பேராசிரியர் நினைவுகள்: முன்பிறவிக் கதை
குயில் பாட்டின் மர்ம முடிச்சுகள் என்று இதுவரையில் நாம் பார்த்து வந்த அத்தனைக் குறிப்புகளையும் - ஒவ்வொரு புள்ளியையும் - ஒருங்கிணைக்கும் கோடாகக் குயிலின் பூர்வ ஜன்மக் கதை விளங்குகிறது. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க முயன்று, பரமான்மா, ஜீவான்மா, கைவல்ய நவநீதம் என்று ஒரே நோக்கில் ஆய்ந்தவர்கள் எல்லோருமே இந்தக் குறிப்பிட்ட இடத்தையும், குயில் பாடும் பத்துக் கண்ணிகளையும் சௌகரியமாக ஒதுக்கி விடுவார்கள். ஏனெனில், இந்தப் பரமான்மா ஜீவான்மா விளக்கத்துக்குள் பொருத்த முடியாத பகுதிகள் இவை. இங்கேதான் நாம் முன்னர் குறிப்பிட்ட Mistrust the obvious Watson என்று ஷெர்லக் ஹோம்ஸ் குறிப்பிடும் வாக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. எது வெளிப்படையாக, ஏதும் பொருளற்றதுபோல் தோன்றுகிறதோ அதற்குள்தான் விடை ஒளிந்துகிடக்கும் என்பது ஏதோ துப்பறியும் நாவல்களுக்கு மட்டுமல்லாமல், குயில் பாட்டுக்கும் பொருந்தி வரும் ஒன்றே.

சரி. இப்போது பூர்வ ஜன்மக் கதைக்கு வருவோம். இளைஞன் நான்காவது நாளில் குயிலால் மாஞ்சோலைக்கு அழைத்து வரப்பட்டான்; அங்கே அதை 'குரங்கிடமும் மாட்டிடமும் நடத்திக் காட்டிய நாடகத்தை என்னிடமும் மீண்டும் நடத்துவதற்காக இங்கே அழைத்துவந்தாய் போலும்' என்று சினம் காட்டி 'கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும், நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன்' என்று தன் மனநிலையை விவரித்துக் கொண்டிருக்கும்போது, 'கண்ணிலே பொய்நீர் கடகடனெத் தானூற்றப், பண்ணிசைபோல் இன்குரலால் பாவிஅது கூறிடுமால்' குயில் தன்னை இடைமறித்ததைச் சொல்லி, 'என்மேல் நீங்கள் குற்றம் சொல்லக் காரணம் உண்டு என்பதனை அறிவேன். ஆனாலும், உங்களைக் குற்றம் சொல்ல என்னிடத்தில் ஏதுமில்லை. ஆனால், குரங்கையும் மாட்டையும் நான் காதலி்த்து, அவற்றிடமும் காதல்மொழி பேசியதை நீர் கண்டதாக எண்ணுகிறீர். என்மேல் குற்றம் ஏதும் இல்லை. நான் சொல்வதை யார் நம்பிடுவார்கள்? நடந்த உண்மையை நடந்தவாறே உங்களிடம் சொல்கிறேன். இனிமேல் எல்லாம் விதிவசம். நீங்கள், நான் சொல்வதை ஏற்றுக்கொண்டு, என் காதலையும் ஏற்றுக்கொள்வதும், அல்லது என்னை நம்பாமல் புறக்கணித்துப் போய்விடுவதும் என் கையிலில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். உங்களை அவ்வாறு பிரிய நேர்ந்தால், நான் தீயில் விழுந்தேனும் அல்லது வேறு வகையிலேனும் உயிரை மாய்த்துக் கொள்வேன். ஆனால், உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன். நான் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் என்பால் கருணைகொண்டு கேட்டருள வேண்டும். அதன் பிறகு, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதமே. காதல் அருளவில்லையெனில், உங்களுடைய கையாலேயே என்னைக் கொன்றுவிடுங்கள்' என்று பலவிதமாய்க் குயில் பேச, மனமுருகிப் போகிறான் இளைஞன். குயில் சொல்கிறது.

