டாக்டர் ராஜன் நடராஜன்
புதுக்கோட்டையருகிலுள்ள முத்துக்காடு கிராமத்தில் பிறந்து புதுக்கோட்டை மற்றும் சென்னையில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் ஆய்வு முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு வந்தவர் டாக்டர். ராஜன் நடராஜன். ஐம்பது வயதினைச் சமீபத்தில் எட்டிய இவர் இன்று மேரிலாந்து மாநிலத்தின் 'டெபுடி செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்' (வெளியுறவுத்துறைத் துணைச் செயலர்) பதவியை எட்டியுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர். தென்றலுக்காக இவரோடு உரையாடினோம். அதிலிருந்து...

கே: எப்போது அமெரிக்கா வந்தீர்கள்?
##Caption##ப: நான் 1989ம் ஆண்டு அமெரிக்கா வந்திறங்கினேன். மிஷிகன் ஸ்டேட் யூனிவர்சிடியில் இரண்டாண்டுகள் Post-Doc செய்தேன். பின்னர் மிஷிகன் பயோடெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் விஞ்ஞானியாக வேலைக்குச் சேர்ந்தேன். 1999ல் மீண்டும் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றேன். 2003ல் எனது மனைவிக்கு மேரிலாந்தில் வேலை கிடைக்கவே நாங்கள் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தோம்.

கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: நாங்கள் நாலு பேர். நான், என் மனைவி டாக்டர். சாவித்ரி நடராஜன் மற்றும் மகன்கள் ராம், பாலா. ராம் 12வது வகுப்பிலும், பாலா 10ம் வகுப்பிலும் படிக்கிறார். எனது மனைவி முனைவர் பட்டம் பெற்றவர். மேரிலாந்தில் அமெரிக்க அரசாங்கத்தின் வேளாண் துறையில் விஞ்ஞானி.

கே: ஒரு விஞ்ஞானியாக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து...
ப: என் வாழ்க்கைப் பாதையில் அப்படி ஒரு திருப்பம் அமையும் என நான் நினைத்ததில்லை. நான் மிஷிகன் பயோடெக் கழகத்தில் விஞ்ஞானியாகத்தான் சேர்ந்தேன். நான் வேலை செய்த ஆய்வுமையம் ஒரு பயிற்சி மையமும் கூட. அங்கு நான் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதற்கான உரிமம் (patent) பெற்றேன். அதை நான் தொழில்ரீதியாக விற்பனை செய்ய முற்பட்டபோதுதான் நான் தொழில் செய்யும் திறனையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

அதனாலதான் MSUவில் எம்.பி.ஏ. படிச்சேன். பிறகு நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கினேன். அது சரி வரலே. சிறிய தொடக்கநிலைக் (Start-up) கம்பெனியில் உபதலைவராகச் சேர்ந்தேன். தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மிஷிகனில் நான் வேலையில் இருந்த நேரம் லேன்சிங் வட்டார சேம்பர் ஆஃப் காமர்சில் சேர்மன், பலவித சேம்பர்களில் போர்டு மெம்பர் என்றெல்லாம் பல்வேறு பதவிகள் வகித்ததால் வியாபாரம் மற்றும் மக்கள்தொடர்பில் நல்ல அனுபவம் ஏற்பட்டது.

இங்குள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கத்துடன் நட்புறவைப் பலப்படுத்தி அஸ்திவாரம் போட்டதால் பல பதவிகளை வகிக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் நான் எதையுமே திட்டமிட்டுச் செய்யவில்லை, எல்லாம் இறைவன் அருளால் தானாகவே நடந்தது. இதைக் கடவுள் ஆசிர்வாதம் என்றே சொல்ல வேண்டும்.

