விட்டலாபுரம்
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. தமிழகத்தில் பாண்டுரங்கனுக்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோயில் என்ற பெருமைக்கும் உரியது. 15ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. சென்னையிலிருந்து 85 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியே சென்றால், கல்பாக்கத்துக்குச் சற்று முன்னால் பிரதான சாலையிலிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் உள்ளது இக்கோவில்.

கிருஷ்ணதேவராயரின் சகோதரர் ராமராயர் ஒருமுறை பண்டரிபுரம் போயிருக்கிறார். அங்கே அவர் பாண்டுரங்கனைத் தரிசித்தபோது கோவிலின் அழகையும் பாண்டுரங்கனின் பொலிவையும் கண்டு தன்னுடைய ஊரில் இதேபோலப் பாண்டுரங்கனுக்குக் கோவில் கட்ட விரும்பினாராம். இறைவனையும் தான் கட்டும் கோவிலில் எழுந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தார். அசரீரியாக இறைவன் ஒரு நிபந்தனையோடு இணங்கினார். "நான் கோவில் கொண்டுள்ள இடத்தில் எவருக்கேனும் பாகவத அபசாரம் நேருமானால் அந்தக் கணமே அவ்விடத்தினின்றும் வெளியேறி விடுவேன்" என்பதுதான் நிபந்தனை.

மட்டற்ற மகிழ்ச்சியோடு ஊர் திரும்பிய ராமராயர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பியில் பாண்டுரங்கனுக்காக அழகான கோவில் ஒன்றை எழுப்பினார். பண்டரிபுரத்திலுள்ள கோயிலில் உள்ள பாண்டுரங்கனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த பானுதாசர் என்ற ஓர் அன்பர் அந்தக் கோயிலின் பாண்டுரங்கனைக் காணாமல் ஊர் ஊராகச் சென்று கடைசியில் ஹம்பி வந்தபோது அங்கே கண்டு அப்படியே தழுவிக்கொண்டார். இறைவன் தன் கழுத்து முத்து மாலையை வேண்டுமென்றே அவரது சட்டைப் பையில் விழுமாறு செய்தார். மறுநாள் கோவில் அர்ச்சகர் மாலை காணாததை ராமராயரிடம் கூற அவர் சோதனை இட்டதில் பானுதாசர் பிடிபட்டார். ஆனால் பாண்டுரங்கன் பானுதாசரின் பக்தியை உலகறியச் செய்ததுடன் பாகவத அபசாரம் நிகழ்ந்த காரணத்தால் நிபந்தனையின்படி வெளியேறிவிட்டார். விடிந்ததும் ராமராயர் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது அங்கு மூர்த்தி இல்லை! நிபந்தனைப்படி, பாகவத அபசாரம் காரணமாகத்தான் இறைவன் புறப்பட்டுவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் இன்றும் ஹம்பியில் சிதிலமடைந்த நிலையில் கோவில் மட்டுமே இடிபாடுகளோடு உள்ளது. கோவிலுக்குள் மூர்த்தி இல்லை.

பின்னர் தெற்கு நோக்கித் தமிழகம் வந்த ராமராயர் பாண்டுரங்கனுக்காக எத்தனை கோவில்களைக் கட்ட முடியுமோ அத்தனை கோவில்களைக் கட்டத் தொடங்கினாராம். அதில் முதன்முதலாகக் கட்டப்பட்டதுதான் விட்டலாபுரம் கோவில். இன்று பாண்டுரங்கனுக்குத் தமிழ்நாட்டில் நிறைய கோவில்கள் உள்ளன. ஆனால் முதல் கோவில் இதுதான். இந்தக் காரணத்தாலேயே இந்த இடத்துக்கும் விட்டலாபுரம் என்ற பெயர் வந்தது. தமிழ் நாட்டில் கோயில்களால் ஊருக்குப் பெயர் வந்த வரலாறு நிறைய உண்டு. நாச்சியார்கோயில். ஸ்ரீரங்கம், பண்டரிபுரம், சிதம்பரம் என்று பல ஊர்களைச் சொல்லலாம்.

கோவில் கட்டி முடிந்து 200 ஆண்டுகளுக்குப் பின் அந்நியர் படையெடுப்பு, இயற்கைச் சீற்றம் போன்ற ஏதோ காரணத்தால் மக்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது. அப்படிப் போனவர்கள் சிலை பத்திரமாக இருக்கும்பொருட்டுக் கோவிலருகில் இருந்த வைகாசி அம்மன் கோவில் குளத்திற்குள் போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். சகஜநிலை ஏற்பட்ட பின் மீண்டும் ஊர் திரும்பினார்கள். 75 ஆண்டுகளுக்குமுன் அந்த ஊரிலிருந்த முத்துச்செட்டியார் என்பவருடைய தந்தையின் கனவில் பண்டரிநாதன் தோன்றி "நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்தக் குளத்திலேயே இருந்து கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை காலம் இங்கேயே இருப்பது?" என்று கேட்டாராம். உடனே செட்டியார் குளத்தைத் தூர்வாரச் செய்து பார்த்தபோது பாண்டுரங்கன் விக்கிரகம் கிடைத்தது. கற்கோவில் கொஞ்சமும் சிதையவில்லை. ஆனால் நீண்டகாலம் மக்கள் நடமாட்டம் இல்லாததால் விஷஜந்துக்கள் கோவிலில் நிறைந்திருந்ததாகவும் அதனால் வெளியேயுள்ள கருடாழ்வார் மண்டபத்துக்கும் துவஜஸ்தம்பத்துக்கும் இடையே ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் விக்கிரகத்தை வைத்திருந்தார்களாம். பின்னால் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முயற்சியால் இன்றுள்ள நிலைக்குக் கோவில் பொலிவடைந்திருக்கின்றது.

வரலாற்றுக்குப் பயன்படும் குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுவதால் மத்திய அரசு இதனைத் தொல்லியல் துறையில் பதிவு செய்துள்ளது. பாண்டுரங்கன் விக்கிரகம் உள்ள சந்நிதி ஒன்றும் எதிரே கருடாழ்வான் சந்நிதியும் தவிர வேறு சந்நிதிகள் கிடையா. விழாக்கள் உற்சவங்கள் அரசு நிதியுதவி எதுவும் கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையிலும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் மற்றும் அன்பர்கள் மேற்பார்வையிலும் நித்திய வழிபாட்டுக் கைங்கரியங்கள் நடைபெற்று வருகின்றன. கோவிலைச் சுற்றி அழகான பூச்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.

மிக முக்கியமான ஒரு செய்தி. இக்கோவிலுக்கு வந்து விட்டலராயன்முன் அமர்ந்து ராமநாம தியானம் செய்கின்றவர்கள் தங்கள் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும், சஞ்சலங்கள் நீங்கி அமைதி கிட்டுவதாக நம்பிக்கை உள்ளது. பாண்டுரங்கனைத் தரிசித்து தியானம் செய்து சஞ்சலங்கள் தீர நீங்களும் ஒருமுறை விட்டலாபுரம் சென்று வரலாமே.

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com