'நான் குயிலாக இருந்தாலும், மானுடவர் பேசும் பேச்செல்லாம் எனக்குப் புரிகிறது. எனக்கும் மானுடர் மொழியில் சிந்திக்கவும் பேச முடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் இருக்கக்கூடும் என்ற ஐயம் எனக்கு நெடுநாள் இருந்ததுண்டு. ஒருநாள் இந்த வழியாக ஒரு முனிவர் வந்தார். யாரோ பெரியவர் வருகிறார் என்று அவர் பாதத்தில் வீழ்ந்தேன். அவரிடத்தில் என் ஐயத்தைக் கேட்டேன். அவர் சொல்லித்தான் எனக்கு நம் முற்பிறப்பில் நடந்ததெல்லாம் தெரிய வந்தது.' 'தவமுனிவர், யாரோ பெரியவர்' என்றெல்லாம் குயில் சொல்லிக் கொண்டு வந்தாலும், அதன் விவரிப்பின் இடையினிலே மிக முக்கியமான குறிப்பொன்று பொதிந்து கிடக்கிறது. முனிவரைத் தன் விவரிப்பின் இடையில் 'தென்பொதியை மாமுனிவர் செப்பினார்' (குயில் பாடல், கண்ணி 330) என்று குயில் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பு அகத்தியரைச் சுட்டுகிறது என்பதில் ஐயம் இருக்க இடமே இல்லை. மர்மச் சுழல் முடிச்சை அவிழ்ப்பதற்கான முதல் இழை நம் கையில் அகப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் இதை இரண்டாம் இழை என்றே கருத வேண்டும். ஏனெனில், முனிவர், குயிலுடைய முற்பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது, 'வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத் தலைவன் வீர முருகன் எனும் வேடன் மகளாகச் சேர வளநாட்டின் தென்புறத்தே ஓர் மலையில் வந்து பிறந்து வளர்ந்தாய் நீ' என்ற தொடங்குகிறார். தமிழ் மொழியின் தலைவன், முதல்வன், மூலப் பொருள் முருகன் என்பதே நம்முடைய பரந்த மரபிலக்கியத்தின் திரள் முழுமையிலும் குறிப்பிடப்படுகின்றான். ஆக, இப்போது, முருகன், அகத்தியர் என்ற இரண்டு இழைகள் நம் கையில் சிக்கியிருக்கின்றன. தொடர்வோம்.

குயில் தனது பூர்வ ஜன்மத்தில் வேடர் மகளாக இருந்த சமயத்தில் 'சின்னக் குயிலி' என்ற பெயரோடு வளர்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு முறைமாமன் இருந்தான். மாடன் என்று அவனுக்குப் பெயர். சின்னக் குயிலியைக் காதலித்து, அவளை மணமுடிக்க எண்ணி அன்றாடம், 'பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு, நித்தம் கொடுத்து, நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில்' சின்னக் குயிலி அவனை மாலையிட வாக்களித்தாள். இந்தச் சொல்லைத் தொடர்ந்து வரும் கண்ணியைத்தான் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். 'மையலினால் இல்லை; அவன் சால வருத்தம் சகிக்காமல் சொல்லிவிட்டாய்'. குயிலிக்கு மாடன்பால் காதல் இல்லை; ஆனாலும், அன்றாடம் அவன் வந்து இவளுக்காக உருகி நின்று அன்றாடம் வழிபட்டுப் போற்றித் துதித்து நிற்கும் அவஸ்தையைச் சகிக்க முடியாமல், 'சரி உன்னிஷ்டப்படியே ஆகட்டும்' என்று குயிலி, தனக்கு அவன்மேல் காதலில்லாவிட்டாலும், 'போயிட்டுப் போ' என்ற ரீதியில் அவனை மணமுடிக்கச் சம்மதிக்கிறாள்.

