திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில் சென்னை திருவொற்றியூரிலும், கொடியுடை அம்மன் கோவில் திருமுல்லைவாயிலிலும் அமைந்துள்ளன. ஒரே நாளில் இவை அனைத்தையும் வழிபடுபவர்களுக்கு அனைத்து தோஷங்களும், பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
கயிலையில் சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது பார்வதி விளையாட்டாய் அவர் கண்களைப் பொத்த, அதனால் உலகம் இருளில் மூழ்கியது. முத்தொழில்களும் முடங்கிப் போயின. கோபம் கொண்ட சிவன், உன் சக்தி மூன்றாகப் பிரிந்து பூலோகத்தில் முடங்கட்டும் என்று பார்வதியைச் சாபமிட்டார். உமை மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க, "முழு நிலவில் என்னை நினைத்து நீ தவமிருந்தால் இச்சா, கிரியா, ஞான சக்திகள் மூன்றும் ஒன்றிணையும். பின்னர் நான் திருமணங்கீசனாக வந்து உன்னை ஆட்கொள்வேன்" என்றார். அதன்படி அம்மன் மூன்று சக்தி அம்சமாகப் பிரிந்து தவம் மேற்கொண்டாள் என்பது தலபுராணம்.
திருவுடையம்மன், மேலூர் செல்வந்தரின் பசு ஒன்று தினந்தோறும் காட்டுக்குள்ளே சிறிது தூரம் சென்றுவிட்டுப் பின்னர் தனது கன்றுக்குப் பால் கொடுத்து வந்தது. இதைக் கவனித்த செல்வந்தரும், வேலையாட்களும் பசுவைப் பின்தொடர்ந்தனர். பசு காட்டின் புதர் நடுவில் உயரமான ஒரு பகுதியில் நின்று பாலைப் பொழிய அதை ஒரு நாக சர்ப்பம் அருந்தியதை அவர்கள் பார்த்தார்கள். அருகில் சென்று பார்த்தால் அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. அப்பகுதியைச் சுத்தம் செய்து, சிறு ஆலயம் எழுப்பி அச்சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். பின்னர் மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் ஆலயம் பெரிதாக்கப்பட்டு, இறைவனுக்கு 'திருமணங்கீஸ்வரர்' எனப் பெயர்சூட்டி வழிபட்டமையை ஆலயக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி பல சிறப்பம்சங்களை உடையதாக உள்ளது. யோகப் பிரம்மா தாடி, மீசை, ருத்திராட்சத்துடன் காணப்படுகிறார். திருமணங்கீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் அம்பாள் திருவுடையம்மன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இச்சா சக்தி. ஒரே சிற்பி மூன்று சிலைகளை வடிவமைத்து அவற்றை மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயிலில் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகிறார்கள்.
வடிவுடையம்மன், திருவொற்றியூர் இவர் ஞான சக்தியாக, மிக கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். அப்பர் முதலிய நால்வராலும், பட்டினத்தார், ராமலிங்க அடிகளார் முதலானோராலும் பாடப்பட்ட ஆலயம். சோழ, பாண்டியர்கள் ஆலயத்தைச் செப்பனிட்டு, புதிதாக ராஜகோபுரம் அமைத்துப் பெரிதாக வடிவமைத்துள்ளனர். கடலலைகள் வந்து ஆலய வாசலில் ஒற்றிச் சென்றதால் இது ஒற்றியூர் ஆயிற்று. சுந்தரர்-சங்கிலி நாச்சியார் மணம் நடந்த தலம். இறைவன் பெயர் ஆதிபுரீஸ்வரர் மற்றும் புற்றிடம் கொண்டார். சென்னை நகரின் மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. பல்வேறு சிறப்புகளை உடைய திருத்தலம். 27 நட்சத்திரங்களும் இங்கு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளனர்.
கொடியுடை அம்மன், திருமுல்லைவாயில் கிரியா சக்தியின் அம்சம் இந்த அம்பாள். இறைவன் மாசிலாமணீஸ்வரர். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய திருக்குளம் உள்ளது. ஆலயம் செல்லும் வழியில் உள்ள பச்சையம்மனும் மிகப் பிரசித்தம். பிரம்மன், அர்ஜுனன், ராம, லட்சுமணர், லவ, குசன், இந்திரன், துர்வாச மகரிஷி ஆகியோர் வழிபட்ட தலம். சித்தர்கள் பிரதிஷ்டை செய்த பாதரசலிங்கம் வழிபடத் தகுந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட தொண்டை மன்னன் ஒருவன் அடர்ந்த முல்லைக் காட்டின் வழியே செல்லும் போது குதிரையின் கால் இடறியது. அதனால் சீற்றமுற்று கொடிகளை வெட்ட, அது ஒரு புதரில் பட்டு வாளிலிருந்து ரத்தம் கசிந்தது. மன்னன் திகைப்புற்று புதர்களை விலக்கிப் பார்த்தான். அங்கே இருந்த சுயம்பு லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மன்னன் கலங்கி மன்னிப்பு வேண்ட ஈசன் மாசிலாமணீஸ்வரராக அவனுக்குக் காட்சி அளித்தார். மகிழ்ந்த மன்னன் வெள்ளெருக்கினால் ஆன மிகப் பெரிய இரு தூண்களைக் கொண்டு கோயில் எழுப்பினான்.
ஒரு சமயம் மன்னனை எதிர்க்கப் பகை மன்னன் பெரும் படை திரட்டிக் கொண்டு வர, செய்வதறியாது திகைத்த மன்னன் ஈசனை வேண்ட ஈசன் நந்திகேஸ்வரரை படைத் தளபதியாக உடன் அனுப்ப, பகைவர்களை வென்று வாகை சூடினான் அவன். அதன் காரணமாக இத்தலத்தில் ஈசனை நோக்கி அல்லாமல் எதிர்ப்புறமாகத் திரும்பி இருக்கிறது நந்தி. ஆலயத்திற்கு இரு வாசல்கள் உண்டு. கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது. தெற்கு வாசலே உபயோகத்தில் உள்ளது. பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் இம்மூன்று தேவியரையும் ஒரே நாளில் அடுத்தடுத்து தரிசிப்பது விசேஷம்.
சீதா துரைராஜ்
திருத்தம்: ஜூலை, 2011 இதழில் மன்னார்குடி 108 திவ்ய தேசங்களில் ஒன்று என எழுதியிருந்தேன். அது அபிமானத் தலமே. குறிப்புகளைத் தொகுத்து எழுதும்போது தவறு நிகழ்ந்து விட்டது. இதனைச் சுட்டிக் காட்டிய வாசகர்கள் ஸ்ரீராம், விஜய திருவேங்கடம் ஆகியோருக்கு நன்றி. |
|