அழகியசிங்கர்
சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா தொடங்கிப் பலர் தமிழில் சிற்றிதழ் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றவகையில் புதுமை கலந்தும், பழமையை நினைவூட்டும் வகையிலும் தனக்கென்று ஒரு தனிப்பாணியில் இயங்கி வருபவர் அழகியசிங்கர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆன இவரது இயற்பெயர் சந்திரமௌலி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் உறையும் அழகியசிங்கர் (நரசிம்மர்) நினைவாக அதைப் புனைபெயராகச் சூட்டிக் கொண்டு கதை எழுத, அது தேர்ந்தெடுக்கப்பட, அதே பெயரில் தொடர்ந்து எழுதினார். இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து வாசித்த இவருக்குத் தாமும் ஓர் இதழ் தொடங்கி நடத்தும் எண்ணம் ஏற்பட்டது. உறவினர் ஒருவர் 'தூதுவன்' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது 'மலர்த்தும்பி' என்ற பெயரில் அச்சில் வெளியானது. அதுவும் 'பிரக்ஞை'யுமே அழகியசிங்கர் 'விருட்சம்' இதழை ஆரம்பிக்க அடித்தளமாக அமைந்தன. சிற்றிதழ்களை நெடுங்காலம் நடத்த முடியாது; குறுகிய ஆயுளையே கொண்டவை; பொருளாதார லாபம் அவற்றால் விளையாது என்பதெல்லாம் தெரிந்தும் இலக்கிய தாகத்தின் காரணமாக விருட்சத்தை ஆரம்பித்தார். 'எழுத்து', தொடர்ந்து 'பிரக்ஞை' வரிசையில் விருட்சத்தையும் முக்கிய இதழாக வளர்த்தெடுத்தார்.

அசோகமித்திரன், க.நா.சு., ஐராவதம், நகுலன், வெங்கட் சாமிநாதன், நீல. பத்மநாபன், சா. கந்தசாமி, பிரமிள், விட்டல்ராவ், ஸ்டெல்லா புரூஸ், காசியபன், கோபிகிருஷ்ணன் உட்படப் பலர் விருட்சத்தில் எழுதினர். அசோகமித்திரனின் முக்கியமான பல சிறுகதைகள் விருட்சத்தில் வெளியானைவையே! இவர்களுடன் ரா. ஸ்ரீனிவாசன், ஜெயமோகன், பெருந்தேவி, கிருஷாங்கினி, பிரம்மராஜன், மகுடேசுவரன், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், அம்ஷன்குமார், லாவண்யா, பாவண்ணன், எஸ். வைத்தியநாதன், நாகார்ஜுனன், ரெங்கசாமி ஆகியோருடைய படைப்புகளும் விருட்சத்தில் வெளியாகின. இவர்களோடு லதா ராமகிருஷ்ணன், ஷைலஜா, சிபிச்செல்வன், என்.சொக்கன், பா.வெங்கடேசன், ஷங்கர நாராயணன், யோசிப்பவர், ரிஷான் ஷெரீப், குமரி எஸ். நீலகண்டன், என். விநாயகமுருகன், கடற்கரய் என இளைய தலைமுறைப் படைப்பாளிகளையும் அழகியசிங்கர் ஊக்குவித்தார். இதுபற்றி அழகியசிங்கர், "என்னைப் பொறுத்தவரை தரமான படைப்புகள் யாருடையதாக இருந்தாலும் நான் வெளியிட்டு வந்திருக்கிறேன்" என்கிறார். தவிர க.நா.சு., சி.சு.செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, போன்றோர் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சம்பத், ஆத்மாநாம் போன்றோர் எழுதிய சிறுகதை, கவிதைகளையும் விருட்சம் இதழில் அவ்வப்போது வெளியிட்டுப் பழமையை நினைவுகூர வைக்கிறார். ஆதிமூலம், கவிஞர் வைதீஸ்வரன், யூமா வாசுகி, ச. சிவபாலன் எனப் பலருடைய கோட்டோவியங்கள் விருட்சம் இதழ்களின் முகப்பட்டையில் வந்துள்ளன.