இதற்கிடையில் அங்கே இன்னொரு வேடர்குலத் தலைவன் மொட்டைப் புலியனின் மூத்த மகனான நெட்டைக் குரங்கன், சின்னக் குயிலியைப் பெண்கேட்டு வந்து, குயிலியின் தகப்பனைத் தன் அப்பனுடன் சந்தித்து, பெண் கேட்க, அவனும் சம்மதித்துவிட, நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, பன்னிரண்டு தினங்களுக்குப் பிறகு திருமணத்தை வைத்துக் கொள்வதாக வாக்களித்துவிட்டான். கவனியுங்கள். மாடனுடைய அன்றாடக் 'காதல் வழிபாட்டுத்' துன்பத்தைத் தாங்காமல் குயிலி அவனை மணக்கச் சம்மதித்திருக்கிறாள்; இடையில், நெட்டைக் குரங்கன், தன் அப்பனுடன் வந்து, அவள் அப்பனிடம் பெண்கேட்டு, நிச்சயதார்த்தம் நிகழ்த்தி முடித்துவிட்டான். குயிலியின் சம்மதம் கேட்கப்படவே இல்லை. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்து விட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்டுக் கோபமுற்ற மாடன் விரைந்து வந்து குயிலியிடம் 'நானா மொழிகூற' அவனைச் சமாதானப்படுத்தும் விதத்தில் குயிலி, 'சினம் தவிர்ப்பாய் மாடா! கடுமையினால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப்படி அவர் காவலிற்போய் வாழ்ந்தாலும், மாதம் ஒரு மூன்றில் மருமம் சிலசெய்து, பேதம் விளைவித்துப் பினனிங்கே வந்திடுவேன்; தாலிதனை மீட்டும் அவர் தங்களிடமே கொடுத்து, நாலிரண்டு மாதத்தே நாயகனாய் நின்றனையே பெற்றிடுவேன், நான் சொன்ன சொல் தவற மாட்டேன்' என்று சொல்கிறாள். கவி மீண்டுமொருமுறை வலியுறுத்திச் சொல்லி நமக்கு நினைவூட்டுகிறான், 'காதலினால் இல்லை; கருணையினால் இஃதுரைத்தாய்'.

ஆக, காதலினால் இல்லாமல், கருணையினால் திருமணத்துக்கு இசைந்தது மாடனிடம்; தன்னுடைய முடிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் வாழ்க்கைப்பட நிச்சயிக்கப்பட்டதோ குரங்கனிடம். இது இப்படி ஆயிற்றா? அடுத்த ஸ்ட்ரோக் அடிக்கிறான் கவி. நிச்சயதார்த்தமும், மாடனிடம் வாக்குறுதியும் முடிந்ததன்பின், அந்தக் காட்டுக்குள் சேரமானுடைய மகன்--இளவரசன்--வேட்டைக்கு வருகிறான். அங்கே குயிலி தோழியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். பார்த்த பார்வையிலே இருவரும் காதல் வசப்படுகின்றனர். (இங்கே, 'கருணையினால் அன்று, காதலினால்' என்று கவி சொல்லாவிட்டாலும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.) 'இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்' என்று ராமனும் சீதையும் காதல்கொண்ட கதையைக் கம்பன் வர்ணிப்பதை நினைவூட்டும் வண்ணமாக 'நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்' என்று கவி ஒரு குறிப்பைச் சேர்க்கிறான். சேரமான் இளவரசன், குயிலியை மணக்க விரும்புகிறான். குயிலி தயங்குகிறாள். 'உங்களைப் போன்ற அரசர்கள் அரண்மனையில் ஆயிரமாயிரம் பெண்கள் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகளாக இருக்கும் செய்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, என்னைக் காட்டிலும் பலமடங்கு சிறந்தவர்களான அத்தகைய பெண்டிரோடு வாழ்வீர். 'பத்தினியாய் வாழ்வதல்லால், பார்வேந்தர் தாம் எனினும் நத்தி விலைமகளாய் நாங்கள் குடிபோவதில்லை'. எனவே, ஐயா! தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்... தோழியர் எல்லோரும் இந்த நேரம்பார்த்து என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்களே! என்ன செய்வேன் என்று குயிலி பேசிக்கொண்டிருக்கும்போதே, அவளுடைய நெஞ்சம் தன்பால் காதலில் வீழ்ந்துவிட்டதை 'விழிக் குறிப்பினால் அறிந்து, பக்கத்தில் வந்து பளிச்சென்றுனது கன்னம் செக்கச் சிவக்க முத்தமிட்டான். சினம் காட்டி, நீ விலகிச் சென்றாய் - நெறியேது காமியர்க்கே! தாவிநினை வந்து தழுவினான் மார்பிறுக.' இந்த இடத்திலே உங்களுக்கு, 'மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்புசெய்வோம். காத்திருப்பேனோடீ! இதுபார் கன்னத்து முத்தமொன்று' என்ற கண்ணன் பாடல்கள் (கண்ணன் - என் காந்தன்) நினைவுக்கு வரவேண்டுமே!

