ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்'
ஜூன் 5, 2011 அன்று, கான்கார்ட் சிவ முருகன் ஆலய நிதிக்காக, பாலோ ஆல்டோவிலுள்ள யூத சமுதாய மைய அரங்கில், ராதிகா சங்கர் வழங்கிய 'பரத நிருத்ய வைபவம்' நடைபெற்றது. நிகழ்ச்சி பல்வேறு இந்துக் கடவுள்களையும் அவர்கள் ஆடும் நடனங்களையும் புகழும் வகையில் அமைந்திருந்தது. ராதிகாவுடன் அவரது புதல்வியரும் சீடர்களுமான செல்வி தாராவும் மேனகாவும் இணைந்து ஆடினார்கள்.

வழுவூர் ஞானசபேசர் பெருமானைப் போற்றும் தோடைய மங்களம் பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து வந்த 'புஷ்பாஞ்சலி' விநாயகர், மும்மூர்த்திகள், முருகன் என்று பல்வேறு கடவுளரைத் தொழும் வகையில் அமைந்தது. அடுத்த நடனத்தில், விநாயகப் பெருமான் விளையாட்டாக மஹாவிஷ்ணுவின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொள்ள, கணேசரைப் பதட்டப்படுத்தாமல் அதனை மீட்க வேண்டுமென்று எண்ணிய மஹாவிஷ்ணு தமது கரங்களை ஒன்றன் மேல் ஒன்று குறுக்காக மடித்து, இரு செவிகளையும் பற்றித் தோப்புக்கரணம் போட, விநாயகக் குழந்தை மகிழ்ந்து வாய்விட்டுச் சிரித்ததும் சக்கரம் கீழே விழ, விஷ்ணு அதை எடுத்துக் கொண்டார் என்று விவரித்தது புதுமையாக இருந்தது.

'கஞ்சதளாயதாக்ஷி' என்று காமாட்சியைப் புகழும் பாடலுக்குப் பிறகு ராதிகா கரணங்களை வெளியிடும் நடனத்தை ஆடினார். டாக்டர் பத்மா சுப்ரமணியம் இவரது குரு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல்லாண்டுகாலம் ஆய்வு செய்து 108 கரணங்களை பற்றிய விளக்கத்தைத் தந்துள்ளார். தக்க கை, கால் அசைவுகளுடன், (movements) குறிப்பிட்ட நடனத் தோற்றங்களை (postures) இணைத்து நாட்டியத்தில் வெளிப்படுத்துவதே கரணம். தொடர்ந்து 45 நிமிடங்களுக்குக் குறையாமல் ஆடிய ராதிகா 108 கரணங்களையும் சிறப்பாகக் காண்பித்தது நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது.

ராதிகா கரணங்களைக் காட்டி நடனம் ஆடுகையில் அவரது புதல்வி சோனியா சங்கர், கரணங்களை அசையாத் தோற்றங்களாக (Static Postures) காண்பித்தது அழகு. தொடர்ந்து செல்வி தாராவும் ராதிகாவும் சிவனாகவும் சக்தியாகவும் இணைந்து ஆடிய 'போ சம்போ' மனதைக் கவர்ந்தது. 'சரவண பவ' என்ற ஆறெழுத்தைப் புகழ்ந்து முருகப் பெருமானின் பெருமையைக் கூறும் ஹம்ஸாநந்தி ராகப் பாடலுக்கு மேனகா சங்கர் நடனமாடினார். இப்பாடலை எழுதியது தென்றல் வாசகர்கள் நன்கு அறிந்த சீதா துரைராஜ். இசையமைத்தது விரிகுடாப் பகுதியின் பிரபல பாடகி ஆஷா ரமேஷ். பக்கம் வாசித்தவர்கள் சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) மற்றும் பிரேமா ஸ்ரீராம் (நட்டுவாங்கம்) ஆகியோர். 'ஏறுமயிலேறி' என்ற திருப்புகழுடன் நிறைவு பெற்றது இந்நடன நிகழ்ச்சி.

அருணா கிருஷ்ணன்,
பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com