பரலி சு. நெல்லையப்பர்
"தம்பி, உனக்கு ஹிந்தி, மராத்தி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷையில் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் - தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்? தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும். தம்பி - நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை...." என்றெல்லாம் தமிழைப்பற்றியும் தமிழின் மேன்மைபற்றியும் சிந்தித்து வருந்திக் கடிதம் எழுதியவர் மகாகவி பாரதி. அவரால் அவ்வாறு "தம்பி" என்று அன்போடு விளிக்கப்பட்டவர், பரலி சு. நெல்லையப்பர். பாரதியாரின் கவிதைகளை அச்சிட்டு வெளியிட்டு, பாமர மக்களிடமும் சென்று சேர்த்தவர்; மக்களிடையே சுதந்திரக் கனல் எழும்பக் காரணமாக இருந்தவர் நெல்லையப்பர். இவர், செப்டம்பர் 18, 1889 அன்று திருநெல்வேலியை அடுத்த பரலிக்கோட்டை என்ற சிற்றூரில், சுப்பிரமணியப் பிள்ளை-முத்துலட்சுமி அம்மையாருக்கு இரண்டாவது மகவாகத் தோன்றினார். பரலிக்கோட்டை திண்ணைப் பள்ளியில் துவக்கக் கல்வி படித்தார். இளவயதிலேயே கவி பாடும் ஆற்றல் அவருக்கு இருந்தது. தமது 11ம் வயதில் தன் ஊர் காளி அன்னை மீது 'காளி எட்டு' என்னும் பாடலைப் பாடி ஆசிரியர்களின் பாரட்டுதலைப் பெற்றார்.

சிறுவயதில் தாயை இழந்த நெல்லையப்பர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். நெல்லை இந்துக்கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். மூத்த சகோதரர் சொக்கலிங்கம் பிள்ளை வ.உ. சிதம்பரனாருக்கு மிக நெருங்கிய நண்பர். நாட்டுப்பற்று மிக்க அவர், சுப்ரமண்ய சிவாவால் "வந்தேமாதரம் பிள்ளை" என்று போற்றப்பட்டவர். ஆங்கிலேயரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனியைத் துவங்கினார். சொக்கலிங்கம் பிள்ளை, நெல்லையப்பர் அவரது இளைய சகோதரர் குழந்தைவேலன் பிள்ளை மூவரும் சுதேசி கப்பல் கம்பெனியில் சேர்ந்து பணியாற்றினர். அந்நிய ஆட்சிக்கு எதிராக சிவா, வ.உ.சி. ஆகியோர் பல கூட்டங்களை நடத்தினர். அதில் நெல்லையப்பரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். நெல்லையப்பருக்கு 18 வயதானபோது பாரதியாரைச் சந்தித்தார். அதுபற்றி அவர், "திரு. பிள்ளையவர்கள் வீட்டில் ஒருநாள் மாலையில் நான் பாரதியாரை முதல் முதலாகக் கண்டேன். அப்பொழுது நான் அவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. என்னுடன் நெடுநாள் பழகிய ஒருவர்போல அவர் எனது கையைப் பிடித்து இழுத்து உலாவுவதற்காக அழைத்துச் சென்றார். அன்றுதான் அவர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். ஊருக்குப் புதிது. வெளியே உலாவுவதற்காக என்னைத் துணையாக அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர் சென்னையில் நடந்த 'இந்தியா' பத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். கலகலப்பான பேச்சு. குதூகலமான நடை. குங்குமப்பொட்டு. ஓயாது பாடும் வாய். ரோஜா நிறப்பட்டு அங்கவஸ்திரம் இவற்றை நான் என்றும் மறக்க முடியாது" என்று குறித்திருக்கிறார். பாரதியிடம் இருந்த காந்தசக்தி நெல்லையப்பரை ஈர்த்தது. பின்னர் வ.உ.சி. வீட்டில் இருந்த சில துண்டுப் பிரசுரங்கள் மூலமும், 'சுதேசி கீதங்கள்' கைப்பிரசுரம் மூலமும் பாரதியின் கவியாற்றலை உணர்ந்து கொண்டார்.

