ஆறாம்திணை இணைய இதழில் எட்டாண்டுகளுக்கு முன்பு வாரந்தோறும் குறுக்கெழுத்துப் புதிரை அளிக்கத் தொடங்கிய போது 1999 ஏப்ரலில் வந்த பிரமாதி புத்தாண்டில் புதிரை வேறுவிதமாக அமைக்க எண்ணி ஒன்றும் சரியாக அமையவில்லை. அதற்குப் பதிலாக கனடா நாட்டுப் பேராசிரியர்கள் பசுபதி, அனந்த நாராயணன், மற்றும் அட்லாண்டா பெ. சந்திரசேகரன் இவர்கள் தூண்டுதலால், வெண்பாமேடை என்று தொடங்கினோம்.
தென்றலில் இந்த எண்ணம் சற்றே பலித்திருக்கிறது. இந்த சர்வஜித்து வருடப்பிறப்புக்கு குறள் வெண்பாவைப் புதிரில் ஓரிடத்தில் புகுத்தியிருக்கிறேன். வழக்கமான கு.புதிரின் சுருக்கம்சம் அதில் இல்லாவிடினும் ரசிக்க அதில் புதுமை(?) இருக்கிற தென்று நம்புகிறேன்.
மார்ச் புதிரில் உலக்கையை வளைக்கை போல் தோற்றமளிக்கவைப்பது "பூண்" என்று விடை வருமாறு அமைத்திருந்தேன். அது பற்றி நார்கிராஸ், ஜார்ஜியாவைச் சேர்ந்த லக்ஷ்மி ஷங்கர், கைத்தடிகளிலும் விரிசல் வராமலிருக்கப் பூண் பொருத்தப்படும் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவின் அப்பள நகரமான கல்லிடைக்குறிச்சியில் ஏகப்பட்ட உலக்கைகள் நடுவே பிறந்து வளர்ந்த குமார் ராமசுப்ரமணியமும் (நியூ ஜெர்ஸி) அதில் பூண்கள் பொருத்தம்தான் என்கிறார். "உலக்கை மாதிரி வளர்ந்திருக்கிறாயே, புத்தி வளரலையே" என்று ஆசிரியர்கள் திட்டும்போது மட்டும் அதிகமாகக் கேள்விப்பட்ட பொருளுக்கு இப்படி நற்சான்றிதழ்கள் கிடைப்பது இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com
குறுக்காக
3. தும்போடு வருவதால் சண்டைதான் (3)
5. மாடிழுக்கா வாகனம் மண்ணெண்ணெய் வேண்டாது கூடிளைக்க வேறுண்டோ கூறு (5)
6. பொல்லாதவன் உடலெல்லாம் பெயர்ச்சொல்தான் (2)
7. வஞ்சம் துன்பப் படுக (3)
8. உரத்த பேச்சை விவரிக்கும் நடுப் பக்கம் கையளவில் அடங்கும் (5)
11. கண்ணகியின் காலடியில் கல்லாய்க் கிடந்தவன்? (5)
12. மண்ணின் தேவி ராகமிழுக்க கண்ணிமைக்காதோர் பொழிவது (3)
14. தலையின் பின்பக்கம் பூவிருப்பதாகச் சொல்லப்படுகிறது (2)
16. புரட்டுவேலையைச் செய்யாத வணக்கத்திற்குரிய அடிகளுடைய... (5)
17. ராகத்தை அளிக்கும் வசதி மிகுந்த விவசாயியின் சொத்து (3)
நெடுக்காக
1. பெண்ணை போன்றது ஒன்று (6)
2. கைக்கு வளையல் இட்டதில் கண்ணழகைக் கூறும் (3)
3. ரூப சுந்தரி சாதம் செய், முக்கால் கிழவன் மேலே வருகிறான் (5)
4. பரியிடையொடிய மேதினி (2)
9. தை மாதத் தொடக்கத்தில் கந்தர் ஒளித்து வைத்த பாத்திரங்கள் (2, 4)
10. இலக்கியம் காதலைக் கூற இடையில் கத்தியோடு கட்டிப்பிடி! (5)
13. இசை ஈடு (3)
15. 17இல் வளர்க்கப்படுவது மேலே சென்றால் நல்ல விளைவு (2)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஏப்ரல் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
thendral@tamilonline.com. ஏப்ரல் 25க்குப் பிறகு, விடைகளை
www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
மார்ச் 2007 புதிர்மன்னர்கள்1. வைதீஸ்வரன் கணேசன், ஜியார்ஜியா
2. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமோண்ட், கலி.
3. லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை, மும்பை
புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
மார்ச் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்குறுக்காக: 5. வெள்ளைக்காரி 6. ருசி 7. அதட்டு 9. துச்சம் 10. உளுத்த 12. உடம்பு 13. பூண் 14. கஸாகிஸ்தான்
நெடுக்காக: 1. தேள் 2. முக்காடு 3. பரிந்து 4. அருணாசலம் 8. தள்ளு வண்டி 11. தடாகம் 12. உருகிய 15. தாதி
புதிர் விடைகள் அடுத்த மாத (மே 2007) இதழில் வெளிவரும்