பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா?
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர் (அகத்தியருடைய குறியீடு என்பதைச் சென்ற இதழில் கண்டோம்) அடி பணிந்து, மனிதருடைய மன இயல்பும் சிந்தனையோட்டமும் தனக்கு எளிதில் புரிவதையும், தான் 'கானப் பறவை கலகலெனும் ஓசையிலும் காற்று மரங்களிடைக் காட்டுமிசைகளிலும்' 'நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன்' என்று, இசையின்பால் தனக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்ட ஆச்சரியத்தையும், குயில், தன்னுடைய கீதமே இல்லாமல், உலகத்தின் எல்லா இயக்கங்களிலும் உண்டாகும் இயல்பான இசையையெல்லாம் கவனித்து, கேட்டு, கிரகித்து, ரசித்து மயங்கும் தன்மையையும் சொன்னது. அதற்கு விடையளித்த முனிவர், குயிலுடைய முற்பிறவிக் கதையைச் சொன்னார். சின்னக் குயிலி என்ற பெயருடன், 'வேடர் குலத்தலைவன் வீரமுருகன்' மகளாகப் பிறந்திருந்தாள். முருகன், தமிழ்க் கடவுளின் பெயர் என்பதையும், அவனுடைய மகள் என்ற காரணத்தால் குயில் என்பது தமிழைக் குறிக்கும் குறியீடாக இருக்க முடியும் என்பதைச் சென்ற முறை ஊகித்தோம்.

முற்பிறவியில் குரங்கனுக்கு நிச்சயிக்கப்பட்டு, 'காதலினால் அல்ல, கருணையால்' மாடனுக்கு மனைவியாக இசைந்து, இடைக்காலத்தில் சேரமான் இளவல் கானகத்துக்கு வந்த சமயத்தில் அவனிடம் தன் நெஞ்சைப் பறிகொடுத்ததையும், இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு கிடக்கும் நேரத்தில், மாடனும் குரங்கனும் அங்கே வந்து சேரமான் இளவலை வெட்டிக் கொன்றதையும்; சாகும் முன்னர் அவர்கள் இருவரையும் கொன்றபின்னர் 'இனியும் பிறவியுண்டு; இன்பமுண்டு' என்று சின்னக் குயிலிக்குத் தேறுதல் சொல்லிய வண்ணம் சேரமான் இளவல் உயிர் நீத்ததையும் கண்டோம்.

மேலும் சொன்னார் முனிவர், “நீ இந்தப் பிறவியிலும் வேடர்குலப் பெண்ணாக விந்தகிரிச் சாரலில் பிறந்தபோதிலும், சென்ற பிறவியில் செத்துத் தொலைத்த மாடனும் குரங்கனும் இப்போது பேய் வடிவில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். விதிவசத்தால், நீதான் சென்ற பிறவியில் சின்னக் குயிலியாக இருந்தாய் என்பதை இருவரும் கண்டுகொண்டார்கள். உன்னை இப்படியே விட்டுவிட்டால், நீ வளர்ந்து, சென்ற பிறவியில் நடந்ததைப் போல் எங்கே நீ உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மன்னனோடு சேர்ந்துவிடுவாயோ என்று இருவரும் எண்ணி, உன்னை மானிடப் பெண்ணுருவிலிருந்து, குயில் உருவமாக மாற்றிவிட்டார்கள். எனவேதான், உனக்கு மனிதர்களின் மொழி புரிகிறது; அவர்கள் மன ஓட்டங்களை, உள்நோக்கங்களை, சிந்தனை செல்லும் திசைகளையெல்லாம், மற்ற மானிடர்களைப் போலவே புரிந்துகொள்கிறாய்” என்று சொல்லி நிறுத்தினார் முனிவர்.