வங்கத் தலைவர் விபின் சந்திரபாலின் விடுதலையை வரவேற்று வ.உ.சி. கூட்டம் நடத்தினார். அதில் அவரும், சுப்ரமண்ய சிவாவும் விடுதலை வேட்கையைத் தூண்டும்படிப் பேசியதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்தது. அதை எதிர்த்து நெல்லையப்பர் போராட்டம் நடத்த முயற்சித்ததால் ஆங்கிலேய அரசு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் வ.உ.சி.யைச் சந்தித்த பாரதியார் இந்தக் கைதுகளை விமர்சித்து இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதினார். ஒரு மாதத்துக்குப் பின் நெல்லையப்பர் விடுதலை செய்யப்பட்டார். சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுளும், சிவாவுக்கு 10 வருடக் கடுங்காவலும் விதிக்கப்பட்டது. சிறையில் செக்கிழுத்தும், கல் உடைத்தும் அவர்கள் பட்ட அல்லல்களைக் காணச் சகியாது இந்தியா இதழில் புனைபெயரில் கட்டுரை ஒன்றை எழுதினார் நெல்லையப்பர். அதுதான் அச்சில் வந்த அவரது முதல் படைப்பு. தொடர்ந்து வ.உ.சி.யின் உடைமைகளையும், சுதேசி கப்பல் கம்பெனியையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்நிய சக்திகளின் சதியால் அம்முயற்சி முழு வெற்றி பெறவில்லை.

புரட்சியாளர் நீலகண்ட பிரம்மசாரி நெல்லையப்பரைப் புதுவைக்கு அழைத்தார். பாரதியிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுடன், தாம் ஆசிரியராக இருந்த 'சூரியோதயம்' இதழில் துணையாசிரியர் வேலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அவ்விதழில் காத்திரமான பல கட்டுரைகளை எழுதினார் நெல்லையப்பர். தம் மனங்கவர்ந்த பாரதியுடன் நட்புக் கிடைத்தது மட்டுமல்லாமல் அவர்மூலம் ஆங்கிலேய அரசுக்குச் சவாலாக விளங்கிய வ.வே.சு. அய்யர், அரவிந்தர் போன்றோரது அறிமுகமும் நட்பும் கிடைத்தது. இந்நிலையில்'சூரியோதயம்' இதழ் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் அரவிந்தரின் 'கர்மயோகி' இதழில் சேர்ந்து புரட்சிகரமான பல கட்டுரைகளை எழுதினார் நெல்லையப்பர். அது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குட்பட்ட காலம். பாரதி, வ.வே.சு ஐயர், அரவிந்தர் போன்றோர் உளவுத் துறையினரால் ரகசியமாகக் கவனிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் உளவுத் துறையினருக்குத் தெரியாமல் பாரதியாரின் சுதேச கீதங்களைத் தொகுத்து நூலாக்கி, பல்லாயிரம் பிரதிகளாக வெளியிட்டார் நெல்லையப்பர். அது மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டியதுடன், பாரதி என்னும் அரும்பெரும் கவிஞரின் பாட்டுத் திறனை, நாட்டுப்பற்றை அறிந்து கொள்ளவும் உதவியது. அவற்றோடு பாரதியாரின் 'ஞானரதம்', 'கனவு' போன்ற நூல்களையும் சரிபார்த்து, பிழை திருத்தி, அழகாக வெளிவர நெல்லையப்பரே காரணமாக அமைந்தார். அவர் செய்த அரும்பணிகளுள் ஒன்று பாரதியார் பாடல்களை, அவர் வாழும் காலத்திலேயே தொகுத்து நூலாக வெளியிட்டதுதான்.

இந்நிலையில் கோவையில் அடைக்கப்பட்டிருந்த வ.உ.சி.க்குச் சில உதவிகள் தேவைப்பட்டன. அதற்காக நெல்லையப்பர் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆஷ் கொலை வழக்கு சார்பாக புரட்சியாளர்கள் பலர் தேடப்பட்டு வந்தனர். அவர்களுள் நெல்லையப்பரும் ஒருவர். ஆகவே அவர் மாறுவேடம் பூண்டு சிறைக்குச் சென்று பாரதி, வ.உ.சி.க்கு அனுப்பிய கவிதைகளை அவரிடம் சேர்ப்பித்தார். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது வ.உ.சி.யைச் சந்தித்து அவர் சொல்லும் தகவல்களை, செய்திகளை குறிப்பிட்ட நபரிடம் சேர்ப்பிக்கும் தூதுவராகவும் விளங்கி வந்தார். சிதம்பரனார் 1912ன் இறுதியில் விடுதலை ஆனார். சென்னைக்குச் சென்று சிலகாலம் தங்கினார். நெல்லையப்பரும் உடனிருந்து உதவினார். பின்னர் வ.உ.சி. தூத்துக்குடி சென்றுவிட, நெல்லையப்பர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கித் தமக்குத் தகுந்த வேலை ஒன்றைத் தேடினார். 1913ல் லோகோபகாரியில் துணையாசிரியர் வேலை கிடைத்தது. அதில் நல்ல கட்டுரைகளை எழுதினார். புதுவையில் தங்கியிருந்த பாரதியிடமிருந்து 'பெல்ஜியத்திற்கு வாழ்த்து' என்ற கவிதையை வாங்கி வெளியிட்டார். சுப்ரமண்ய சிவா நடத்தி வந்த 'ஞானபானு' இதழிலும் பாரதியின் கவிதைகள் வெளிவரக் காரணமாக அமைந்தார்.

