விட்டுக் கொடு!
ஒரு மரத்தடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். அந்த மரத்தின்மீது அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காகம். அதற்கு வடையைத் தின்ன ஆசை. "கா... கா..." என்று கத்தியபடி அங்கும் இங்கும் பறந்தது.

வடையை அது தூக்கிக்கொண்டு போய் விடுமோ, அதனால் மற்ற வடைகள் அசுத்தமாகி விடுமோ என அஞ்சினாள் பாட்டி.
எனவே ஒரு வடையை எடுத்து காகத்தின் பக்கமாய் வீசி எறிந்தாள்.

மரத்தின் அருகே படுத்திருந்த நாய், காற்றில் வடை பறந்து வருவதைப் பார்த்தது. தனக்குத்தான் பாட்டி அதை வீசி எறிந்ததாக நினைத்து, உடனே அதைத் தாவிப் பிடிக்க ஓடியது. ஆனால் அதற்குள் பறந்து வந்த காக்கை, வடையை அலகில் கொத்திக்கொண்டு போய் மரத்தின் மீது அமர்ந்தது. நாய்க்குக் கோபம் வந்துவிட்டது. காகத்தைப் பார்த்துக் குலைத்தது. "எனக்காக வீசிய வடையை நீ அபகரித்துக் கொண்டாய். நீ திருடன். அயோக்யன்" என்றது.

உடனே காகம் கோபத்துடன், "இல்லை... இல்லை... நான் வெகு நேரமாய்க் கத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து இரக்கப்பட்ட பாட்டி, ஒரு வடையை என் பக்கம் வீசி எறிந்தாள். நீதான் குறுக்கே வந்தாய். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?" என்றது.

ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. "நீ திருடன். அயோக்யன். பேராசைக்காரன்" என்று கத்திக்கொண்டே இருந்தது. அதைக் கேட்ட காகம், "சரி, சரி. இப்போது உன் பிரச்னை என்ன? இந்த வடை வேண்டும், அவ்வளவுதானே! இந்தா, இதை நீயே சாப்பிடு" எனக் கூறி வடையைக் கீழே போட்டது.

இதை எதிர்பார்க்காத நாய் ஆவலுடன் ஓடிப்போய் வடையைக் கவ்விக் கொண்டது. பின் காகத்தைப் பார்த்து, "அப்படியானால் பசிக்கு நீ என்ன செய்வாய்?" என்றது.

காகம், "நண்பரே! உனது பரிவிற்கு நன்றி. எனக்கு இறக்கைகள் உள்ளன. எங்கு வேண்டுமானாலும் என்னால் பறந்து சென்று ஆசைப்பட்டதைத் தேடித் தின்ன முடியும். நீதான் பாவம். ரொம்ப தூரம் வெளியே சுற்ற முடியாது. உன் நண்பர்களும் நீ எல்லை தாண்டி வருவதை அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே நீ இதை மகிழ்ச்சியாகச் சாப்பிடு. வேறு எங்காவது ஒரு பாட்டி வடை சுடாமலா இருக்கப் போகிறாள்?" என்று கூறிப் பறந்தது.

வழியில் மற்றொரு வீட்டில் ஒரு பாட்டி இதேபோல் வடை சுட்டுக் கொண்டிருந்தாள். காகத்தைப் பார்த்ததும், ஒரு வடையை ஓட்டின்மீது விட்டெறிந்தாள். அதைக் கவ்விக் கொண்ட காகம், மீண்டும் மரக்கிளையில் உட்கார்ந்து அதைத் தின்ன ஆரம்பித்தது. இதையெல்லாம் மற்றொரு மரத்தின் மீதமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவி, தனது துணையிடம், "பார்த்தாயா? விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை" என்றது.

"ஆம்... ஆம்..." என்று கூறிக் கொண்டே இரண்டுமாக இரைதேடிப் பறந்து சென்றன.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com