தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-2)
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணி புரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறினாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையை நிவர்த்திக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் தானே சமீபத்தில் தூய தண்ணீர் பற்றிய பல கட்டுரைகளைப் படித்திருந்ததால் அதில் மிகவும் ஆர்வமுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்துக்குச் சென்று விசாரிக்கச் சம்மதிக்கிறார். பிறகு...

*****


ஷாலினியின் தூண்டுதலால், சூர்யாவும் கிரணும் அவள் குறிப்பிட்டிருந்த தூய தண்ணீர் நிறுவனத்துக்கு மறுநாள் காலையில் வெகு சீக்கிரமே சென்றடைந்தனர்.

வாகனத்திலிருந்து இறங்குகையில் மழை பெய்து இறுதியான சிறுதூறல் தேவர்கள் பூமாரி பொழிந்தது அவர்களை வாழ்த்தியது போல் மென்மையாகத் தூவிக் கொண்டிருந்தது. அந்த நீர்த்துளிகள் மேனியில் படச் சிலிர்த்துக் கொண்ட ஷாலினி சிலாகித்தாள். "ஆஹா! பாத்தீங்களா? நாம தூய தண்ணீர் பத்தி விசாரிக்க வந்ததுனால, வானமே தூய தண்ணீரை நம்ம மேல தூவி வரவேற்குது!"

அவள் கருத்தை சிறு முறுவலுடன் கூடிய தலையசைவுடன் ஆமோதித்துக் கொண்ட சூர்யா, அந்நிறுவனத்தின் கட்டடத்தையும் சுற்றுச் சூழலையும் கவனிக்கலானார்.

கட்டடத்தின் முன், புல்தரையின் நடுவில்பெரும் பாறை ஒன்று வைக்கப் பட்டிருந்தது. பாறையின் மேல் கோரைப் புல் வளர்ந்திருந்தது. சில மீன்களும் பொருத்தி வைக்கப் பட்டிருந்தன. ஒரு நதி முதலை சிற்பம் கூட இருந்தது. அவற்றின் இடையில் அக்வாமரீன் என்று நிறுவனத்தின் பெயர் பெரியதான, நீலம் கலந்த பச்சையான கடல் நிறத்திலிருந்த எழுத்துக்களில் பொருத்தப் பட்டிருந்தது. நிறுவனத்தின் கட்டடச் சுவர்களும் அதே நிறத்தில் இருந்தன. சுவர்களின் மேல் பல நதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் தூய தண்ணீரில் வசிக்கும் நீர்ப் பிராணிகளின் ஓவியங்கள் காணப்பட்டன.

சூர்யா, "பரவாயில்லையே, தாங்கள் முயற்சிக்கும் துறையைப் பற்றி கட்டிடத்தின் மூலமே நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!" என்று சிலாகித்தார்

கிரணோ முரணாக, "ஹா! இவங்க என்ன செய்யறாங்கன்னு எனக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்காட்டா இது ஒரு மீன் காட்சி அக்வேரியம் இல்லைன்னா நீர்ப் பிராணி சாப்பாட்டு இடம்னு நினைச்சிருப்பேன்" என்று கிண்டலுடன் கூறினான்.

ஷாலினி அவனைக் கடிந்து கொண்டாள். "சே, என்ன கிரண். எதுக்கெடுத்தாலும் வக்கிரப் பேச்சுதானா? எவ்வளவு அழகா ரசனையோட செஞ்சிருக்காங்க. பொதுவா ஆராய்ச்சி சாலையெல்லாம் ரொம்ப சாதாரணமா சாம்பல் நிறக் கட்டிடம் வெறும் கண்ணாடி காங்க்ரீட்ல கட்டி போரடிச்சுடறாங்க. இது வித்தியாசமா, கண்ணுக்குக் கவர்ச்சியா இருக்கு! அதுவும் வெறும் வீண் அலங்காரம் இல்லயே, அவங்க துறையோட ரொம்ப சாதுர்யமா இணைச்சிருக்காங்க."