1993ல் 'விருட்சம்', 'நவீன விருட்சம்' ஆனது. கதை, கவிதை, கட்டுரைகள், நூல் விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்சுவை இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை நடத்துவது மிகவும் சிரமம். குழு மனப்பான்மையுள்ள எழுத்தாளர்கள் சிலரின் புறக்கணிப்பையும், அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ரயில் நிலையக் கடைகள், சாதாரணக் கடைகள் போன்றவை சிற்றிதழ்களுக்குப் பொதுவாக ஆதரவு தராத சூழல். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, கடந்த 23 ஆண்டுகளில் இதுவரை 90 இதழ்களை வெளியிட்டிருக்கிறார். இவ்விதழ் நேரடியாகச் சந்தாதாரர்களைச் சென்றடையும் சிற்றிதழாகும். சிற்றிதழ் குறித்து அழகியசிங்கர், "இன்றைய சூழ்நிலையில் சிறுபத்திரிகை அவசியமா என்ற கேள்வி எழும்போது, அதற்கு எப்போதுமே அவசியம் உண்டு என்ற நிலை தொடர்ந்துகொண்டு இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்ட கணிப்பு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பெரும்பத்திரிகை கலாசாரத்திற்கு எதிராக மாறுபட்ட கலாசாரத்தைச் சிறுபத்திரிகை தொடர்ந்து நிறுவ முயற்சிக்கிறது" என்கிறார்.

அழகியசிங்கரின் சிறுகதைகள் மனித வாழ்க்கையின் அவலங்களை, உணர்ச்சிகளை, சமூகப் போக்குகளை கலகக் குரலாக அல்லாமல் இயல்பான தொனியில் மென்மையாகப் பேசுகின்றன. மிகைப்படுத்துதலோ, கலவரப்படுத்துதலோ இவரது படைப்புகளில் இல்லை. இவரது 'அங்கிள்' என்ற சிறுகதைக்குக் 'கதா' விருது கிடைத்துள்ளது. 'யுகாந்தர்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்துள்ளது. இவரது பல கதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும், பஞ்சாபியிலும், பிற மொழிகளிலும் பெயர்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் குறித்து "அழகியசிங்கருடைய புனைகதை வெளிப்பாட்டில் பகட்டு, போலி, பாவனை ஏதும் இல்லை. ஆனால் வாசக சுவாரசியம் நிறைய இருக்கிறது" என்கிறார் அசோகமித்திரன். இவரை "எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய வாரிசு" என்று பாராட்டுகிறார் தி.க. சிவசங்கரன். '406 சதுர அடிகள்', 'ராம் காலனி' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். 'சில கதைகள்' குறுநாவல் தொகுப்பு. 'யாருடனும் இல்லை', 'தொலையாத தூரம்', 'அழகியசிங்கர் கவிதைகள்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். விட்டல்ராவுடன் இணைந்து 'இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளார். தனது நவீனவிருட்சம் பதிப்பகம் மூலம் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம், பிரமிள், ஞானக்கூத்தன், லாவண்யா ஆகியோர் பற்றிய கட்டுரை மற்றும் கவிதை நூல்களையும், உரையாடல்கள் என்ற தலைப்பில்அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதனின் நேர்காணல்கள், விருட்சம் கதைகள், விருட்சம் கவிதைகள் போன்ற தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இலக்கியம் தொடர்பான பல கூட்டங்களையும் விருட்சம் சார்பில் தொடர்ந்து நடத்திவரும் அழகியசிங்கர், தனது நவீனவிருட்சம் இதழிலிருந்து தேர்த்நெடுத்த சில கதை, கவிதை, கட்டுரைகளை தனது வலைப்பதிவான வெளியிட்டு வருகிறார். மனைவி, மற்றும் வயதான தந்தையுடன் சென்னையில் வசித்துவரும் இவர், வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் ஃப்ளோரிடாவில் வசிக்கிறார்.

தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்துள்ள போதிலும் தனக்கே உரிய பாணியில் எந்த ஒரு குழுவிலும் இசங்களிலும் சிக்கிக் கொள்ளாது விடாமுயற்சியுடன் தனி ஒருவராக விருட்சம் இதழை அழகியசிங்கர் ஈடுபாட்டுடன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணி, குடும்பப் பொறுப்பு இவற்றோடு கடந்த 25 ஆண்டுகளாக இலக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்துவரும் அழகியசிங்கரின் இலக்கியப் பணி போற்றத்தகுந்தது.

அரவிந்த்

© TamilOnline.com