கே: உங்கள் கண்டுபிடிப்பு ஒன்றுக்குப் புத்தாக்க உரிமம் (patent) செய்திருக்கிறீர்கள், அது என்ன?
ப: தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனப் பொருட்கள் (Toxic Chemicals) பெரும்பாலும் தண்ணீரில் விடப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இயற்கையிலேயே இருக்கும் பேக்டீரியா மற்றும் இதர பொருட்களை ஒன்று சேர்த்து (Bacterial Consortium Microbial Clustar) நச்சேறிய குளம், குட்டை அல்லது ஏரியில் தூவினால் 6-8 மாதங்களில் தண்ணீரிலுள்ள மாசு நீங்கித் தண்ணீர் சுத்தமாகிவிடும். இதற்கே உரிமப் பட்டயம் வாங்கியிருக்கேன். இதை GE நிறுவனம் ஹட்ஸன் நதியில் பரிசோதனை செய்துள்ளது. என் மனைவி டாக்டர் சாவித்ரி வேளாண் துறையில் நான்கு உரிமங்கள் பெற்றிருக்கிறார் என்பதையும் இங்கு பெருமையோடு குறிப்பிடுகிறேன்.

கே: தொழில் முனைவோர் என்ற முறையில் உங்கள் சாதனைகள் என்ன?
ப: நான் எப்போதுமே வித்தியாசமான சிந்தனை உள்ளவன். முதலில் மிஷிகனில் நண்பர்களுடன் எவர்டெக் என்ற கம்பெனியை நிறுவினேன். பிறகு சிகாகோவில் நண்பர்களுடன் 'விஷூவல் பாஸிபிலிடி' (Visual Possiblity) என்ற கூட்டு நிறுவனம் தொடங்கினோம். இதில் மின்-கையேடு (E-Manual) செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தோம். பிறகு மேரிலாந்தில் எனது தொழில்துறை அனுபவங்களை மூலமாக வைத்துப் பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக விளங்கினேன்.

கே: மேரிலாந்து மக்களிடையே உங்கள் செல்வாக்கிற்குக் காரணம் என்ன?
ப: அமெரிக்காவிலுள்ள இந்தியர்களை அரசியலுக்கு இழுப்பது 20 வருடங்களுக்கு முன் ஒரு சவாலாக இருந்தது. இந்தியர்களை இங்கு வாக்களிக்க நான் பலமுறை அழைத்ததுண்டு. இதையே சவாலாக எடுத்து இந்தியர்கள் மற்றும் அமெரிக்க மக்களை இணைக்க நான் பலமுறை முற்பட்டுள்ளேன். இந்தியா விழாக்களுக்கு அமெரிக்கர்களை வரவழைப்பது தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு சக இந்தியர்களுடன் அமெரிக்க நண்பர்களின் இல்லங்களுக்குச் செல்வது போன்ற நட்புப் பாலங்களை உருவாக்கினேன். நான் மேரிலாந்து இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸில் தலைவராக இருந்தேன். இதில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் பெரிய தலைவர்களை, நிதி ஒதுக்கீடு செய்யும் அமெரிக்கர்களை அடையாளம் கண்டு அழைத்து வருவேன். Indians are hardworking, smart and entrepreneurial. பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் தொழில்சலுகைகள் என்னென்ன, நிதி ஒதுக்கீடு (Grant) எப்படி, எங்கு கிடைக்கும், அதற்கான அணுகுமுறை என்ன போன்றவற்றைத் தெரியப்படுத்துவது என்னுடைய வழக்கம். இவ்வாறு தொழிலதிபர்கள், தலைவர்களுடன் இணைய வைத்து அதன்மூலம் இந்தியர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதைத் தொழிலாக மேற்கொண்டேன்.

கே: 'புதிய திசைகளில் சிந்திப்பவர்' என்று உங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். உங்கள் தொழில்முறை சாதனைகளுக்கும் பொது வாழ்க்கையில் உயர்வுக்கும் அதுதான் காரணமா?
ப: கண்டிப்பாக. மேரிலாந்தின் கவர்னர் மேதகு மார்ட்டின் ஓ மாலி எனக்கு மிக நெருக்கமானவர். என்னை நன்கு ஊக்குவிப்பவர். என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது அவர் "வித்தியாசமான சிந்தனையுள்ளவர்" என்றே குறிப்பிடுவார். நான் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து திரும்பினேன். ஆளுநரை நான் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஒரு குழுவாகச் செய்து வருகிறோம்.