'உன்னுடைய மன்னவனும் எங்கேயும் போய்விடவில்லை. அவனும் இந்தப் பிறவியில் 'தொண்டை வளநாட்டில், ஆழிக் கரையில் (கடற்கரையில்) ஒரு பட்டினத்தில் மனிதனாகத் தோன்றி வளர்ந்து வருகிறான். (இந்தக் குறிப்பு, கடற்கரைக்கு அருகிலுள்ள புதுச்சேரியை உணர்த்துகிறது என்பதைச் சொல்லி்த் தெரியவேண்டியதில்லை. கவியே, பாடலின் தொடக்கத்தில் 'செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின் மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை' என்று இந்த முழு நாடகமும் நடைபெறும் களத்தை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறான்.) எனவே, நீங்கள் இருவரும் இந்தப் பிறப்பிலும் அருகருகேதான் இருக்கிறீர்கள்' என்று சொல்லிக்கொண்டு வருகையிலேயே குயில் இடைமறித்தது. 'இறந்துபோனவர்கள், இப்போது வாழ்பவர்களை பாதித்து, என்னுடைய உருவத்தையே மாற்றி அமைத்து, என் காதலனுக்கு நான் யார் என்று அடையாளம் காண இயலாமல் செய்துவிட்டார்கள் என்பது என் நெஞ்சைப் பதைப்புறச் செய்கிறது. அப்படியே ஒருவேளை நாங்கள் இருவரும் சந்தித்துவிட்டாலும், அதற்குமேல் எங்களிருவருக்குள்ளும் மீண்டும் காதல் பூத்தாலும், நாங்கள் திருமணம் செய்துகொள்வது எவ்வாறு? அவனோ மனித உருவில் இருக்கிறான். நானோ குயிலுருவில் இருக்கிறேன். அதற்குமேல், நாங்கள் இருவரும் சந்திக்கும் நேரத்தில், அந்தப் 'பழைய பேய்கள்' கோபமுற்று, எங்களிருவருக்கும் இடையில் புகுந்து, நாங்கள் ஒன்று கலப்பதைத் தடுத்துவிட்டால் என்ன செய்வது?' என்று குயில் கேட்கிறது.

'கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருவரும் சந்திப்பீர்கள்; காதலிப்பீர்கள். ஆனால், பண்டைய வினையால், இப்போது பேய்களாகத் திரிகின்ற மாடனும் குரங்கனும் மாயத்தோற்றங்கள் பலவற்றை உன் மன்னனுக்குக் காட்டி, உன்மீது ஐயத்தை உண்டுபண்ணச் செய்வார்கள்' என்று சிரித்தபடி சொல்கிறார் முனிவர். 'அப்புறம் என்னாகும்?' என்று குயில் காதல் வசப்பட்ட சிறு பெண்ணுக்கே உரிய இயல்புடன் தவிக்கிறது. பதைக்கிறது. முனிவரோ, கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிடடார்! 'நடக்கப் போவதையெல்லாம் நடக்கும்போது தெரிந்துகொள். சந்தி ஜபங்களைச் செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது' என்று அந்தநாள் திரைப்படப் பாடல் புத்தகங்களில் கதைச்சுருக்கம் சொல்லி 'விடையை வெள்ளித் திரையில் காண்க' என்று முடிப்பார்களே, அப்படி தடக்கென்று நிறுத்திவிட்டுக் காற்றில் கரைந்துபோனார் முனிவர்.

இதுவரையில், முனிவர் சொன்னவெல்லாம் நடந்துவிட்டன. தென்புதுவையில் வாழ்ந்திருந்த அந்த இளைஞனும், குயிலும் சந்தித்தாகிவிட்டது; குயிலின் கீதத்தில் இளைஞன் நெஞ்சம் பறிகொடுத்தான்; குயிலே தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இளைஞனையும் காதலில் ஆழ்த்திவிட்டது. இடைப்பட்ட காலத்தில், பழைய பேய்களான மாடனும் குரங்கனும் பொய்த்தோற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தி, இளைஞனைக் குழப்பியும் ஆகிவிட்டது. 'இதுதான் நடந்தது. இதை நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ அறியேன். நம்பினால் என் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் கையாலேயே என்னைக் கொன்று போடுங்கள்' என்றபடி, குயில், இளைஞனுடைய கைகளில் வந்து விழுந்தது. இளைஞன், குயில் படும்பாட்டைக் கண்டு மனம் சகியாமல் உருகினான். (அதுவும் காதற்குயிலியாயிற்றே!) கையிலே விழுந்த குயிலை அள்ளி முத்தமிட்டான். உடனே ஒரு மாயா உலகத்தை சிருஷ்டிக்கிறான் கவிஞன். 'விண்டுரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா' என்று தொடங்கி, தன் முத்தம் பட்டவுடனேயே குயில் தன் உருவத்தை இழந்து மிகச் சிறந்த அழகுடைய மானிடப்பெண் வடிவில், நிற்பதனை கவிதாவேசத்தின் உச்சத்தில் நின்று சொல்கிறான். அங்கேதான், குயில் யார் என்பதற்கான சாவியை பதுக்கி வைக்கிறான். அந்த அடிகளை அப்படியே தருகிறேன்.

