நாயுண்ணியோ தோலுண்ணியோ!
வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் தோட்டவேலை, மலையேற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் சில மாவட்டங்களில் அதிகம் காணப்படும் உண்ணி நோய்கள் பற்றி அறிந்துகொள்வது நல்லது. நமது வீட்டு செல்லப் பிராணிகள் மூலமும் இந்த நோய் பரவக் கூடும். குறிப்பாக நாய்கள் மூலம். உண்ணிகள் கடிப்பதால் இந்த நோய்கள் ஏற்படும்.

உண்ணிகள் மூலம் பரவும் நோய்கள்
லைம் வியாதி (Lyme Disease) என்று சொல்லப்படும் மூட்டு வியாதி; கடுங்காய்ச்சல்; Rocky mountain spotted fever - ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் காய்ச்சல்கள்;
Erlichiosis, Babesiosis - ரத்த சோகை வகைகள்

உண்ணி வகைகள்
உண்ணிகளில் நாயுண்ணி, சருகுண்ணி, தவிட்டுண்ணி என்று பலவகைகள் உண்டு. ஒரு சில வகைகள் வடகிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் வேறு சில உண்ணிகள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகின்றன. இவை புல்வெளிகள் மற்றும் மரங்கள் அடங்கிய மழைப் பிரதேசங்கள், தோட்டங்கள் இவற்றில் மிகுதியாக இருக்கும். மனிதர், விலங்குகள், நாய் இவற்றைத் தாக்கும். மான் நடமாடும் இடங்களிலும் இந்த உண்ணிகள் இருக்கும்.

நோய் அறிகுறிகள்
லைம் வியாதி: இந்த நோய் வடகிழக்குப் பிரதேசங்களில் மிக அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக கனெக்டிகட் மாநிலத்திலும் அண்டை மாநிலங்களிலும் கோடைக் காலத்தில் பரவலாகக் காணப்படும். இந்த உண்ணிகள் கடிப்பதே பல சமயம் தெரிவதில்லை. ஒரு சிலரின் தோலில் இந்த உண்ணிகள் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்ட உண்ணிகள் 48 மணி நேரம் தோலில் இருக்குமானால் நோய் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த மான் வகை உண்ணிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். முதல் கட்டமாக, தோலில் சிவப்பான ஒரு தடிப்பு ஏற்படலாம். இந்த தடிப்பு சின்ன வட்டமாகவோ அல்லது பெரிய வட்டமாக உருமாறலாம். இது கண்போல நடுவில் வெள்ளையாகவும் ஓரங்களில் சிவப்பாகவும் இருக்கும்.

இந்தக் கட்டத்தில் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். இதற்கு நுண்ணுயிர்க் கிருமி நிவாரணி மூலம் தீர்வு வழங்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம். இந்த கட்டத்தில் மருந்து கொடுக்கத் தவறினால் பின்னர் மூ ட்டுகள் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். இருதயம் மற்றும் மூளை பாதிக்கப்படலாம். அப்போதும் மருந்துகள் குணப்படுத்தும் என்றபோதும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் நீண்ட நாட்களுக்கு தேவைப்படலாம்.

மலைக்காய்ச்சல்
மலைப்பிரதேசங்களில் போகும்போது காய்ச்சல் ஏற்பட்டால் கவனம் தேவை. இந்தவகைக் காய்ச்சல் அதிக உடல்வலி மற்றும் சோர்வை ஏற்படுத்தும். இந்த உண்ணிகளால் ஏற்படும் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சேரவேண்டி வரலாம். இதற்கும் உடனடியாக மருந்துகள் அளித்தால் பலன் கிடைக்கும்.

Erlichiosis, Babesiosis என்ற நோய்கள் ரத்த அணுக்களில் இந்த உண்ணிகளின் தாக்குவதால் ஏற்படும். இதனால் ரத்த சோகை ஏற்படலாம். நோய் உடனடியாக வெளிப்படாமல் பலவாரங்கள் அல்லது மாதங்களுக்கு மறைந்திருக்கலாம். ஒரு சிலருக்கு இரத்தம் ஏற்றும்போதும் இந்த வகை நோய் தொற்றலாம்.

உண்ணிகளைத் தவிர்க்கும் முறைகள்
வெளியில் வேலை செய்துவிட்டு வந்தபின் உடனடியாகக் குளிக்க வேண்டும். மலையேற்றம், சுற்றுலா சென்றாலும் வீட்டுக்கு வந்தவுடன் முழு உடலையும் உண்ணிகள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். கோடைக்கால சுற்றுலா போய்வரும் சிறாருக்கு தினமும் உடலைப் பரிசோதிக்க வேண்டும். உண்ணி இருப்பது தெரிந்தால் அதை உடனடியாக எடுக்க வேண்டும். முழுதுமாக வெளிவராமல் தலை மட்டும் மாட்டியிருந்தால், மருத்துவரிடம் போக வேண்டும். உண்ணி தாக்கி 24 முதல் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு விட்டால் மருந்து மாத்திரை தேவையில்லை. குறிப்பாக நாய் வளர்ப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மரு வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com