"ராஜேஷ்... இன்னைக்கு முடிவு பண்ணியே ஆகணும். போன வாரம் கேட்டதுக்கு இந்த வாரம் முடிவு சொல்றேன்னு சொன்னீங்க. எத்தனை வருஷத்துக்குத்தான் தள்ளிப் போடுறது. அடுத்த ஸ்கூல் இயர் ஸ்டார்ட் ஆயிடும். ப்ளீஸ், இனிமேலும் தள்ளிப் போடக்கூடாது" தீர்மானமாக இருந்தாள் மாலதி. மாலதி சொல்றது சரிதான். இங்க வந்து அஞ்சு வருஷம் ஆய்டுச்சு. நாங்க உயர்நடுத்தர வர்க்கம்னு சொல்லலாம். நல்ல வேலை, வீடு, கார்னு வாழ்க்கை நல்லாதான் போயிட்டிருந்தது. மனசுக்குள்ள ஒரு ஆசை... இல்ல பேராசை! நண்பருங்க, சொந்தகாரங்க கிட்ட எல்லாம் நல்லா விசாரிச்சுட்டுதான் எல்லாத்தையும் வித்துட்டு இங்க வந்தோம். IT-ல இருந்ததனால நல்லதாப் போச்சு. வேலை சீக்கிரம் கிடைச்சுட்டுது. கைநிறைய சம்பளம். அப்படி இருந்தும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தது இந்த அஞ்சு வருஷமும். மாலதியும், குழந்தைகளும் அட்ஜஸ்ட் பண்ண ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. இன்னமும் கஷ்டப்பட்டுட்டுதான் இருக்காங்க. ம்….எல்லாருக்கும் நெனைச்ச மாதிரி அமையறதில்ல. சும்மாவா சொன்னாங்க இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு.
"ராஜேஷ், என்ன ஆச்சு?" மாலதியின் கேள்வி ராஜேஷின் சிந்தனையைக் கலைத்தது. "இல்ல மாலதி. எனக்குப் பிரச்சனை இல்ல. முன்னாடி ப்ராஜெக்ட் பண்ணின கம்பனிலயே கூப்பிடுறாங்க. வேலை கிடைச்சுடும். உன்னப் பத்தியும் குழந்தைகள் பத்தியும்தான் யோசிக்கறேன். திரும்பிப் போனா மறுபடியும்...." இழுத்தான் ராஜேஷ்.
"ராஜேஷ், நீங்க சொல்றது எனக்குப் புரியுது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாம இரண்டு பேரும்தான் பேசி முடிவு எடுத்தோம். ஆனா இங்க நாம நெனைச்ச மாதிரி இல்லையே. இந்தக் கலாசாரத்தை நெனச்சாலே பயமா இருக்கு. ரொம்ப வித்தியாசமா இருக்கு. குழந்தைங்க எங்கே தப்பான வழிக்குப் போய்டுவாங்களோன்னு ரொம்ப பயமா இருக்கு. யாருக்கும் நிம்மதியா நின்னு பேச நேரம் இல்ல. எல்லாரும் ஓடுறாங்க. உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்" மாலதி பேசும்போது பல வருடங்களின் வெறுப்புக் கலந்த களைப்பு தெரிந்தது.
"அது சரி மாலதி. இப்போ நாம எடுக்கற முடிவு முக்கியமானது. வாழ்வோ, தாழ்வோ இந்த முடிவு கடைசியானதா இருக்கணும். இப்படி கூடுவிட்டுக் கூடு மாறிக்கிட்டே இருக்க முடியாது. நாம இங்க வந்து பண்ண தப்ப மறுபடியும் பண்ணக் கூடாதில்லையா!" ராஜேஷின் பேச்சில் கவலை தெரிந்தது.
"ராஜேஷ், நான் எதையும் மறைக்க விரும்பல. திரும்பிப் போறதுனால எல்லாப் பிரச்சனையும் தீரப் போறது கிடையாது. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு சில பேர் ஒரு மாதிரி பேசத்தான் செய்வாங்க. அதையெல்லாம் பார்க்க முடியாது. குழந்தைகளுக்கு எது நல்லதோ அதைத்தான் நாம இப்போ பார்க்கணும். இங்கே எதையும் பிளான் பண்ண முடியல. பாதி வாழ்க்கை மத்தவங்க கைல இருக்கற மாதிரி இருக்கு. நாமளும் இரண்டு வருஷமா நல்லா டிஸ்கஸ் பண்ணிடுத்தானே இந்த முடிவு எடுக்கறோம். நமக்கு அந்த இடம் ஒண்ணும் புதுசு இல்லையே. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தா, திரும்பிப் போறதுதான் நல்லதுன்னு படுது. போன வருஷம் விடுமுறைக்குப் போயிருந்தபோது நான் விசாரிச்சேன். நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாம் திரும்பிப் போய் நல்லாத்தான் இருக்காங்க. நாம திரும்பிப் போனா எல்லாரும் சந்தோசப் படுவாங்க. நம்ம குழந்தைகளும் அதைத்தான் விரும்புறாங்க" மாலதி ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
"சரி மாலதி. நீ திரும்பிப் போறதுக்கான ஏற்பாட்ட கவனி. நானும் கம்பெனில சொல்லிர்றேன். முதல்ல பாஸ்போர்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துடு. இப்போ சந்தோசம்தானே? வா, திரும்பிப் போகலாம்... நாம குடிபுகுந்த அமெரிக்காவுக்கே! மறுபடியும்."
மிச்சிகன் ஹபீப் |