கே: எல்லோருமே உழைக்கிறார்கள். ஆனால் எல்லோருமே ஒரே அளவுக்கு முன்னுக்கு வருவதில்லையே, இது ஏன்?
ப: இது கடவுளின் செயல். இறைவனின் அருள் எனக்கு நிறையவே உண்டு என நான் நினைக்கிறேன். எப்பொழுதுமே சரியான நேரத்தில் சரியான இடத்தில் கடவுள் என்னை அமர்த்திவிடுவார். எனக்குக் கிடைத்துள்ள பதவி ஒரு வரலாறு காணாத பதவி, முழுக்க முழுக்கக் கடவுள் அருளால்தான்.

கே: மேரிலேந்தில் இந்திய-அமெரிக்க மக்களிடையே ஒரு புதிய சிகரத்தைத் தொட்டவர் நீங்கள். இதை எட்டிய வழியைத் தென்றல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
##Caption##ப: இந்தப் பதவி எனக்குப் புதியது, வரலாறு காணாத நியமனம். செயல்பாட்டில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அதே சமயம் எல்லோரையும் அரவணைத்துச் சமமாக நடத்த வேண்டும். நான் பொதுமக்கள் பணி செய்கிறேன். எனது மேலதிகாரிகள் தம் சார்பில் என்னைப் பல கூட்டங்களுக்கு அனுப்புவார்கள். அதை நான் பெரிய கவுரமாகக் கருதிச் செய்கிறேன்.

கே: மேரிலாந்து மாகாணத்தின் அயலுறவு மற்றும் கொள்கைக்கான செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இதில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
ப: படிப்புக்குப் பிறகு அலுவலக வாழ்க்கையில் முதல் 10 வருடங்கள் விஞ்ஞானியாகவும், அடுத்த 10 வருடங்கள் தொழிலதிபராகவும் பரிணமித்த நான், இப்போது பொதுஜன சேவையில் இறங்கியுள்ளேன். இந்தப் புதிய பொறுப்பு என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மக்களோடு பழகுவது, அவர்களை ஒருங்கிணைந்துச் செயல்பட வைப்பது ஆகியவை எனக்கு இயல்பாகவே வரும் செயல்கள். இதில் முழுமூச்சுடன் இறங்கியுள்ளேன். மேதகு ஆளுநர் மற்றும் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஆகியோரின் பிரதிநிதியாகச் செயல்படுவது எனது முதல் குறிக்கோள். அடுத்து மேரிலாந்தின் வெளியுறவுத் தொடர்பு அதிகாரியாக நான் விளங்கி வருகிறேன். உலக அரங்கில் மேரிலாந்து மாநிலத்தின் சமூகம், பொருளாதாரம், கலைத்துறை ஆகியவற்றின் பரிணாமங்களை வெளிப்படுத்தி, அதன் பெருமையைப் பரப்புவது என் இலக்காகும். மேரிலாந்து மாநிலத்துடன் இதர நாடுகளில் 'சிஸ்டர் ஸ்டேட் இண்டர்நேஷனல் புரோக்ராம்' என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதற்காகத் தற்போது ஒன்பது நாடுகளுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி வருகிறோம்.

குறிப்பாக, முதன்முறையாக இந்தியாவிலுள்ள சில மாநிலங்களுக்கும் மேரிலாந்துக்கும் இடையே சகோதர உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கலை, சமூகம், அறிவியல், மருத்துவம், கல்வி, பொருளாதாரம் ஆகிய பல பிரிவுகளில் இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கான வழியை விரிவுபடுத்தும் திட்டமாக இது வகுக்கப்பட்டுள்ளது.

கே: பொதுவாழ்வில் நீங்கள் எட்ட விரும்பும் இலக்கு என்ன?
ப: குறிப்பாக எந்த இலக்கையும் திட்டமிட்டுச் செயல்படவில்லை. மகிழ்ச்சியாக, நலமாக இருந்து, உண்மை, நேர்மையுடன் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, அதனால் கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறேன். நாம் வாழ்முறையை ஏற்படுத்திவிட்டால் அது தானாக வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறேன்.

