அதுதான் அம்மா!
பள்ளியிலிருந்து ஆட்டோவில் வந்திறங்கிய ராகுல், ரேகா இருவருக்கும் அவர்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் வாட்ச்மேனிடம் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று, தின்பண்டங்களை நொறுக்கிக் கொண்டு அம்மா வரும்வரை தனியாகத்தான் இருப்பார்கள் இருவரும். ஆனால் அன்று வாட்ச்மேன் அவர்களிடம், "உங்கம்மா வீட்லதான் இருக்கிறாங்க" என்று சொன்னார். அது இன்ப அதிர்ச்சிதானே!

அம்மா, அம்மா என்று அழைத்தவாறே குதூகலமாக வீட்டினுள் நுழைந்தனர் இருவரும். "அம்மா இனிக்கு உனக்கு லீவு இல்லையே, எப்படி வீட்ல இருக்கே?"

"இனிமே அம்மா வீட்லதான் இருப்பேன். ஆபீஸ் போக மாட்டேன்."

"ஐயா... ஜாலி... ஜாலி... ஜாலி. இனிமே சாயந்தரம் வீட்டுகு வந்தா அம்மா வீட்ல இருப்பாங்களே" சந்தோஷத்துடன் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தனர் ராகுலும் ரேகாவும்.

"என்ன செல்வி நிரந்தரமா உன்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?" கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் ஜெகன். செல்வியின் கணவன்.

"மேற்கொண்டு என்ன செய்யலாம் செல்வி?"

"கொஞ்ச நாளைக்கு வீட்ல இருந்து நம்ப பிள்ளைங்களை கவனிச்சுக்கறேங்க. அவங்களாவது கொஞ்ச நாளைக்குச் சந்தோஷமா இருக்கட்டும். இன்னைக்குத் தாங்க உண்மையான சந்தோஷத்தை அவங்க முகத்துல பார்க்கிறேன்" என்றாள் செல்வி.

"அப்பா, நாங்க வீட்டுப் பாடங்களையெல்லாம் முடிச்சிட்டோம். வாங்கப்பா, எங்காவது ஜாலியா வெளியே போய்ட்டு வருவோம்" என்றனர் பிள்ளைகள்.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல ஆகுமா? குடும்பமே கிளம்பியது கடற்கரைக்கு.

இரவு. மனைவியிடம் மெல்லத் தனது அம்மாவைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான் ஜெகன்.

"செல்வி இப்ப நீ வீட்லதானே இருக்க. அம்மாவை வேணா நாம கொண்டுவந்து இங்க வச்சுக்கலாமா?"

"இல்லீங்க. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நம்ம பசங்கள் முழுசா நான் கவனிக்கணுங்க. அவங்கள பாட்டு க்ளாஸ், ஹிந்தி க்ளாஸ் அனுப்பணும். கூடப் போகணும், திரும்பக் கூட்டிக்கிட்டு வரணும். நாம இருக்குறது சின்ன ஃப்ளாட். அவங்க வந்தாங்கன்னா அவங்களை தனி ரூம்ல தங்க வைக்க முடியாது. அவங்களை வேளா வேளைக்கு என்னால சரியா கவனிச்சிக்கவும் முடியாது. இப்ப என்ன, அத்தை முதியோர் இல்லதுல சந்தோஷமாத்தானே இருக்காங்க. அப்பவோட கிராச்சுவிட்டி பணத்தையும் பென்ஷனையும் வாங்கிக்கிட்டு அங்க வசதியாத்தானே இருக்காங்க. அவங்க அங்கேயே இருக்கறதுதாங்க நமக்கும் நல்லது. அவங்களுக்கும் நல்லது."

செல்வியின் பதில் கேட்டு ஏதும் சொல்ல முடியாமல் மௌனத்தில் ஆழ்ந்தான் ஜெகன்.

ஒருமாதம் போயிருக்கும். ஒருநாள், வாட்டமாக வீடு திரும்பினான் ஜெகன். "எனக்கும் வேலை போய்விட்டது" என்றான்.

