ஜூன் 18, 2011 அன்று அட்லாண்டாவில் நிருத்ய சங்கல்பா நாட்டியப் பள்ளியின் குரு சவிதா விஸ்வநாதனின் மாணவி மதுமிதா கோவிந்தராஜனின் நாட்டிய அரங்கேற்றம், ராஸ்வெல் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. ராகமாலிகாவில் தோடய மங்கலத்துடன் தொடங்கி பகவான் விஷ்ணுவின் அவதாரங்களைப் போற்றும் 'ஜெய ஜானகி' என்னும் பாடலில், ராமனின் கம்பீரமும், நரசிம்மனின் குரூரமும், கிருஷ்ணனின் குறும்பும் சிறப்பாக அபிநயிக்கப்பட்டன. கம்பீர நாட்டை ராகத்தில் சிலப்பதிகார நாயகி மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தை விளக்கும் 'சிறப்பில் பொருந்திய' என்ற சிலப்பதிகாரப் பாடலில் ஜதிகளுக்கான பாத அசைவுகளுடனும், கச்சிதமான முகபாவங்களுடனும் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டிய மாதவியைக் கண்முன் நிறுத்தினார் மதுமிதா.
அடுத்து சங்கராபரண ராக வர்ணத்துக்குத் தாளக்கட்டோடு ஆடியது சிறப்பு. தஞ்சையில் எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரரை வர்ணிக்கும்போது கண்களில் காதல், பிரமிப்பு, காதலைப் புரிந்துகொள்ள வேண்டிக் கெஞ்சல், புறக்கணிக்கும் சுவாமியிடம் கோபம், ஏக்கம் என அத்தனை பாவங்களும் அருமை. நான்கு வயதுமுதல் தான் பயின்றுவந்த கலையின் சூட்சுமத்தை மதுமிதா புரிந்து வைத்திருப்பது இதில் தெரிந்தது. தொடர்ந்த, 'சந்திரசூட சிவ சங்கர' என்னும் புரந்தரதாசர் பாடலில், அடங்காத சினத்தால் சிவனின் நெற்றிக்கண் திறப்பது, சிவதாண்டவத்தில் ஆக்ரோஷம், மன்மதனை எரிப்பது இவற்றில் மதுமிதாவின் அபிநயமும், உடல்மொழியும், நாட்டிய நேர்த்தியும் வியக்க வைத்தன.
அடுத்து வந்த 'வாரணம் ஆயிரம்' என்னும் நாச்சியார் திருமொழி வெகு அழகு. இறுதியாக, ஜதியுடன் முகபாவங்கள் போட்டியிட, கரிய பெரிய விழிகள் ஆட்சி செய்ய, மிருதங்கத்துடன் காற்சலங்கைகள் போட்டியிட, முத்திரைகள் கை கொடுக்க, காமாட்சி அம்மனின் துதி பாடி அரங்கேறியது தில்லானா. இலக்கிய நயமிக்க பாடல்களைத் தேர்ந்தெடுத்து கலாக்ஷேத்ரா பாணியில் நாட்டியம் அமைத்த குரு சவிதா விஸ்வநாதன் பாராட்டுக்கு உரியவர். ஜோதிஸ்மதி ஸ்ரீஜித்தின் செவிக்கினிய குரலும், ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் மிருதங்கமும், பிரியா இராமச்சந்திரனின் வீணையும், சுரேஷின் புல்லாங்குழலும் நிகழ்ச்சிக்குப் பெரும் பக்கபலம். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காகச் செயல்படும் CRY (Child Rights and You) என்னும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடைபெற்றது இந்த அரங்கேற்றம். மேலும் விபரங்களுக்கு: www.madhugovind.com
வாண்டர்பில்ட் பல்கலையில் முழு உதவித் தொகை பெற்று மருத்துவத்துக்கான இளங்கலைப் படிப்பைத் தொடங்கப் போகிறார் மதுமிதா. அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திலும், நிருத்ய சங்கல்பாவின் பல்வேறு படைப்புகளிலும், இன்னும் பல அமைப்புகளிலும் முக்கியப் பங்கெடுப்பவர் மதுமிதா. அவர் கூறிய நன்றியுரையோடு இனிதே நிறைவடைந்தது அரங்கேற்றம்.
ஜெயா மாறன், அட்லாண்டா |