"கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை. வெறும் புன்னகைதான். இதற்கு மேல் என்ன சொன்னாலும் பதில் வராது என்பதால் காயத்ரி மௌனமானாள்.
ராகவன் ஆபீஸ் கிளம்ப, காயத்ரியின் மனமோ வருடங்கள் கடந்து பின்னோக்கி ஓடியது. கல்யாணமான மறுநாளே ராகவனிடம் மெதுவாக ஆரம்பித்தாள். "உங்களை ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?"
"பரவாயில்லை, கேள்" என்பது போல் ஒரு புன்னகை பதிலாக வந்தது. "நீங்கள் ஏன் உங்கள் தம்பிபோல அடிக்கடி வெளிநாடு செல்வதில்லை? நீங்கள் அவரைவிட நன்றாகப் படித்தவர்தானே? ஏன் ஒருமுறையோடு நிறுத்தி விட்டீர்கள்?" இதற்கும் அவனுடைய பதில் புன்னகைதான்.
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் இதைப் பற்றிப் பேசுவாள். சண்டைகூடப் போடுவாள். அவள்தான் பேசுவாள். அவன் பதில் என்னவோ வெறும் புன்னகைதான். ராகவனை ஒரு விஷயத்திலும் குற்றம் சொல்ல முடியாது. பெயருக்கு ஏற்ற அழகு, அறிவு, குணம். காயத்ரியின் தமக்கைகள் அனைவரும் தங்கள் கணவர்களை ராகவனுடன் ஒப்பிட்டு காயத்ரியிடம் பொருமுவார்கள். அது பெருமையாக இருந்தாலும் தன் கணவன் வெளிநாடு போகவில்லையே என்ற குறை காயத்ரிக்கு இருந்து கொண்டே இருந்தது. ராகவனின் தம்பி கணேஷ் அவளுக்குப் பரிசாக வெளிநாட்டிலிருந்து அழகிய ஓவியம் ஒன்றை அனுப்பியிருந்தான். ஒரு அழகிய நதிக்கரையின் மேலிருந்த பிரம்மாண்டமான பாலம். அதன்மேல் குதிரை ஒன்று கம்பீரமாக நடந்து செல்வதாக இருந்தது அது. இதைப் பார்த்தாலாவது ராகவன் மனசு மாறுமா என்று டி.வி.க்கு மேலேயே மாட்டினாள்.
வருடங்கள் ஓடின. கணேஷிடம் இருந்து வரும் பரிசுப் பொருட்களும் நிற்கவில்லை. காயத்ரியின் வெளிநாட்டுப் பேச்சும் நிற்கவில்லை. ராகவனின் புன்னகையும் மாறவில்லை.
கணேஷும் அவன் குடும்பமும் வந்தாகி விட்டது. வீடு கலகலவென்று ஆனது. ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தின நாள்தான் கொஞ்சம் அமைதி திரும்பியது. எல்லோரும் ஷாப்பிங் செல்ல, கணேஷ் மட்டும் தலைவலி என்று போகவில்லை. சமையல் செய்து கொண்டிருந்தவள் "வந்ததிலிருந்து பார்க்கிறேன், என்னமோ போல் இருக்கிறீர்களே?" என்ற கணேஷின் குரல் கேட்டுக் கண்களில் நீர் தளும்பத் திரும்பினாள். மனதில் இருப்பதைக் கொட்டினாள். எல்லாவற்றையும் பதில் பேசாமல் கேட்ட கணேஷ் புன்னகைத்தான். ஆனால் இது ராகவனின் புன்னகை போன்றதல்ல. இதில் விரக்தியே தெரிந்தது.
பல வினாடிகள் மௌனத்துக்குப் பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே ஆரம்பித்தான். "இந்தப் படத்தைத் தவறாகப் புரிந்து கொண்டது போல், நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம் என்று தவறாக எண்ணி விட்டீர்கள். வெளிநாட்டில் இருக்கும் முதல் சில வருடங்கள் நன்றாகத்தானிருக்கும். அதற்குக் காரணம் புதிய பணம், சொகுசு வாழ்க்கை. ஆனால் போகப்போகத்தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும். சொந்த ஊரையும் மறக்க முடியாமல், அந்நியக் கலாசாரத்தையும் ஏற்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்புபோல் நாங்கள் படும் அவஸ்தை உங்களுக்குத் தெரியாது. நிறைய சம்பாதிப்பது உண்மைதான். அது வசதியைத்தான் தருமே ஒழிய, உண்மையான மனநிம்மதியைத் தராது. எங்களிருவருக்கும் இந்தியாவில் செட்டில் ஆக ஆசைதான். ஆனால் எங்கள் குழந்தைகள் இங்கு செட்டிலாக மாட்டார்களே. இருவருக்கும் பதினெட்டு வயதாகி விட்டதே. சொல்லப் போனால் அடுத்த வருடம் நாங்கள் இருவர் மட்டும்தான் விடுமுறைக்கு வருவோம் என்று நினைக்கிறேன். அவர்களிருவரும் வேறு வீடு செல்கிறார்கள்."
கணேஷ் தொடர்ந்தான், "உங்களுக்கு ஒன்று தெரியுமா? அந்தப் படத்தை வரைந்ததே ராகவன்தான். நான் முதன்முறையாக வெளிநாட்டுக்குப் போனபொழுது, இதைக் கொடுத்துவிட்டு, ‘கணேஷ், அந்த அழகான நதியையும், பிரம்மாண்ட பாலத்தையும் மட்டும் பார்க்காதே. பாலத்தின் எப்பக்கம் போறதுன்னு தெரியாமல் தடுமாறி நடுவில் நிற்கும் அந்தக் குதிரைபோல் ஆகிவிடாதே!’ என்றான். அதன் அர்த்தம் எனக்கு அப்பொழுது புரியவில்லை. புரிந்தபோது காலம் கடந்துவிட்டது. அவனுடைய அறிவுரையைக் கேட்கவில்லை என்ற வருத்தத்துடன் தான் அந்தப் படத்தையே உங்களுக்குப் பரிசாக அனுப்பினேன். அந்தக் குதிரைபோல எங்களுக்கும் பொய்க் கால்கள்தான்" கணேஷின் குரல் தடுமாறியது. மேற்கொண்டு பேசும்முன் வெளியே சென்றிருந்தவர்கள் வரும் சப்தம் கேட்டது.
கணேஷ் குடும்பத்தை வழியனுப்பி விட்டு வந்தார்கள். காயத்ரியால் அன்றிரவு தூங்கவே முடியவில்லை.
"காப்பி" என்ற குரலைக் கேட்டு பேப்பரை மடித்துக் காப்பியை வாங்கிய ராகவனின் கண்கள் தன்னிச்சையாக டி.வி. மேல் சென்றது. பல வருடங்களாக அங்கே இருந்த குதிரை ஓவியத்துக்குப் பதிலாக "There is no Place Sweeter than Home" என்ற வாசகத்துடன் அவர்களின் குடும்ப போட்டோ இருந்தது. அதைப் பார்த்துவிட்டாவது ஏதாவது சொல்லுவான் என்று அவனை ஆர்வமாகப் பார்த்தாள் காயத்ரி. ஆனால் இந்த முறையும் புன்னகைதான். ஆனால் இதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. முதன் முறையாக.
ரத்ன சுப்ரமணியன், நார்வே |