ஜூன் 18, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் ஸான் ஹோசே ராகவாணி இசைப்பள்ளியின் மாணவியர் வீணை மற்றும் தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதி' பாடல் நிகழ்ச்சியொன்றை வழங்கினர். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பக்கவாத்தியமாக 'நாதோபாஸனா' மிருதங்கப் பள்ளி மாணவர் அமீத் ரங்கநாதன் மிருதங்கம் வாசித்தார்.
நிகழ்ச்சி தீபா சுப்ரமணியனின் வீணைக் கச்சேரியுடன் தொடங்கியது. வீணை குப்பையரின் 'இந்த்த சலமு' என்ற பேகடா வர்ணத்தில் தொடங்கி, கச்சிதமாக 'ப்ரணமாம்யஹம்' என்று பிள்ளையாரை கௌளை ராகத்தில் வணங்கிவிட்டு, காம்போதியில் 'கைலாச நாதேன', குமுதக்ரியாவில் 'அர்த நாரீஸ்வரம்', ஆனந்தபைரவியில் 'மறிவேறே கதி' முதலிய பாடல்களை இனிதே வாசித்தார். அதையடுத்து ராகம்-தானத்துடன் 'பாஹி ஜகஜ்ஜனனி' ஹம்ஸானந்தியில் அம்சமாக அமைந்தது. அமீத் ரங்கநாதன் தனியாவர்தனத்தில் ஆதிதாளத்தில் 'கண்ட' நடையும் திரிகால கோர்வையும் வாசித்து அசத்தினார்.
அடுத்து, குரு லலிதா வெங்கட்ராமனின் மாணவியர் சந்திரகுமாரி சுவர்ணா மற்றும் தாரா பிச்சுமணி, தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதிகளைச் சிறப்பாகப் பாடினர். ஒன்பது கிரஹ தேவர்களையும் பக்தியுடன் தியானிக்கும் வகையில் அமைந்த பாடல்களை இச்சிறுமியர் பக்தியின் ஆழத்தோடு பாடியது நெகிழ்ச்சியளித்தது. “இவற்றைப் பாடினால் நவக்ரஹ பூஜை செய்த பலன் கிடைக்கும்” என்று அறிமுகப்படுத்தினார் குரு லலிதா. இந்தப் பாடல்களை விளக்கிக் கூறினார் வித்யா நாராயணன்.
வித்யா நாராயணன் |