பாரதியைத் தமிழர் துயர் போக்க வந்த ஒரு அவதார புருடனாகவே நெல்லையப்பர் கருதினார். பாரதியின் புகழைத் தமிழகம் எங்கும் பரப்ப ஆவல் கொண்ட அவர், நண்பர் கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து 'பாரதி' என்ற இதழை ஆரம்பித்தார். அவ்விதழில்தான், "பாரத தேசம் என்று..", "பாருக்குள்ளே நல்ல நாடு", "புதுமைப் பெண்", "தமிழ்மொழி வாழ்த்து", "செந்தமிழ்நாடு" ஆகிய பாடல்கள் வெளியாகின. லோகோபகாரி, பாரதி இதழ்களைத் தொடர்ந்து திரு.வி.க. நடத்தி வந்த தேசபக்தன் இதழின் துணையாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். அதிலும் தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை வெளியிட்டு மக்களை விடுதலை வேட்கையைத் தூண்டினார். பாரதியாரின் கண்ணன் பாட்டை நெல்லையப்பர் பதிப்பித்தபோது, அவரது அந்தப் பணியைப் பாராட்டி நூலுக்கு அழகான முன்னுரை அளித்தார் வ.வே.சு. ஐயர். தொடர்ந்து பாரதியின் நாட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவை வெளிவரவும் நெல்லையப்பர் கடுமையாக உழைத்தார். கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது உண்மையாயிற்று. பாரதியின் காலத்தில் அவரைப் போற்றிப் புரந்தவர்கள் யாருமில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே அவரது புகழ் எங்கும் பரவியது.

பாரதியின் பாடல்கள் திக்கெட்டும் பரவ வேண்டும் என்பதுதான் நெல்லையப்பரின் நோக்கமாக இருந்ததே தவிர, வியாபார நோக்கம் எதுவும் இல்லை. எனவே மிகக் குறைந்த விலையில், சாமான்ய மக்களும் வாங்கும் விலையில் பாரதி நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் 'தேசிய கீதங்கள்' என்ற தலைப்பில் நூல் பதிப்பித்து வெளியிட்டால் ஆங்கிலேய அரசு அதனைத் தடை செய்யும் என்பதால் 'நாட்டுப் பாட்டு' என்ற தலைப்பில் வெளியிட்டார். 1921ல் தேசபக்தன் இதழின் பொறுப்பாசிரியராக உயர்ந்தார். இந்நிலையில் தமது நூல்கள் வெளியிடுவது சம்பந்தமாகத் தம்மைக் கடையம் வந்து சந்திக்குமாறு நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதினார் பாரதி. நெல்லையப்பரும் கடையம் சென்று பாரதியைச் சந்தித்தார். 'பாஞ்சாலி சபதம்' உள்ளிட்ட நூல்களை வெளியிடுவதற்கான தமது ஆலோசனைகளைத் தெரிவித்தார். சில காலத்திற்குப் பின் சென்னை வந்த பாரதி, திருவல்லிக்கேணியில் துளசிங்கப் பெருமாள் கோயில் வீதியில் ஒரு வீட்டில் தங்கினார். 1921 செப்டம்பர் 11 அன்று உடல்நலக் குறைவுற்று பாரதி காலமானபோது அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர்களுள் நெல்லையப்பரும் ஒருவர்.

தொடர்ந்து கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து 'லோகோபகாரி' இதழைத் தாமே வாங்கி நடத்தலானார் நெல்லையப்பர். அதுவரை வேதாந்தச் செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அந்த இதழ், விடுதலைப் போர் முரசாக மாறியது. பாரதிமீது கொண்ட பற்றுக் காரணமாக பாரதியின் குயில்பாட்டு, பாரதி அறுபத்தாறு உட்படப் பல நூல்களைப் பதிப்பித்தார். அதோடு, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்காரம் போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1941ல் காந்திஜியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றதால் 'லோகோபகாரி'யின் வளர்ச்சியில் கவனம் செலுத்த நெல்லையப்பரால் இயலவில்லை. அதனால் சிறையிலிருந்து வந்ததும் அதனை வேறு ஒருவரிடம் விற்று விட்டார். ஆனால் அதை வாங்கியவரது வேண்டுகோளுக்கு இணங்க அதன் கௌரவ ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார். 'சிதம்பரனார் வரலாறு' என்னும் நூலுக்கு திரு.வி.க. முன்னுரை எழுதிச் சிறப்பித்தார். ஆத்ம சோதனை (ராஜாஜி), மாதர்கடமை (பி.வி. சுப்பையா), திருவாசகம் போன்ற நூல்களைப் பதிப்பித்ததுடன், தமிழ்த் திருமண முறை, உய்யும் வழி, நெல்லைத் தென்றல், ஸ்வர்ணலதா, மகாத்மா காந்திஜியின் இந்திய சுயராஜ்ஜியம், மகாத்மா காந்தியின் சகவழி, சிவானந்தர் உபதேசமாலை போன்ற பல நூல்களையும், பங்கிம் சந்திரர் எழுதிய ராதாராணி, ஜோடி மோதிரங்கள் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டார்.

