பரிசுகள்
சாகித்ய அகாதமி விருது
வழமையான விருதுகள் தவிர, சாகித்ய அகாதமி, சிறந்த குழந்தை இலக்கியத்துக்குச் சென்ற ஆண்டுமுதல் ஒரு விருதை வழங்கி வருகிறது. முதல் ஆண்டில் கமலவேலன் எழுதிய நூலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்குப் புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய 'சோளக்கொல்லை பொம்மை' என்ற நூலுக்கு இவ்விருது கிடைத்துள்ளது. நவம்பர் 14ம் தேதி டில்லியில் நடபெறவிருக்கும் விழாவில், இந்த விருது வழங்கப்பட உள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை லெனின் தங்கப்பா எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம், குறும்பலாபேரியை சொந்த ஊராகக் கொண்ட இவர், 1959 முதல், புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

நாமக்கல் சின்னப்ப பாரதி விருகள்
நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கிறது. 2011ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் வவுனியூர் இரா. உதயணன் எழுதிய 'பனிநிலவு' முதல் பரிசுக்கு (ரூ. 50,000) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பரிசு ரூ.10,000 கீழ்கண்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) - சங்கானைச் சண்டியன்
நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) - மாத்தகரி
சை.பீர்முகமது (மலேசியா) - பெண்குதிரை
நடேசன் (ஆஸ்திரேலியா) - வண்ணத்திகுளம்
தெணியான் (இலங்கை) - ஒடுக்கப்பட்டவர்கள்
கே. விஜயன் (இலங்கை) - மனநதியின் சிறுஅலைகள்
சிவசுப்பிரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்
தனபாலசிங்கம் (இலங்கை) - ஊருக்கு நல்லது சொல்வேன்
கலைச்செல்வன் (இலங்கை) - மனிததர்மம்
உபாலி லீலாரத்னா (இலங்கை) - கு.சி.பாவின் சுரங்கம், தாகம் நாவல்களின் சிங்கள மொழியாக்கம்
புரவலர் ஹாசிம் உமர் (இலங்கை) - கொடைச்சிறப்பு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கீழ்கண்ட எழுத்தாளர்கள் சிறப்புப் பரிசு பெறுகின்றனர்.
ஆர்.எஸ். ஜேக்கப் - பனையண்ணன்
சுப்ரபாரதி மணியன் - சுப்ரபாரதி மணியன் கதைகள்
ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி
குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
மயிலை பாலு - தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனை
லேனா தமிழ்வாணன் - ஒரு பக்கக் கட்டுரை 500
வெண்ணிலா - நீரில் அலையும் முகம்
ஜீவபாரதி பூங்குருநல் அசோகன் - குமரமங்கலம் தியாக தீபங்கள்
தில்லி டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியன் - தமிழ்-இந்தி, இந்தி-தமிழ் மொழியாக்க வாழ்நாள் சாதனை
என். சிவப்பிரகாசம் - ஊழல் எதிர்ப்பு சேவை.

© TamilOnline.com