அஸ்வினி நாகப்பன் நடன அரங்கேற்றம்
ஜூன் 4, 2011 அன்று, செல்வி அஸ்வினி நாகப்பனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூ ஜெர்சியிலுள்ள பாஸ்கின் ரிட்ஜ் மேனிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கு மேலானோர் முன்னிலையில் நடைபெற்றது. 'பரதகலா நிருத்ய க்ஷேத்ரா' நடனப் பள்ளியை நடத்திவரும் குரு செல்வி சந்திரநாதன் அவர்களின் மாணவியாவார் அஸ்வினி.

மேடையலங்காரம் பிரமிக்கும் வகையில் அமைந்திருந்தது. விநாயகரைத் துதித்த புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து ஆடிய ஜதிஸ்வரத்திலும், பின்னர் ஆடிய தில்லானாவிலும் அஸ்வினியின் தாளத் தேர்ச்சி தெரியவந்தது. திருக்குறளைப் பதமாக வடிமைத்து ஆடியது புதுமை. தொடர்ந்து, ஆடிய சப்தம், பதம், வர்ணம் அனைத்திலும், குறிப்பாக 'சின்னஞ்சிறு கிளியே' பாடலின் நடனத்தில் அவரது அபிநயம் பாராட்டைப் பெற்றது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற நடனமாகட்டும், அவற்றுக்கான உடையாகட்டும், ஆபரணங்களாகட்டும், எல்லாவற்றிலும் தனித்துவம் தெரிந்தது. இத்தனை உடை மாற்றங்களைக் கொண்ட ஒன்பது முற்றிலும் மாறுபட்ட நடனம் ஒவ்வொன்றையும், ஒரே உற்சாகத்துடனும், திறமையுடனும் அஸ்வினி ஆடியது மிகச் சிறப்பு.

குரு செல்வி சந்திரநாதன் நட்டுவாங்கம் செய்ய, வாய்ப்பாட்டில் பாமா விஸ்வேஸ்வரன், மிருதங்கத்தில் மயூரம் ஜே. சங்கர், புல்லாங்குழலில் வேங்கடரமணன் மற்றும் வீணையில் முடிகொண்டான் ரமேஷ் பக்கபலமாக இருந்து மெருகூட்டினார்கள. ஒவ்வொரு உருப்படியையும் வெங்கியும் கவிதா ராமசாமியும் கவிதை வடிவில் விளக்கியது கவனத்தை ஈர்த்தது. இடைவேளைக்கு முன் நியூ ஜெர்சியின் 'சின்னக்குயில்' அனிதா கிருஷ்ணா ஒரு பக்திப் பாடல் பாடினார்.

அரங்கேற்றத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக மூன்று முறை 'எம்மி' விருது பெற்ற தொலைக்காட்சிச் செய்தியாளர் சுகன்யா கிருஷ்ணாவும், CNN ஹீரோவான 'அக்ஷயா' நாராயணன் கிருஷ்ணனும் வந்திருந்தனர். தனக்கு வந்த எல்லாப் பரிசுகளையும் அக்ஷயாவுக்கே நன்கொடையாக அளித்தார் அஸ்வினி. அவரது பெற்றோரும் அதே அளவு தொகை சேர்த்து மொத்தம் பத்தாயிரம் டாலர் வழங்கினார்கள்.

மேலும் விவரங்களுக்கு: www.ashwininagappan.com

சாந்தி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com