மூவரும் நிறுவனத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்தனர். அங்கு கண்ட காட்சி கிரணை கலகலவெனச் சிரிக்க வைத்தது. அறையின் சுவர் எங்கும் வெளிப்புறம் போல் பசும்நீல வர்ணமும் மீன்களும் நீர்ப் பிராணிச் சித்திரங்களும் இருந்தன. அது மட்டுமல்லாமல், தரையிலிருந்து மேல்விட்டம் வரை பெரும் கண்ணாடி நீர்த்தொட்டிகளில் உண்மையாகவே மீன்களும் சிறிய சுறா, டால்ஃபின் போன்ற நீர்வாழ் உயிரினங்களும் நீந்திக் கொண்டிருந்தன. ஷாலினியைப் பார்த்து "இப்ப என்ன சொல்றே! அக்வேரியமேதான்" என்றான். ஷாலினியும் புன்னகையுடன் கைகளைச் சற்றே உயர்த்திக் காட்டி போலிச் சரணாகதியாக "சரிடாப்பா, நீதான் ஜெயிச்சுட்டே!" என்றாள்.

அவளை மேலும் வம்புக்கிழுக்க திறந்த கிரணின் வாய், மேலே சப்தமே எழுப்பாமல் திறந்தது திறந்தபடியே நின்றுவிட்டது. காரணம், நிறுவனத்தின் உள்கதவு திறந்து அதிலிருந்து வரவேற்பறைக்கு வந்த ஒரு வனப்பான தோற்றந்தான். கவர்ச்சியே உருவானபடியிருந்த அந்த இளம்பெண், தன் அழகையும் இளமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டும் படியான சிக்கென்ற உடுப்பும் தளதளவெனெ காற்றில் அசையும்படி திரண்டு விழும் நீர்வீழ்ச்சியாக தோள்கள் வரை துவண்ட சிகையும், உலக அழகிகளே தோற்றுவிடும் படியான முக அழகும், அதன் மேல் கிறங்க வைக்கும் புன்னகையும் பொருந்தி கிரணுக்கு மூச்சுத் திணற வைத்தாள்.

ஷாலினி கிரணைத் தட்டி உசுப்பினாள். "கிரண் போதும் இங்க இருக்கற நீர்த்தொட்டில இருக்கற தண்ணிய விட உன் ஜொள்ளு அதிகமாயிடப் போகுது. வாய மூடிக்கோ" என்று அவள் கிசுகிசுக்கவும் படக்கென்று வாயை மூடிக்கொண்ட கிரண் வைத்த கண் வாங்காமல் அப்படியே சிலையாக நின்று கொண்டிருந்தான்.

வரவேற்பறைக்குள் நுழைந்த அந்த யுவதியோ, கிரண் தன்னை நோட்டம் விடுவதைக் கண்டு சற்றே முகம் சிவந்தாலும், அத்தகைய பார்வை மிகவும் பழகிப் போனதால் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமால், "ஹை ஷால்! சொன்ன மாதிரி கரெக்ட் நேரத்துக்கு வந்துட்டீங்களே! ரொம்ப தேங்க்ஸ்" என்று நன்றியுடன் வரவேற்றாள்.

ஷாலினி, "இவர்தான் சூர்யா; இவள்தான் நான் குறிப்பிட்ட என் சக ஆராய்ச்சியாளரின் தங்கை யாவ்னா" என்று அறிமுகம் செய்யவும் சூர்யா அவள் நீட்டிய கையை சற்றே குலுக்கியபடியே வீசிய திடீர் வேட்டில் யாவ்னா அதிர்ந்தே போனாள். சூர்யா கூறியது அவரைப்பற்றி நன்கு அறிந்திருந்த ஷாலினிக்குக் கூட ஆச்சர்யம் விளைவித்தது. (கிரண் மட்டும் இன்னும் சிலையாக யாவ்னாவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்).

யாவ்னாவின் கையைக் குலுக்கிக் கொண்டே சூர்யா குளிர்ந்த நட்புப் புன்னகையுடன், "உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மேலும், இன்று காலை உங்கள் கட்டிடத்தைச் சுற்றியுள்ள இயற்கைப் பாதையில் ஓடி வந்துவிட்டு வெகு சீக்கிரமே இவ்வளவு தயாராக வந்து விட்டீர்களே, அது ஆச்சர்யமும் கூடச் சேர்த்து அளிக்கிறது!" என்றார்.

