அமரபுரி நாட்டை மன்னன் அமரசிம்மன் ஆண்டு வந்தான். திடீரென ஒருநாள் அந்நாட்டு அரசியின் முத்துமாலை ஒன்று களவு போய்விட்டது. அதைத் தேடி நாட்டின் பல இடங்களுக்கும் வீரர்களை அனுப்பினான் மன்னன். வீரர்கள் பல இடங்களிலும் அலைந்து திரிந்தனர். இறுதியில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனைக் கண்டனர். அவனருகே அரசியின் முத்துமாலை கிடந்தது. உடனே அவன்தான் அதைத் திருடியவன் என்றெண்ணி அவனைக் கைது செய்து கொண்டு போய் மன்னன்முன் நிறுத்தினார்.
கடுங்கோபம் கொண்ட மன்னன் உடனே அந்த வழிப்போக்கனைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அதைக் கேட்ட அந்த வழிப்போக்கன் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு வியப்புத் தாளவில்லை. "நீ செய்த குற்றத்திற்காக உனது உயிரே போகப் போகிறது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் சிரிக்கிறாயே?!" என்றான்.
அதற்கு அந்த மனிதன், "மன்னா எனக்கு சில வித்தைகள் தெரியும். அது யாருக்கும் பயன்படாமல் போகப்போவதை நினைத்துச் சிரித்தேன்" என்றான்.
"அது என்ன வித்தை?" என்றான் மன்னன் ஆவலுடன்.
"மன்னா, எனக்கு தங்கம் பயிரிடத் தெரியும். எப்படி வயலில் நெல்மணியை விதைத்தால் பல்கிப் பெருகிப் பயன் தருகிறதோ அதுபோலத் தங்கமும் பல்கிப் பெருகிப் பயன்தரும். முனிவர் ஒருவர் எனக்கு இந்த வித்தையை உபதேசித்தார்" என்றான்.
"ஓ. முதலில் அதை எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் காட்டு. நான் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் மன்னன்.
வழிப்போக்கனும் சம்மதித்தான். முதலில் நன்கு உழுத நிலத்தைத் தனக்குக் காட்டும்படிச் சொன்னான். அதில் விதைப்பதற்குத் தங்கத்தைக் கொண்டுவரச் சொன்னான். அதன்பின் அவன் மன்னனை நோக்கி, "மன்னா! உண்மையும், நேர்மையும் உள்ள, வாழ்வில் ஒருமுறைகூடத் திருடாத, பொய்யே சொல்லாத ஒருவர்தான் வயலில் தங்கத்தை விதைக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கம் கருகிப் போய்விடும். நான் உங்கள் முன் குற்றவாளியாக நிற்கிறேன். அதனால் என்னால் தங்கத்தை விதைக்க முடியாது. அதனால் உங்களைச் சேர்ந்த யாரையாவது விதைக்கச் சொல்லுங்கள்" என்றான்.
மன்னன் தனது மந்திரியை விதைக்கச் சொன்னான். மன்னனிடம் அடிக்கடி தவறான ஆலோசனை கூறும் மந்திரி, தங்கம் கருகிவிட்டால் தன் குட்டு அம்பலமாகிவிடுமே என பயந்தார். அதனால் நாசூக்காக மறுத்துவிட்டார். அடுத்து மன்னன் தளபதியை விதைக்கச் சொன்னான். அவனோ அடிக்கடி பொய்க்கணக்கு எழுதுபவன். அவனும் மறுத்தான். இப்படியே அவைப்புலவர் முதல் மகாராணிவரை எங்கே தங்கள் பொய்கள், தவறுகள் அம்பலமாகி விடுமோ என நினைத்துப் பயந்து தங்கத்தைப் பயிரிட மறுத்துவிட்டனர். இறுதியில் அனைவரும் மன்னனையே தங்கத்தை விதைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அடிக்கடி மகாராணியிடம் பொய் கூறும் வழக்கமுடைய மன்னனும் தங்கத்தை விதைப்பதற்கு பயந்தான். "இல்லை... என்னால் முடியவே முடியாது" என்று சொல்லி மறுத்தான்.
உடனே வழிப்போக்கன் சிரித்துக் கொண்டே, "மன்னா.... உங்களையும் சேர்த்து, உங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட நேர்மையானவர்கள் இல்லை என்பது இதன்மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியிருக்க, நடந்தது எதைப்பற்றியுமே விசாரிக்காமல் எனக்குத் தண்டனை விதிப்பது எந்த வகையில் நியாயம்?" என்றான்.
தன் தவறை உணர்ந்து கொண்ட மன்னனும், மனம் வருந்தி, முத்துமாலை எப்படி வந்தது என்று அந்த வழிப்போக்கனிடம் விசாரித்தான்.
அதற்கு வழிப்போக்கன், "மன்னா, ஒரு குரங்கு ஒன்று இந்த முத்து மாலையை என் அருகில் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போய்விட்டது. நீங்கள் அதுபற்றி ஏதும் விசாரிக்காமல் எனக்குத் தண்டனை அளித்ததால்தான் ‘எனக்குத் தங்கம் விளைவிக்கத் தெரியும்’ என்று பொய் சொன்னேன். என்னை மன்னிக்க வேண்டும்" என்றான்.
மன்னன் அவனை மன்னித்து, அவன் அறிவுத்திறனைப் பாராட்டிப் பரிசளித்து கௌரவித்தான்.
சுப்புத்தாத்தா |