என் செடி உனக்கு, உன் செடி எனக்கு!
மே மாதம் டெட்ராய்ட்டிலுள்ள எனது இளைய மகள் ஸ்ரீமாதங்கி ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்தோம். ஒருநாள் மாலை தனது தோட்டத்தில் அதிகமாக உள்ள செடிகளைப் பதியன் போட்டுக்கொண்டு இருந்தாள். அந்த வாரம் சனிக் கிழமை காலை 9 மணிக்கு என்னையும் தன் சிநேகிதியையும் 'Livonia Garden Club' நடத்தும் 'Plant Sharing' நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சரியம்! மேஜைகளில் விதவிதமான பல்வேறு செடிகள் குறிப்புடன் வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் எடுத்துச் சென்ற செடிகளைக் குறிப்புடன் அங்கு வைத்துவிட்டு எங்களுக்குத் தேவையான வேறு செடிகளை எடுத்து வந்தோம். நான் விவரம் கேட்டதற்கு கோடைக்காலம் ஆரம்பிக்குமுன் இங்கு லிவோனியா தோட்டக் குழு இந்த செடிப் பகிர்தல் நிகழ்ச்சியை நடத்துவதாகவும், தங்களிடம் அதிகம் உள்ள செடிகளை இங்கு வைத்துவிட்டு, தமக்குத் தேவையான செடிகளை எடுத்துச் செல்வார்கள் என்றும் சொன்னாள். பல அரியவகைச் செடிகளும் இங்குக் கிடைக்கும் என்றாள். பிறகு சாக்ரமெண்டோவில் உள்ள எனது மூத்த மகள் ஸ்ரீவித்யா சாய் கிருஷ்ணன் வீட்டுக்குப் போய்விட்டு ஒரு மாதம் கழித்து டெட்ராய்ட் திரும்பினோம். சிறிய மகள் வீட்டில் கொடி ரோஜா (Creeper Rose) பூத்துக் குலுங்கியது. அது முந்தைய வருடம் செடிப் பரிமாற்றத்தில் கொண்டுவந்ததாம். எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவிலும் இப்படிச் செய்யலாமே என்று நினைத்துக் கொண்டேன்.

பத்மா மணியன்,
லிவோனியா, மிச்சிகன்

© TamilOnline.com