FeTNA ஆண்டுவிழா
2011 ஜூலை 2 முதல் 4 வரையிலான நாட்களில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்ஸ்டன் நகரில் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஜூலை 1, வெள்ளிக்கிழமை அன்று கொடையளித்த தமிழார்வலர்களும் விருந்தினரும் கலந்து கொண்ட 'விருந்தினர் மாலை' நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் நாசர், கலைமாமணி கவிஞர் நா. முத்துகுமார், நகைச்சுவை நடிகர் சார்லி, வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார், புதுகை பூபாளம் குழுவினர், கோடைமழை வித்யா ஆகியோர் கொடையாளர்களுடன் கலந்துரையாடினர்.

ஜூலை இரண்டாம் நாளன்று விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவைத் துணைத்தலைவருமான முனை. தண்டபாணி குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்த, பேரவைத் தலைவர் முனை. பழனிசுந்தரம் விழாத் தலைமை ஏற்றுப் பேசினார்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்னும் தலைப்பில் நா. முத்துக்குமார் தலைமையிலான கவியரங்கம், 'தனித்தமிழே நனிசிறப்பு' எனும் தலைப்பில் தமிழறிஞர் துரை எழில் விழியன் அவர்களது உரை, புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி, சார்லியின் ஓரங்க நாடகம், கோடைமழை வித்யாவின் 'சிவகாமியின் சபதம்' நாட்டியநாடகம் முதலானவை இடம்பெற்றன.

பிற்பகலில், 'மேலைப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்' எனும் தலைப்பில் முனை. மு. இளங்கோவனின் உரை, 'நான் கடந்து வந்த பாதை' என்னும் தலைப்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சித்சபையீசன் அவர்களது உரை, 'தமிழ்த் திரைப்படங்கள்' என்னும் தலைப்பில் நாசரின் உரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிறைவாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசைக் கச்சேரி நடைபெற்றது.

இரண்டாம் நாள், திருக்குறள் மறைமொழி ஓதலுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. 'தமிழர் பண்பாட்டு ஆய்விதழ்' என்னும் தலைப்பில் முனை. பிரான்சிசு முத்துவின் உரை, பேரா. புனிதா ஏகாம்பரம் நடத்திய 'தமிழ்த்தேனீ' என்னும் மாணவர்க்கான நிகழ்ச்சி, நாஞ்சில் பீற்றர் வழங்கிய 'இலக்கிய வினாடி வினா', 'அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம்' அறிமுகம் செய்த முனை. அரசு செல்லையாவின் உரை, அப்துல் ஜப்பார் நடுவராக இருந்து நடத்திய பட்டிமண்டப நிகழ்ச்சி, 'தமிழின் இன்றைய நிலை' எனும் தலைப்பில் முனை. சு. பழனியப்பனின் உரை, சார்லி மற்றும் புதுகை பூபாளம் குழுவினர் இணைந்து நடத்திய நகைச்சுவை நாடகம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திண்டுக்கல் சக்தி குழுவினர் வழங்கிய தமிழரின் தனிச்சிறப்பு வாய்ந்த தப்பாட்டம் மிகச் சிறப்பு.

விழாவில், அகில உலக மனித உரிமை ஆர்வலர் கேரன் பார்க்கர் சிறப்பிக்கப்பட்டார். அவர் தமது உரையில் இலங்கையில் எவ்வாறெல்லாம் மனித உரிமைகளுக்கெதிரான பாதிப்புகள் இடம்பெற்றன என எடுத்துரைத்தார். அடுத்துப் பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு உருத்திரகுமாரன் விசுவநாதன், தமிழினத்தைக் காப்பது நம் கடமை எனக் குறிப்பிட்டு விரிவாகப் பேசியது முக்கிய நிகழ்வாக அமையப் பெற்றது.

பிரதான அரங்கில் விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற, இணை அரங்குகளில் இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி, உலகத்தமிழர் அமைப்பின் கருத்தரங்கம், அமெரிக்க தமிழ் அரசியற் செயலவையின் கூட்டம், முனை. சொர்ணம் சங்கர் நடத்திய தமிழ்மணம் பயிற்சிப் பட்டறை, பதிவர் பழமைபேசி நடத்திய பதிவர் சந்திப்பு, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கலந்துரையாடல் முதலான நிகழ்ச்சிகள் நடந்தேறின.

ஜூலை 4 அன்று, இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் முன்னாள் தலைவர் க. தில்லைக்குமரன் அறிமுகவுரையாற்றினார். முனை. பிரான்சிசு சவரிமுத்து பண்பாட்டு ஆய்விதழை அறிமுகம் செய்து பேசினார். சங்ககாலத் தமிழரின் வாழ்வியல் என்னும் தலைப்பில் முனை. இரா. பிரபாகரன் பேசினார். சங்ககாலம் பொற்காலமே என்று பேரா. புனிதா ஏகாம்பரம் நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். முனை. இளங்கோவன் சிலப்பதிகாரத்தில் இசை நுணுக்கம் எனும் தலைப்பில் இசைஞானத்தோடு பேசியது சிறப்பாக அமைந்தது. கவிஞர் நா. முத்துகுமார் திரைப்பாடல்கள் குறித்துப் பேசினார்.

முனை. சு. பழனியப்பன் பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் சங்ககாலப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு சிறந்த ஆய்வுச் சொற்பொழிவொன்றை வழங்கினார். சங்ககாலத் தமிழர் வாழ்வில் சாதியமைப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நகர்ச்சில்லுகள் மூலம் திறம்பட எடுத்துரைத்தார். தமிழ்த்திரையில் தமிழீழப் போராட்டம் எனும் தலைப்பில் படைப்பாற்றல் குறித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்து உரையாற்றினார் மூத்த திரைப்படக் கலைஞர் நாசர். துரை எழில் விழியன் 'இரந்தும் ஈத்துவக்கும் இன்பம்' என்னும் தலைப்பில் உரையாற்றினார். முடிவில், இணை ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான முனை. சுந்தர வடிவேலு நன்றி நவின்றார்.

பழமைபேசி

© TamilOnline.com