நாட்யாஞ்சலியின் 'கதைகளும் காவியங்களும்'
ஜூலை 9, 2011 அன்று நாட்யாஞ்சலி நடனப் பள்ளி தனது ஆண்டு விழாவை 'அட்சய பாத்ரா' அமைப்புக்கு நிதி திரட்டும் விழாவாக, வால்நட்டில் உள்ள சோஃபியா பி. கிளார்க் அரங்கில் நடத்தியது. குரு டாக்டர். மாலினி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

விஷ்ணு தோடயமங்களத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஐந்து முதுநிலை மாணவியர் நுட்பமான ஜதிகளுடன் கூடிய இந்த நடனத்தை நேர்த்தியாக வழங்கினர். 'வெள்ளைத் தாமரை' பாடலுக்கு ஆடிய இளைய மாணவியர் சிறப்பாக அபிநயித்தனர். 'ராதா சமேதா கிருஷ்ணா'வுக்குப் பெரிய மாணவியருடன், குட்டிக் கிருஷ்ணர்கள் வந்து ஆடி, மனதைக் கவர்ந்தனர். சிவபெருமான் தனது ஜடாமுடியில் சந்திரனை தரித்தது, கஜாசுரனைக் கொன்று யானையுரி தரித்தது, அர்த்தநாரீஸ்வரக் கோலம் பூண்டது ஆகிய அரிய புராணக் கதைகள் 'சந்திரசேகரம்' என்ற தீட்சிதர் கிருதிக்கான நடனத்தில் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டன. அண்மையில் அரங்கேற்றம் கண்ட நிமிஷா கணேஷ் துர்கையைப் பற்றிய தனி நாட்டிய உருப்படி ஒன்றை ஆடினார்.

நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது பாரசீகக் கதை ஒன்று. இதற்காக, அரேபிய மாளிகைகள், பிரமிடுகள், ஸ்பிங்க்ஸ், பின்னணியில் கந்தர்வ லோகம் என்று மேடையே புதுக்கோலம் பூண்டுவிட்டது. அரசனை ஒரு பறவைக்கூட்டம் கந்தர்வலோகத்துக்குத் தூக்கிச் சொல்லும் காட்சி புதுமையாக இருந்தது. இதன் பின்னணியில் பறவைக் குரல்கள், சூறைக் காற்றின் ஒலி, மின்னல், மேகம் என்று ஒலியும் ஒளியும் பிரமிக்க வைத்தன. இந்திய அரசகுமாரியாக அபிநயா நாராயணன், பாரசீக அரசராகப் பூர்ணா வேணுகோபாலன், தேவதைகளின் அரசியாக நிமிஷா கணேஷ், தவிரப் பிற மாணவியர் தத்தமது பாத்திரங்களைச் செவ்வனே செய்தனர். இந்தியப் புராணமல்லாத ஒரு கதையை பரதநாட்டியத்தில் பிசிறில்லாமல் வழங்கிய இந்தப் புதுமையான படைப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

குரு மாலினி கிருஷ்ணமூர்த்தி (நட்டுவாங்கம்), ஸ்ரீநிதி மட்டூர் (குரலிசை), ஸ்ரீஹரி ரங்கசுவாமி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி ராமமிஷ்ரா ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்புக்கு உறுதுணையாக அமைந்திருந்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com