சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இலங்கையின் சிறந்த தமிழாய்வாளராகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும், திறனாய்வாளரகவும் திகழ்ந்தார். உலகெங்கிலும் நடந்த பல மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டவர். பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை ஆழ்ந்த அறிவு கொண்டு விளங்கினார். 'தமிழில் இலக்கிய வரலாறு', 'நவீனத்துவம் பின்நவீனத்துவம்', 'இலக்கியத்தில் முற்போக்குவாதம்', 'தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும்' போன்ற இவரது நூல்கள் முக்கியமானவை. சிலகாலமாகவே நோயுற்றிருந்த அவர் மாரடைப்பால் இலங்கையில் காலமானார்.
|