ஜூன் 25, 2011 அன்று சைப்ரஸ் கல்லூரி வளாக அரங்கில் குரு டாக்டர். மாலினி கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யை நிமிஷா கணேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பெற்றோர் பாலசுப்பிரமணி கணேஷ், கீதா கணேஷ் ஆகியோர் மட்டுமல்லாமல், சகோதரர் நீரஜ் கணேஷும் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி தொடங்கியது. 'காயியே கணபதி' என்ற பிள்ளையார் துதிக்கு எவ்வாறு விநாயகர் யானை முகம் பெற்றார் என்ற கதையின் சித்திரிப்பை நிமிஷா அழகாகச் செய்தார். மேற்கத்திய இசையின் ரேகையோடு பாடப்பட்ட ஹம்சத்வனியில் அமைந்த ஸ்வராஞ்சலியின் தாளத்தில் டிரம்ஸும் சேர்ந்து கொள்ள, அதற்கேற்ற துடிப்போடு நிமிஷா ஆடியது வெகு அழகு. 'அயிகிரி நந்தினி' தோத்திரத்துக்கு துர்கா தேவி மகிஷனை அழித்த காட்சி ரௌத்திரத்தின் சிறப்பான வெளிப்பாடு. முருகன்மீது அமைந்த அடுத்த வர்ணம் மயில் நடனத்தோடு தொடங்கியது. வள்ளி-தெய்வானை ஆகிய தேவியரோடு கார்த்திகேயனுக்குத் திருமணம் நடந்த இந்தச் சம்பவச் சித்திரிப்பில் காவடி ஆட்டமும் இடம்பெற்றது பொருத்தமே.
இடைவேளைக்குப் பிறகு வந்த 'நடனமாடினார்' கிருதிக்கு ஆடலரசனின் அற்புத பிம்பங்களை நிமிஷா கண்முன் கொண்டு வந்தார். 'பார்த்தசாரதி' கிருதிக்கு கீதோபதேசக் காட்சி காணக் கிடைத்தது. சுமனேசரஜனி ராகத் தில்லானாவுக்கு நிமிஷா விறுவிறுப்பாகப் பதம்வைத்து ஆடினார். 'மதுபனுமே ராதிகா நாச்சி ரே' என்ற பிரபல இந்திப் பாடலுக்கு ராதை கடம்ப வனத்தில் நர்த்தனமிட்ட காட்சி விசேட ஒளி, ஒலி அமைப்பில் வழங்கப்பட்ட போது காண வந்தோர் கண்களில் பரவசக் கண்ணீர். இந்துஸ்தானி பாணியில் அமைந்த இந்தப் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடமுடியும் என்பது புதிய அனுபவம்.
அற்புதமான ஆடலமைப்பு, அசராத பயிற்சி, அசர வைத்த ஒப்பனை, ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவான அறிமுகம் ஆகியவை குருவின் திறமையான மேலாண்மையைக் காட்டின. குரு மாலினி கிருஷ்ணமூர்த்தி (நட்டுவாங்கம்), ஸ்ரீநிதி மட்டூர் (குரலிசை), ஹரி ரங்சுவாமி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி ராமமிஷ்ரா (புல்லாங்குழல்), ஆங்கி டபோர் (டிரம்ஸ்), பால் லிவிங்ஸ்டன் (சிதார்) ஆகியோரின் சிறப்பான பக்கம் அரங்கேற்றத்தை சோபிக்கச் செய்தது.
நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்க்க: perfectvideo.net
செய்திக் குறிப்பிலிருந்து |