நெல்லையப்பர் மிகுந்த சமூக அக்கறை உடையவர். ஏழை மக்கள் நலம்பெறும் வண்ணம் 'லோகோபகாரி மருத்துவமனை'யை நடத்தி வந்த அவர், கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் வேலையின்றித் தவித்தபோது கொழும்பு வீரகேசரி இதழில் அவர் வேலை பெறக் காரணமாக இருந்தார். வாசனுடன் கல்கிக்கு அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தது, எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணனை பத்திரிகையுலகிறகு அறிமுகப்படுத்தியது என்று நெல்லையப்பர் செய்த பணிகள் ஏராளம். பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்றும் தீவிரமாக உழைத்தார். அதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். அரசு அதனை ஏற்று, 1953ல் பாரதி பாடல்களை மக்கள் பதிப்பாக வெளியிட்டபோது, நெல்லையப்பர் அதன் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தார்.

எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பதிப்பாளராக, கவிஞராக விளங்கிய நெல்லையப்பர், திருமணம் செய்து கொள்ளவில்லை. பூங்கோதை என்ற பெண் மகவைத் தத்தெடுத்து வளர்த்த அவர், 1950ல் சிந்தாரிப்பேட்டையிலிருந்து குரோம்பேட்டைக்குத் தமது வாழ்விடத்தை மாற்றிக் கொண்டார். தாம் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' என்று பெயர் சூட்டியதுடன், அங்கு எழுப்பட்ட விநாயகர் கோயிலுக்கு 'பாரதி விநாயகர்' என்று பெயரிட்டு பாரதி புகழ் பரப்பினார். சைதாப்பேட்டையில் 'பாரதி சுராஜ்' தலைமையில் 'பாரதி கலைக்கழகம்' தோன்றுவதற்கு நெல்லையப்பரும் ஒரு காரணம். அரசு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவிக்கும் பொருட்டுத் தனக்குத் தானமாக வழங்கிய நிலத்தை, சில ஆண்டுகளுக்குப் பின் பள்ளி ஒன்று துவங்குவதற்காக அரசுக்கே திருப்பி வழங்கினார் நெல்லையப்பர். பரலி சு.நெல்லையப்பர் நகராட்சி துவக்கப் பள்ளி என்று பெயரிடப்பட்ட அப்பள்ளி, குறைவான மாணவர் சேர்க்கையைக் காரணம் காட்டிக் கடந்த ஆண்டு மூடப்பட்டுவிட்டது.

பாரதி புகழ் பரப்பியும் நாட்டு விடுதலை மற்றும் தேச நலனுக்காக உழைத்தும் வாழ்ந்த நெல்லையப்பருக்கு இறுதிக் காலத்தில் பார்வைக் குறைவு ஏற்பட்டது. மார்ச் 28, 1971 அன்று தமது 84ம் வயதில் அவர் காலமானார். அவர் மறைந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 28, 1993 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் நெல்லையப்பரின் உருவச் சிலையை சென்னை குரோம்பேட்டையில் திறந்து வைத்தார். நெல்லையப்பரின் அன்புக்குப் பாத்திரமானவரும், அவரால் 'தம்பி' என்று அன்போடு போற்றப்பட்டவருமான கவிஞர், எழுத்தாளர் எதிரொலி விசுவநாதன், பாரதி கலைக்கழகத்தின் தலைவர் பாரதி சுராஜ் உள்ளிட்ட அன்பர்கள் பாரதி-நெல்லையப்பர் புகழ் பரப்பி வருகின்றனர். பாரதி பெயர் உள்ளவரை அவரது 'தம்பி'யான நெல்லையப்பரின் புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

(தகவல் உதவி: எதிரொலி விசுவநாதன் எழுதிய 'பாரதியின் தம்பி'; அ.மகாதேவன் எழுதிய 'தியாக ஒளி பரலி சு. நெல்லையப்பர்')

பா.சு.ரமணன்

© TamilOnline.com