NRI நடன விழா 'குரு சிஷ்ய பரம்பரை'
அஞ்சலி பரத நாட்டியப் பள்ளி புலம்பெயர்ந்தோர் நடன விழா ஒன்றை 2011 ஜூன் 23 முதல்26 வரை சென்னையின் வெவ்வேறு அரங்குகளில் நடத்தியது. 'குரு சிஷ்ய பரம்பரை' என்ற பெயரில் நடந்த இந்த நான்கு நாள் விழாவைப் பள்ளியின் கலை இயக்குனர் ராதிகா கிரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மைலாப்பூர் நுண்கலைக் கழகத்தின் ஆதரவில் நடந்த இந்த விழாவை முன்னாள் தூர்தர்ஷன் இயக்குநர் நடராஜன் தலைமையில் குரு வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி விளக்கேற்றித் தொடங்கிவைத்தார். வழுவூர் மற்றும் கலாக்ஷேத்திரா பாணி நடனங்கள் விழாவில் இடம்பெற்றது சிறப்பு.

முதல் நாளன்று ராதிகா கிரியின் பரதநாட்டிய நிகழ்ச்சி 'பாரதீய வித்யா பவன்' அரங்கத்தில் நடைபெற்றது. இவரோடு சேர்ந்து குரு லக்ஷ்மண் ஆடிய 'மோகலாகிரி' என்ற நாட்டக்குறிஞ்சி வர்ணத்தில் ராதிகா வெங்கடேசப் பெருமான்மீது நாயகி கொண்டிருந்த மையலை பாவபூர்வமாக வெளிப்படுத்தினார். ஹரிப்ரசாத் பாடிய பெஹாக் ராக 'குருயது நந்தனா' என்ற அஷ்டபதிக்கு ஆடிய நடனம் அற்புதம்.

சங்கல்பா நடன அறக்கட்டளையின் (USA) குரு நிருபமா வைத்யநாதனும் மூத்த சிஷ்யர் ப்ராச்சி ராஜேயும் மறுநாள் தமது நிகழ்ச்சியை ஆர்.கே. சுவாமி அரங்கில் வழங்கினார்கள். 'சாதிஞ்சனே' என்ற பஞ்சரத்னக் கிருதிக்கு ப்ராச்சியின் பாதவேலை வெகு விறுவிறுப்பு.

மூன்றாம் நிகழ்ச்சியில் ஓமானிலிருந்து வந்திருந்த குரு பிரமிளா ரமேஷ் (நாட்யாஞ்சலி நடனப் பள்ளி, மஸ்கட்) மற்றும் குழுவினர் அதே அரங்கில் ஒரு மனங்கவர்ந்த நிகழ்ச்சியை 'முதாகராத்த மோதக'த்திலிருந்து தொடங்கி வழங்கினர்.

இறுதி நாளன்று பிரிட்டனின் உபாஸனா ஆர்ட்ஸ் பள்ளியின் குரு தீபா கணேஷ் குழுவினர் குரு அடையாறு லக்ஷ்மண் பயிற்றுவித்த மார்கத்தில் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சியை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வழங்கி மகிழ்வித்தனர்.

கடல்கடந்த நாடுகளில் இந்தியாவின் பெருமிதமான பரதநாட்டியம் எப்படி குரு சிஷ்ய பாரம்பரியத்தில் செழிக்கவும் தழைக்கவும் செய்கிறது என்பதைக் காட்டிய இந்த நிகழ்ச்சித் தொடரை ஏற்பாடு செய்த குரு ராதிகா கிரி பாராட்டுக்குரியவர்.

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மதுரபாரதி

© TamilOnline.com