இப்படி, தன் வசமிழந்து, சேரமான் இளவலின் தழுவலில் அகப்பட்டு, உள்ளமெல்லாம் காதல் கனிந்து, முதன்முறையாகக் காதலை நெஞ்சில் உணர்ந்து, அவனுடைய முத்தத்தில் குயிலி தன்னை மறந்திருக்கும் நேரத்தில் ஒன்று நடந்தது....

நிச்சயதார்த்தம் செய்த நெட்டைக் குரங்கனுக்கு அவசரம் பொறுக்காமல் குயிலியைத் திருமண நாளுக்கு முன்னரேயே சந்திக்கக் கிளம்பி வந்துவிடுகிறான். குயிலி, காட்டுக்குள் தோழியருடன் விளையாடச் சென்றிருப்பதை அறிந்து, அங்கே தொடர்கிறான். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மாடனும், குரங்கன் அறியாமல் அவனைப் பின்தொடர்ந்து வருகிறான். இருவரும் வந்து சேரும் அதே வினாடியில், சேரமான் இளவலின் தழுவலில் சின்னக் குயிலி கட்டுண்டு கிடக்கிறாள். இருவருக்கும் சினம் பொங்குகிறது. வாளை உருவி, சேரமான் இளவலின் முதுகில் வெட்டினார்கள். 'வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே'. வெகுவேகமாகத் தன் வாளை உருவிய வேந்தன் மகன் வீச்சிரண்டில் மாடனையும் குரங்கனையும் வீழ்த்தினான். பிறகு, 'பெண்ணே! இனிநான் பிழைத்திடேன். சில கணத்தே ஆவி துறப்பேன். அழுதோர் பயனில்லை. சாவிலே துன்பமில்லை தையலே! இன்னமுநாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக் கண்டு காமுறுவேன்; நினைக் கலந்து இனிது வாழ்ந்திடுவேன். இன்னும் பிறவியுண்டு மாதரசே! இன்பமுண்டு' என்றபடி உயிர் துறந்தான்.

மிகமிக அழகான, நேர்த்தியான விவரிப்பை, இடநெருக்கடி காரணமாக நான் மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். குயில் பாட்டைப் படிக்காத அன்பர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்; படித்தவர்கள் இன்னும் ஒருமுறை எடுத்துப் படிக்கவேண்டும். அற்புதமான, இந்தக் கட்டுரையாளனின் சொற்களுக்குள் சிக்க முடியாத வேகமும் அழகும் விந்தையும், பாரதியை நேரடியாகப் படித்தால்தான் உணர முடியும். ஒவ்வொரு கவிஞனுக்கும் இது பொருந்தும் என்பதனால்தான் தாகூர், “Take my wine in my own cup, friend. It loses its wreath of foam when poured into that of others.” என்று தன்னுடைய Stray Birds-ல் குறிப்பிடுகிறார்.

ஆயிற்றா? குயிலின் பூர்வ ஜன்மக் கதையைச் சுருக்கமாகக் கண்டுவிட்டோம். அடுத்ததாக இந்த ஜன்மக் கதையின் சுருக்கத்தையும் முடித்தபின்னர் ஒவ்வொரு குறியீடாக எடுத்துப் பொருத்திப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com