வெறுமையைத் தடுக்க...
அன்புள்ள சிநேகிதியே...

நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். இரண்டு பேரும் இங்கே வந்து ஒன்றாக MS படித்தோம். சின்னச் சின்ன விவாதங்கள் வருமே தவிர சீரியஸாக சண்டை போட்டுக் கொள்ளவில்லை. காதல் மயக்கத்தில் எனக்கு அவனுடைய negative points சீரியஸாகத் தெரியவில்லையோ என்று இப்போது நினைக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து வீடு வாங்கி மூன்று வருடம் நன்றாகத்தான் இருந்தோம். திடீரென்று அவனை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். சில மாதங்கள் அது தன்னை பாதிக்காதது போல காட்டிக் கொண்டான். எனக்கு நல்ல வருமானம் இருந்ததால் அவன் வேலையில்லா நிலைமை என்னையும் பாதிக்கவில்லை. எங்களுக்குக் குழந்தை ஏதும் இல்லை. ஆகவே நானும் சில மாதங்கள் விட்டுக் கொடுத்தேன்.

பிறகு திடீரென்று பார்த்தால் கிரெடிட் கார்டில் நிறைய charge பண்ணியிருந்தான். என்னிடம் கேட்காமல் ஏன் செய்தாய் என்று கேட்டதற்கு அவனுக்கு கோபம் வந்தது. அன்றிலிருந்து தேவையோ, தேவை யில்லையோ எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள்.

நான் சண்டை போட்டாலும் கேட்காமல் அவன் ஏதோ பிசினஸ் செய்து அதிலும் நஷ்டம். நானும் வெறுத்துப்போய் இருந்த வீட்டை விற்றுக் கடன்களை அடைத்து விட்டுத் தனியாக வந்துவிட்டேன். நாங்கள் பிரிந்து சரியாக 18 மாதங்கள் ஆகின்றன.

இப்போது என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. அவன் விவகாரத்து வேண்டும் என்று கேட்கிறான். அவனுடைய நடத்தையினால் அவனுடைய உறவினர் யாரும் அவனுக்கு ஆதரவாக இல்லை. ஒரு பக்கம் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் 'நான் என்ன தவறு செய்தேன்? I have to move on with my life with another person' என்று தோன்றுகிறது. ஆனால் யாரையும் மறுபடி date செய்ய ஆரம்பிக்கவில்லை. இவன் திருந்தி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் என் குடும்பத்தினர் 'அவன் என்றைக்குமே அப்படித்தான். நீ இந்த உறவிலிருந்து வெளியே வந்துவிடு. அவன் கண்டிப்பாக மாறமாட்டான்' என்கிறார்கள். 12 வருட இணைப்பு. என்னதான் கோபபட்டாலும், அவன் பேரில் உள்ளூரப் பாசம் வைத்திருக் கிறேன் என்று நினைக்கிறேன். அவன் நடத்தை எதுவும் பிடிக்கவில்லை. அவனை விடவும் மனசு இல்லை. வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது.

அன்புள்ள சிநேகிதியே...

நம்முடைய உணர்ச்சிகளோ, உணர்வுகளோ ஒரே நிறத்தில் இருந்து விட்டால் முடி வெடுப்பது சுலபம். ஆனால் அப்படி என்றுமே இருக்காது. இது கருப்பு - வேண்டாம்; இது வெள்ளை - பரவாயில்லை என்று இல்லை. சாம்பல் நிறத்தில் தான் நாம் பலவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 12 வருட உறவை physical ஆக முடித்துக் கொண்டு வருவதே சிரமம். மனது வேதனையைச் சுமந்துக் கொண்டே அந்த சந்தோஷ நாட்களை அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கும். உங்கள் 'அவனை'ப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரம் இருந்தால் எனக்கு analyse செய்வது சிறிது சுலபமாக இருந்திருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இளம் வயதிலேயே ஆரம்ப காலத்திலிருந்தே விட்டுக் கொடுத்துப் பழகிவிட்டீர்களா இல்லை உங்கள் கணவரின் நடத்தையின் மாறுதல் அவர் வேலை இழந்ததால் வந்ததா என்பது எனக்கு புரியவில்லை. 'இந்த 18 மாதப் பிரிவில் நீங்கள் இருவரும் சந்தித்து இருக்கிறீர்களா? உங்கள் கணவரின் உறவினருடன் உங்களுக்குத் தொடர்பு உண்டா?' என்பது போன்ற பல கேள்விகள் எனக்கு எழுகின்றன.

18 மாதம் தனியாக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் வெறுமை என்று எழுதியிருக் கிறீர்கள். எந்த திசையில், எப்படி வாழ்க்கை யைச் செலுத்துவது என்ற குழப்பம் இருக்கிறது. இளவயதில் ஆசையின் உந்து தலில் எடுக்கும் முடிவு சுலபம். இப்போது ஆராய்ந்து எடுக்க வேண்டிய முடிவு. உங்களுக்கு இன்னும் அதற்கு அவகாசம் தேவை. கசப்பு, வெறுப்பு, காதல், பரிதாபம் என்று உணர்ச்சிகள் மாறிமாறி மனதில் எடுக்கும் முடிவை அழித்துப் புதிதாக எழுதிக் கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில் சம்பவங்களின் கோர்வையில் ஓர் உணர்ச்சி மட்டும் மிகுந்து, மற்ற உணர்ச்சிகள் அடிதளத்துக்குப் போகும். அப்போது அந்த உணர்ச்சியின்படி நீங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவீர்கள். சில சமயம் உங்களை அறியாமலேகூட மெல்ல, மெல்ல திசை நகர்ந்து கொண்டு போய்க் கொண்டிருக்கும். வெறுமையும் மெல்ல விலகும்.

நீங்கள் படித்து உயர்ந்த பதவியில் இருப்பது உங்கள் பலம். உங்கள் குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருப்பது இன்னும் பலம். பிரிந்து, தனியாக வாழ்ந்து கொண்டிருப்பது உங்கள் மன திடத்தைக் காட்டுகிறது. அது ஒரு பலம். மனதில் பரிதாபம், பாசம் என்று சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனிதத் தன்மையைக் காட்டுகிறது. அதுவும் ஒரு பலம். இத்தனை பலத்தை வைத்துக் கொண்டு வெறுமைக்கு ஏன் உரம் போடவேண்டும்! எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருந்தால் சிந்திப்பதைத் தடுக்க முடியும். அதற்கு உதவி செய்கிறது உங்கள் பதவி. நீங்கள் ஆர்வம் கொண்ட கலையில் ஏதேனும் மனதைச் செலுத்தினால், அங்கே கொஞ்சம் நேரம் செல்லும். இப்போதைக்கு வெறுமை யைத் தடுக்கப் பாருங்கள். வழி தானாகப் பிறக்கவும், உங்கள் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக் கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com