புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
இருவேறு கலாசாரங்களினிடையே, தம் மொழிச்சூழலில் இருந்து வெகுதூரம் தள்ளி வாழ்பவர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என்கிற உறவுகள் மூலமோ, கலைகள் மூலமோ, அவ்வபோது தம் நாட்டிற்குச் செல்வதன் மூலமோ தம் தாய்மொழியை ஒரளவு அறிகிறார்கள். அவர்களைத் தவிர்த்துத் தமிழை இரண்டாம் மொழியாகவோ, அல்லது இம்மொழியை எவ்வகையிலும் அறிந்திராமல் தன் பெற்றோர்களுக்காகவோ மொழி கற்கவரும் மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் நம் மொழி சென்றடைய வேண்டும் என்கிற உணர்வில் தன்னார்வப் பயிற்றுனர்கள் தத்தம் கருத்துகளையும், பயிற்றுவிக்கப் பயன்படும் உத்திகளையும், பாடத் திட்டங்களையும், எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பதற்காக ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ ஒன்றைக் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2012 ஜூன் 8, 9, 10 தேதிகளில் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடத்த உள்ளது.

12 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றி வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், அயலகங்களின் மற்றத் தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்த இருக்கின்றது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடத்தப்படும். மாநாட்டின் ஆய்வரங்கக் குழு புலம்பெயர்ந்த சூழல்களில் தமிழ் பயிற்றுவிப்பது குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கின்றது. அவை கீழ்க்கண்ட 4 தலைப்புகளில் ஏதாவதொன்றைச் சார்ந்திருத்தல் வேண்டும்:

  • தமிழ் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில் நுட்பங்கள் (Tools, techniques and technology in Tamil education)
  • பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும் (Effective syllabus and curriculum)
  • தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாசாரத் தாக்கங்கள் (Art, social and cultural influences in Tamil education)
  • தமிழ்க் கல்விக்கான வலையமைப்பு உருவாக்கம் (Building a world Tamil education network)


கட்டுரைக்கான ஆய்வுச் சுருக்கங்களை செப்டம்பர் 1, 2011க்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுரைகளுக்கான விதிமுறைகளை www.tamilhl.org தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

தமிழ் மொழி கலைகளின் அறிமுகம் நம் குழந்தைகளுக்கு தேவை என்பதால் கரகம், காவடி, ஒயிலாட்டம் முதலிய கிராமிய நடனங்களும், செவ்வியல் நடனங்கள் மற்றும் சரித்திர, இலக்கியம் சார்ந்த நாடகங்களும் இம்மாநாட்டில் நடைபெறவுள்ளன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளிகளின் மூலம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும்.

உலகளாவிய தமிழறிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் யாவரும் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர். பார்வையாளர்களாய்ப் பங்கெடுக்கவும், தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படவும், விளம்பரதாரர்கள் (sponsors) மற்றும் பிறரையும் மாநாடு வரவேற்கிறது.

கலிபோர்னியா தமிழ் கழகம் (CTA)

© TamilOnline.com