கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம்
ஜூலை 3, 2011 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வாழும், கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூட்டம் கூபர்டினோவில் உள்ள எச்.பி. எக்சிகியூடிவ் பிரீஃபிங் செண்டரில் நடைபெற்றது. இந்தக் கல்லூரி இந்தியாவின் மிகப் பழமையான கல்விக் கூடங்களில் ஒன்று. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பலர் இதில் கலந்துகொள்வது சாத்தியமாயிற்று. 1956 தொடங்கி 1996 காலகட்டத்தில் இங்கு பயின்ற 20 மாணவர்கள் இதில் சந்தித்துக் கொண்டனர். முன்னாள் தூதுவர் ஜி. பார்த்தசாரதி வரவேற்புரை வழங்க, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கே. ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார். இருவருமே இந்தக் கல்லூரிப் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிகுடாப் பகுதியின் கிருபாகரன் நரசிம்மன் வீடியோ கான்ஃபரன்சிங் வழியே குழு உரையாடல் ஒன்றில் பங்கேற்றார். எச்.பி.யின் சலீம் துரானி இதற்கான தொழில்நுட்ப உதவியைச் செய்தார். தற்போது இந்த முன்னாள் மாணவர் குழுவில் (The Bay Area CEG Alumni Group) 75 பேர் இருக்கிறார்கள். இதற்கென ஒரு யாஹூ மடற்குழுவும் உள்ளது. இதற்காக ஒரு ஃபேஸ்புக் குழுவையும் நடத்தி வரும் பாஸ்டனின் ஜே ஸ்ரீனிவாசன், இந்தக் குழு உரையாடலில் அங்கிருந்தே பங்கேற்றார்.

மீண்டும் ஜூலை 2012ல் அடுத்த சந்திப்பு நடத்துவதற்குள் அமெரிக்காவிலுள்ள எல்லா முன்னாள் மாணவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று இதன் அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com