அதைக் கேட்ட யாவ்னா திகைப்பால் தடுமாறினாள். "என்ன... எப்படி... நான் வந்து அரை மணி நேரம் ஆச்சே? அவ்வளவு நேரத்துக்கு முன்னாலேயே வந்து பார்க்கிங் லாட்டில காத்துக்கிட்டிருந்து நான் திரும்ப ஓடி வருவதைப் பாத்தீங்களா என்ன? அது உங்களுக்கு எப்படித் தெரியும்? என் அண்ணனுக்குக் கூடத் தெரியாதே? அதுனால ஷாலினிக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே..."

ஷாலினி பெருமிதப் புன்னகையுடன், "அதான் சூர்யா! உன் ஓட்டப் பயிற்சி பத்தி எனக்கு நிச்சயமாத் தெரியவே தெரியாது. அவரே எதையோ கவனிச்சி யூகிச்சிருக்கார். எனக்கும் புரியலை. எப்படிக் கணிச்சீங்க விளக்குங்களேன் சூர்யா" என்றாள்.

சூர்யா முறுவலுடன் விளக்கலானார். "ஷாலினி சொல்றது போல் இது முன்பே தெரிந்த விஷயமில்லை. இங்கு வந்து கிடைச்ச தடயங்களை வச்சு கணிச்ச யூகந்தான். நீங்கள் அலுவலக உடை அணிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் காலணியோ ஓடுவதற்கானது...."

யாவ்னா ஏமாற்றம் முகத்தில் படர இடைமறித்தாள். "அவ்வளவுதானா, நான் எப்பவுமே ஒடற ஷூஸ்தானே போட்டுக்கறேன். அத மட்டும் வச்சு செய்த யூகம்தானா?"

கிரண் கனவிலிருந்து விடுபட்டு ஆமாம் பாட்டுப் பாடினான். "ஹே! நான் கூட ஆஃபீஸ்க்கு ஸ்னீக்கர்ஸ்தான் போட்டுட்டு போவேன். இதோ இப்பக்கூட! என் பாஸ் பாவம் ரொம்ப நொந்துக்கறார். ஆனா என் க்ளையண்ட்ஸ்க்கு என் மேல ரொம்பவே மதிப்பிருக்கு அதுனால..."

ஷாலினி இடைமறித்தாள். "ஏய் கிரண். போதுமே உன் பெருமை, கொஞ்சம் நிறுத்திக்க. வேற எதெல்லாம் கவனிச்சு யூகிச்சார்னு சூர்யா மேற்கொண்டு விளக்கட்டும்!"

ஆனாலும் யாவ்னா கிரணுக்கு ஒரு சிறு முறுவல் காட்டவே அவன் கிளுகிளுத்தான்! யாவ்னா சூர்யாவைக் கேட்டாள். "சரி சொல்லுங்க. இன்னிக்குக் காலையிலதான் எங்க கட்டிடத்தைச் சுத்தி ஓடினேன்னு என் ஷூவைத் தவிர வேற எந்தத் தடயங்கள் மூலம் தெரிஞ்சது?"

சூர்யா அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக் கொண்டுத் தொடர்ந்தார். "ஷூ மட்டும் போதாதுதான். ஆனா அதுக்கும் மேல பல தடயங்கள் இருக்கு. இதோ பாருங்க நீங்க காலணியோட அடிப்பகுதியை தண்ணி விட்டு கழுவியிருக்கீங்க. ஆனாலும், அதுக்குக் கொஞ்சம் மேல சிகப்பான சகதி இன்னும் கூட சரியா உலராமல் ஒட்டிக்கிட்டிருக்கு.”

யாவ்னா வளரும் வியப்பு கலந்த மதிப்புடன் "வாவ், அத்தனை சிறிய தடயத்தைக் கூட கவனிச்சிருக்கீங்களே! அப்புறம்" என்று தூண்டினாள்.

சூர்யா தொடர்ந்து தன் கணிப்பை விளக்கலானார். அவரது முழு விளக்கம் யாவ்னாவின் ஏமாற்றத்தை சுக்குநூறாகச் சிதறடித்து சூர்யாவின்மேல் அவளுக்கு மிக மதிப்பை வளர்த்ததோடு, தன் நிறுவனத்தின் தூய தண்ணீர் தவிப்பை அவர் நிவர்த்திப்பார் என்ற நம்பிக்கையைப் பெருக்கியது.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com