கே: நீங்கள் 'இந்தோ-அமெரிக்கா ஃபார் ஒபாமா' என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கினீர்களே...
ப: ஆமாம். அதிகமான சதவீதம் சாமானிய இந்தியர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக எங்கள் கணிப்பு தெரிவிக்கிறது. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சிதான் இது. இன்று ஒபாமா எத்தனையோ இந்தியர்களைத் தமது அலுவலகத்தில் நியமித்துள்ளார். மீண்டும் தேர்தல் காலத்தில் இந்த முயற்சியைத் தொடருவோம்.

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் வீட்டில் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் இரண்டு கண்களாக பாவிக்கிறார் டாக்டர் நடராஜன். வீட்டில் எல்லோரும் தமிழில் மட்டுமே பேசுவார்களாம். வெள்ளிக்கிழமையன்று நேரத்தைக் குடும்பத்தில் மனைவி மக்களுடன் மட்டுமே செலவிடுவாராம். மற்ற எல்லா அமெரிக்கப் பெற்றோரையும் போல, தனது மகன்களை அவர்களின் விளையாட்டுப் பயிற்சிகளுக்குக் காரில் கூட்டிச் செல்வதில் மகிழ்ச்சி அடையும் சராசரித் தந்தைதான் இவர். "நம் சமுதாயத்தின் வருங்காலத் தலைமுறைக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்" என்கிறார் கண்கள் பளிச்சிட. அதன் ஆரம்பக் கால்தடம் உங்களுடையதாக இருக்கட்டும் என்று தென்றல் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி விடை பெறுகிறோம்.

உரையாடல்: காந்தி சுந்தர்

*****


"டாக்டர் நடராஜன் அவர்களை மேரிலாந்து மாநில வெளியுறவுத் துறையின் துணைச் செயலராகப் பதவி நியமனம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்னுடைய இந்த அரசாங்கத்தில் இம்மிக உயர்ந்த அரசபதவியில் அமரும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர்"

மார்ட்டின் ஓ மாலி,
மேரிலாந்து மாநில ஆளுநர்

*****


"நான் மேரிலாந்து-இந்தியா தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (ரவுண்ட் டேபிள்) தலைவராக இருந்தபோது, டாக்டர் நடராஜன் அவர்களை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவரைத் தொழில்துறை மற்றும் சமூகநல அடிப்படையில் அறிவேன். அவர் ஒரு தலைசிறந்த வெளியுறவுத்துறைத் துணைச் செயலராகத் திகழ்வார் என்று உறுதிபட நம்புகிறேன். மேரிலாந்து மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் அவர் ஆற்றி வரும் அரும்பணிகளுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்"

செனட்டர் ராப் காராஜியோலோ,
மேரிலாந்து செனட் பெரும்பான்மைத் தலைவர்

*****


"நம் மாநில ஆளுநர் மேதகு ஓ மாலி அவர்கள், டாக்டர் நடராஜன் அவர்களை வெளியுறவுத் துறையின் துணைச் செயலராக நியமனம் செய்தது குறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் நடராஜன் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் தலைசிறந்த தலைவர், சமூக ஆர்வலர் மற்றும் தொலைநோக்குச் சிந்தனையாளர். இந்திய அமெரிக்கர்களாகிய நாம் டாக்டர் நடராஜன் அவர்களுடைய ஆர்வத்தையும் வல்லமையையும் குறித்து மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம். வெளியுறவுத் துறைக்கு அவர் அர்ப்பணிக்கும் செயல் திறமையாலும், அரும் சேவையாலும் மேரிலாந்து மாநில மக்களாகிய நாம் அனைவரும் பெரும் பயனடைவோம் என்பது திண்ணம்"

அருணா மில்லர்,
மேரிலாந்து மாநில சட்டமன்றப் பிரதிநிதி (ஹவுஸ் டெலகேட்)

© TamilOnline.com