..........................................................................ஓர்வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி யதனோடே யின்னமுதைத் தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதிவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

மத்தவங்களுக்கு நான் சொல்றது புரியுமோ புரியாதோ எனக்குத் தெரியாது. கொஞ்சம்போல படிச்சவங்களுக்கு நிச்சயம் புரியும். கவிதை என்ற கனியைப் பிழிந்து, அந்தக் கனிச் சாற்றோடு, பண் கூத்து என்ற இவற்றின் சாரம் எல்லாம் ஏற்றி, பழச்சாற்றின் இனிமை, பண், கூத்து இவற்றின் இனிமை எல்லாம் போதாது என்று, அமுதத்தையும் அதில் சேர்த்து, வெயிலில் காயவைத்தானாம் பிரமன். எந்த வெயிலில்? காதல் வெயிலில்! அப்படிக் காதல் வெயிலில் கெட்டியாகத் திரண்ட கட்டியைச் செதுக்கி, இந்தப் பெண்ணின் மேனியை வடித்தானாம்! இந்தச் சமயத்த்தில் உங்களுக்கு 'கட்டித் தங்கம் வெட்டியெடுத்து, காதலென்னும் சாறுபிழிந்து, தொட்டுத் தொட்டு சிற்பிகள் செய்த உருவமடா' என்ற கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தாலும் சரி; அல்லது, 'தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து ஒன்றாகக் கூட்டி, சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே..........இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டில் இறக்கி' என்றெல்லாம் வள்ளலார் சொல்லும் 'சுவைக்கட்டி' நினைவுக்கு வந்தாலும் சரி. எல்லாமே ஒத்த அளவு இனிமையானவைதாம். பாரதியும் கண்ணதாசனும் சொல்வது காதல் என்னும் வெயிலில் காய வைத்த கட்டியையும், காதல் என்னும் சாறு பிழிந்து உருவாக்கிய தங்கச் சிலையையும்தான். இல்லையா?

கதையில், காதலி தன் உண்மையான உருவை மீண்டும் அடைந்தாள். Snow White and the Seven Dwarfs கதையில் வருவதுபோல், இறந்ததுபோலக் கிடந்த பெண், இளவரசனுடைய முத்தத்தால் உயிரடைந்து எழுந்ததைப்போல், காதலி உருமாறி எழுந்தாள். இருவரும் ஒன்று கலந்தனர். சுபம். கதை முடிந்துவிட்டது.

இப்பத்தான் நமக்கு வேலை தொடங்குகிறது. நாம் அடையாளம் கண்டிருப்பது தென்பொதிகை முனிவர் என்பது அகத்தியரையும், குயில், தமிழையும், குறிப்பாகத் தமிழ்க் கவிதையையும் குறிக்கும் என்பது. மாடு, குரங்கு, அவை செய்த மாய விநோதங்கள், குயிலும் இளைஞனும் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதெல்லாம் மற்றப் பறவைகள் வந்து ஒலிக்கின்றனவோ அப்போதெல்லாம் இருவரும் பேசி மகிழ்வது நின்றுவிடும் தொடர்ச்சியான குறிப்பு என்று இன்ன பிற குறியீடுகள் விடுவிக்கப்பட வேண்டியனவையாக இருக்கின்றன. முக்கியமாக, 'காதலினால் இல்லை; கருணையினால் இஃதுரைத்தாய்' என்று குயிலைப் பற்றிச் சொல்லப்படும் வாசகம், பண்பாட்டு எல்லைகளை மீறுகிறதே, கருணைக்காக ஒருவனை மணம்புரிவதும் கட்டாயத்துக்காக இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்டச் சம்மதிப்பதும்; முந்தையவனுக்கு, 'அவனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், தாலியைக் கழற்றி அவர்களிடமே கொடுத்துவிட்டு, உன்னிடமே திரும்ப வந்துவிடுகிறேன்' என்று சொல்வதும், இடையில் தன் நெஞ்சத்தை உண்மையிலேயே கவர்பவனைச் சந்திக்க நேர்வதும், அவனிடம் மீளாக் காதல் கொள்வதும்...........ம்ம்? பண்பாட்டு எல்லைகள் எல்லாவற்றையுமே தகர்த்துவிட்டானா பாரதி? அவன் கண்ட பெண்மை இதுவா?

இல்லை. இந்தக் குறியீடுகளை அடையாளம் கண்டு பொருத்திப் பார்க்கவேண்டிய வேலை மீதமிருக்கிறது. தொடர்வோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com