ஆகஸ்டு 2011: வாசகர் கடிதம்
ஜூலை மாதத் தென்றல் இதழில் வெளியான, டி.எம். ராஜகோபாலன் எழுதிய 'நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது' மிக உருக்கமான கதை. மிகைப்படுத்தாமல் யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. கதையைப் படித்த பின் நான் மிகவும் பாதிப்படைந்தேன். மன வேதனைப்பட்டேன். மொத்தத்தில் மனதைத் தொட்ட கதை.

சீனிவாசன் ராமநாதன்,
ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா

*****


நான் சென்னையில் வாழும் தமிழ்க் கவிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் உள்பட பத்து நூல்கள் எழுதியுள்ளேன். இந்திய அரசு மற்றும் இலக்கிய அமைப்புகளின் பரிசினைப் பெற்றுள்ளேன். தமிழகத்தின் பெரும்பாலான இதழகளில் - குறிப்பாக சிற்றிலக்கிய இதழ்களில் எழுதி வருகிறேன்.

செயின்ட் லூயிலுள்ள எனது மகனின் இல்லத்தில் நண்பர் ஜோ டேனியல் அவர்களின் மூலமாக 'தென்றலை'ப்பற்றி அறிந்து வியந்தேன். தென்றலின் தழுவலால் என் அமெரிக்க அனுபவத்தின் ஆனந்தம் கூடியது. தென்றலின் வளம் கண்டு மகிழ்கின்றேன். சம்பந்தப்பட்டவர்களின் திறம் கண்டு நெகிழ்கின்றேன்.

நான் உறுப்பினராக இருக்கும் 'உலகத் தமிழ் எழுத்தாளர்' சங்கத்தலைவர் டாக்டர் வாசவன் அவர்களுக்கு தென்றலைத் தூது விட்டிருக்கிறேன். தென்றலின் சுகம் திக்கெட்டும் பரவட்டும்.

ஜோசப் ராஜ் (ஜோரா),
மிசௌரி

*****


சில மாற்றங்கள் குறுநாவல் தொடர் எழுத்து நடை நன்றாக உள்ளது. நகைசுவையும் இழையோடுகிறது. இரண்டாம் அத்தியாயத்தின் முடிவில் ஆவலைத் தூண்டும் விதமாக விட்டிருப்பது தொடர்கதைக்கே உண்டான உத்தி. கதை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

சுமதி வி. (ஆன்லைனில்)

*****


ஜூலை 'தென்றல் பேசுகிறது' பகுதியில் "குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருவரும் நான் குற்றவாளியல்ல என்று நிரூபிக்க முற்படுவதை விட்டுவிட்டு 'குற்றம் சாட்டுபவன் யோக்கியமா?' என்று திசை திருப்புவதில் தமது சாமர்த்தியத்தைக் காட்டுகின்றனர்" என்ற வரி சராசரி இந்தியனின் மனக்குமுறலை எதிரொலித்தது. தமிழ்கூறும் நல்லுலகம் பெரிதும் அபிமானிக்கும் பேரறிஞர் 'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் அவர்களைப் பற்றிய கட்டுரை மிக அருமை. எழுபதுகளில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் உலகத் தமிழ் மகாநாட்டில் கலந்து கொள்ள கி.வா.ஜ. பாரீஸ் செல்கிறார் என்ற செய்தியைப் படித்துவிட்டு ஓர் அஞ்சலட்டையில் எனது மகிழ்வைத் தெரித்து 'திரு. கி.வா.ஜகந்நாதன், ஆசிரியர், கலைமகள், மதறாஸ்' என்ற விலாசத்துக்கு அனுப்பினேன். சில நாட்களில் தன்னுடைய லெட்டர்பேடில் தன் கைப்பட நன்றி பாராட்டி என்னுடைய பள்ளி முகவரிக்கு பதில் அனுப்பினார். பின்னாளில் எனது திருமணத்துக்கு வாழ்த்துக் கவிதை அனுப்பி எங்களை ஆசிர்வதித்த பெருந்தகை. பல்வேறு இலக்கிய-ஆன்மீகக் கூட்டங்களில் அவரது சொற்பொழிவை நேரில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நமது தென்றலில் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர் இல்லங்களில், கடைகளில் 'குமுதம்' இதழை ஒரு குடும்ப உறுப்பினராக அங்கம் வகிக்கச் செய்த பெருமை சேர்த்த முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரா.கி. ரங்கராஜன் அவர்களைப் பற்றிய கட்டுரை மூலம் அவரது வியக்கத்தக்க சாதனைகளை, பன்முக ஆற்றலை அறிய முடிந்தது.

மனிதர்களுடன் வாழ்வதைப் விட புத்தகங்களுடன் வாழ்க்கை நடத்துவதில் பேரின்பம் காணும் பல்லடம் மாணிக்கம் அவர்களின் புத்தகக் காதல் பிரமிக்க வைக்கிறது. காணும் நிலத்தையெல்லாம் தன் குடும்பத்துக்காகச் சேர்த்து வைக்கும் மனிதர்களுக்கிடையே, எட்டாயிரம் சதுர அடி நிலப்பரப்பில் புத்தகக் காப்பகம் அமைத்திருக்கும் பல்லடம் மாணிக்கம் அவர்கள் எனக்கு 'இன்றைய உ.வே.சாமிநாத ஐயராக' காட்சி தருகிறார். சாந்தியின் அழகான கட்டுரை மூலம் நியூ ஜெர்ஸி அஸ்வினி நாகப்பனின் பரதநாட்டிய நிகழ்வை நேரில் கண்டுகளித்த மகிழ்ச்சி.

சென்னிமலை சண்முகம்,
நியூ யார்க்

*****


தென்றல் ஜூலை இதழில் 'அன்புள்ள சிநேகிதியே' படித்து ஆனந்தப்பட்டேன். ஒரு மாத இதழில் வெளியாகும் அறிவுரைப் பகுதியில் இவ்வளவு அற்புதமான ஆலோசனையா! பயனுள்ள கருத்து சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. "சுதந்திரம் பாரத்தைக் குறைப்பதில்லை, மாறாக மனதில் ஒரு பெரிய சுமையை ஏற்றுகிறது" என்று பொருள்படும் உங்கள் கருத்துக்கு அட்சரலட்சம் கொடுக்கலாம். வழிதவறும் இளையவர்க்ளுக்குச் சொல்லப்படும் இந்த அறிவுரையைப் பற்றி ஒரு செயல்பட்டறையே நடத்தலாம். வாழ்த்துக்கள்.

விஜய திருவேங்கடம்,
பாஸ்டன், மசாசூஸட்ஸ்

© TamilOnline.com