"இப்ப என்ன செல்வி செய்யுறது? நம்ம பசங்களையும் வசதியா வளத்துட்டோம். அவங்களுக்கு நம்ம கஷ்டம் தெரிய வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேட ஆரம்பிப்போம்" என்றான் சோகத்துடன்.

நாட்கள் ஓடின. செருப்புக்கள் தேய்ந்தன. உறவுகள் ஒதுங்கின. ஜெகன் கம்ப்யூட்டரே கதி என்று கிடந்தான். காலம்தான் கடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. வரவுக்கு ஒரு வழியும் இல்லை. என்ன செய்வதென்றே இருவருக்கும் புரியவில்லை.

"ஏங்க, நான் ஒரு யோசனை சொல்றேன். கேப்பீங்களா?" என்றாள் செல்வி ஒருநாள் திடீரென்று.

"ம். சொல்லு..."

"உங்க அம்மாவுக்கு பென்ஷன் வருது. அவங்க டெபாசிட்ல இருந்து மாதாமாதம் வட்டி வருது. எல்லாத்தையும் தானே வச்சிக்கிட்டு அனுபவிக்கிறாங்க. அம்மாவை நம்மகூட கூட்டி வந்து வச்சுக்கிட்டா, அந்தப் பணத்தை வச்சு நமது செலவுகளைச் சமாளிச்சிடலாம். யோசிச்சு சொல்லுங்க."

சற்று நேரம் யோசித்த ஜெகன் என்று சொன்னான்.

பணத்துக்காக எப்படி அம்மாவை அழைப்பது, அதை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? அவன் மனம் பலவாறாக யோசித்தது. மனம் பின்னோக்கிச் சென்றது.

எஞ்சினியரிங் கல்லூரியில் சேர அப்பாவால் முன்பணம் கட்ட முடியாதபோது தன் நகைகள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொடுத்தவள் அம்மா. கொடுமைக்காரப் பாட்டி படுக்கையில் விழுந்தபோது, அவள் தன்னைத் திட்டியது, படுத்தியது எல்லாவற்றையும் மறந்து மனம் கோணாமல் சேவை செய்தவள் அம்மா. பாட்டியும் அப்பாவும் எதற்கெடுத்தாலும் குறைகூறித் திட்டும்போது, அம்மா அடுக்களையில் கண்ணீருடன் நின்றபோது, "அம்மா, உனக்கு நான் இருக்கேன்மா, கவலைப்படாதே!" என்று தான் ஆறுதல் கூறியதெல்லாம் அவன் நினைவுக்கு வந்தது. இதையெல்லாம் எப்படி நான் மறந்தேன்! அம்மாவை எப்படியெல்லாமோ வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது...!

பழசையெல்லாம் நினைத்து நினைத்து இரவு முழுவதும் ஜெகனுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. எப்படி அம்மா முகத்தில் விழிப்பேன். மனைவி பேச்சையும் தட்ட முடியவில்லையே என்றெல்லாம் நினைத்து மருகிக் கொண்டிருந்தான். எப்போதோ தூங்கிப் போனான்.

"இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் மெதுவாத்தான் எழுந்திருப்பேன்" என்று சொல்லி ஜெகனைக் காப்பி போட வைக்கும் செல்வி, இன்றுமட்டும் ஏனோ அதையும் மறந்து முன்னாலேயே எழுந்திருந்து ஜெகனையும் எழுப்பிவிட்டாள்.

"இன்னிக்கு அம்மாவைப் பாக்க ஹோமுக்குப் போகணும். மறந்துட்டீங்களா?" என்று கேட்டு ஞாபகப்படுத்தினாள்.

அம்மா என்ன சொல்வாளோ, என்ன நினைப்பாளோ என்ற தயக்கத்துடன் மெல்ல முதியோர் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டான் ஜெகன். தயங்கித் தயங்கித் தன் நிலையை அவளுக்கு விளக்கினான்.

எதுவும் பேசாமல் அவனுடன் வரச் சம்மதித்தாள் அம்மா.

அதுதான் அம்மா!

கலா ஞானசம்பந்தம்

© TamilOnline.com