்ற முறையில நீ போய் www.nyse.com-ல போய் நீ ஏலம் கேட்க முடியாது.
'இந்த பிஸினஸே வேறே. ஒரு பில்லியன் பங்குகளுக்கு மேலே தினமும் இங்கே விற்பனையாகிறது. அதனால NYSE தன்னுடன் நேரடியா எல்லாரையும் வணிகம் செய்ய அனுமதிக்க முடியாது. அங்கே அதற்கென்று கம்பெனி வாரியான முகவர்கள் இருக்காங்க. விற்பவர்களின் உயர் எதிர்பார்ப்பையும், வாங்குபவர்களின் குறைந்த விலை எதிர்பார்ப்பையும் அவர்கள் ஜோடி சேர்க்கிறார்கள்.
'அதாவது, பங்குச் சந்தையில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு கம்பெனியும் தனக்கென்று ஒரு சிறப்புப் பிரதிநிதியை அங்கே வைத்திருக்கும். அங்கே வரும் ஒவ்வொரு பங்கு விற்றல் வாங்கலுக்கான கோரிக்கையையும் ஒழுங்குபடுத்துவது அவரது வேலை. அவர்கள்தாம் NYSE-ல் நேரடியாக வர்த்தகம் செய்யலாம். இதுதானே நீ சொல்வது?' என்று கேட்டான் கிருஷ்ணன்.
'வாவ்! சீக்கிரம் புரிஞ்சுக்கிறயே. சில நிறுவனங்களுக்கு மட்டுமே பங்கு மார்க் கெட்டில் நேரடியாக வணிகம் செய்யும் உரிமை உண்டு. ஈ-பேயில சில பேர் மட்டுமே ஏலத்தில் பங்கு கொள்ளலாம் அப்படீன்னு ஒரு நிலைமையைக் கற்பனை பண்ணிக் கோயேன்' என்றாள் சந்திரா.
'சூப்பர். உனக்கு நிறையத் தெரியுது' என்று சிலாகித்தான் கிருஷ்ணன்.
குடித்த கா·பியை விட கிருஷ்ணனின் பாராட்டு அவளுக்கு உற்சாகம் தந்தது.
'சரி, ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், பங்குச் சந்தையில் நான் எப்படிப் பங்கு வர்த்தகம் செய்வது? அங்கேதான் தரகர்கள் வருகிறார்களா?' என்று கேட்டான் கிருஷ்ணன்.
'ரொம்பச் சரி. பங்குச் சந்தை வர்த்தகம் செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களுடன் புரோக்கர்களுக்கு விசேட உறவு உண்டு. எந்த முதலீட்டாளரும் தரகரை அணுகலாம். மெரில் லின்ச் மாதிரி தரகு நிறுவனங்களிடம் அவர் கணக்குத் தொடங்கலாம். www.scottrade.com அல்லது www.ameritrade.com போன்ற தள்ளுபடித் தரகு நிறுவனங்களுடன் தக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
'இப்படிக் கணக்குத் தொடங்கி, அதற்குப் பிறகு நீங்கள் பங்கு வர்த்தகத்துக்கான ஆணையைப் பிறப்பித்ததும், இதற்கான ஒரு சிறப்பு நிறுவனம் அதை நிறைவேற்றுகிறது. ஈ-பேக்கும், பங்குச் சந்தைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? விற்பவர் தரவரிசை மிகக் கீழாக இருந்தால் நீ அவரிடமிருந்து வாங்க மாட்டாய். உயர்வாக இருந்தால் அவரிடம் வாங்க விரும்புவாய். ஆனால், வாங்கிய பொருள் வந்து சேராவிட்டால் அவருடன் வாக்குவாதம் ஏற்படும்.
'ஆனால், தரகு நிறுவனம் வழியே பங்கு வாங்கும் போது, அதை விற்பவர் யாரென்றே உனக்குத் தெரியாது. எல்லாமே தானியங்கி முறையில் நடைபெறுகிறது. அதேபோல, நீ பங்கு விற்கப் போனால், விற்பது மட்டும்தான் உன் வேலை. நீ விரும்பும் விலையைத் தரத் தயாராக இருக்கும் நபரைப் பார்த்து அவரிடம் பங்கைக் கொடுப்பது சிறப்பு நிறுவனத்தின் வேலை. அது உனக்கான வேலையை எளிதாக்கிவிடுகிறது' என்று சொல்லிவிட்டுக் கடைசி வாய்க் கா·பியை வாயில் ஊற்றிக்கொண்டாள்.
'சந்திரா, உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை' என்று இழுத்தான் கிருஷ்ணன். எப்போது மூக்கை நுழைப்பது என்று விதிக்குத் தெரியாதா? உடனே கிருஷ்ணனின் செல்பேசி அடித்தது. 'மன்னிக்கணும்' என்று சொல்லிவிட்டு ·போனில் பேசினான். 'ஏய், நான் உன்னை அப்புறம் கூப்பிடட்டுமா?' என்று சொல்லிவிட்டு வைத்தான்.
சந்திராவைப் பார்த்து 'எனக்கு அவசரமாப் போகணும். உன் உதவிக்கு நன்றி. மறுபடியும் உன்னோடு பேசுகிறேன். பை!'
வெளியே போகிற வழியில் அவன் செல்பேசியில் ஓர் எண்ணை அமுக்கினான். சந்திரா தனது இருக்கையில் அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.
அவளுக்குப் பங்குப் பரிமாற்றத்தைப் பற்றித் தெரிந்திருக்கலாம்; ஆனால், கிருஷ்ணனின் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டதை அவள் உணரவில்லை. அவன் செல்பேசியில் கூப்பிட்டுத் தனது 'டேட்'டை மறுத்துவிட்டது அவள் காதில் விழ நியாயமில்லை. அவன்தான் சந்திராவிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்து விட்டானே!
ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம்: மதுரபாரதி |