ஜூலை 2011: வாசகர் கடிதம்
35 ஆண்டுகளாக வட அமெரிக்கா வந்து செல்லும் நானும் என் மனைவியும் தென்றல் பத்திரிகையை முதல் இதழிலிருந்து படித்து வருகிறோம். தென்றல் மே, 2011 இதழ் அட்டைப் படத்தில் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் வண்ணப்படத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். பாபா நேரில் பேசுவதுபோல் இருக்கிறது.

நான் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோது பாபா அவர்களுக்கு 22 வயது இருக்கும். எங்களது ஊரான நெல்லைக்கு அருகில் இருக்கும் கோவில்பட்டிக்கு வருவார்கள். அங்கு இளையரசனேந்தல் ஜமீந்தார் வீட்டிலும் அன்றைய பிரபல ஓவியர் கொண்டைய ராஜு வீட்டிலும் தங்குவார்கள்.

பாபா அவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, சிறுவர்களாகிய நாங்கள் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு செல்வோம். பாபா மிக இனிமையாகப் பாடுவார். எங்களையும் பாடச் சொல்வார். நாங்கள் கர்ண கடூரமாக கத்திக்கொண்டு அவருடன் செல்வோம். என்ன வேண்டும் என்று கேட்பார். அந்தக் காலத்தில் கிராமப்பகுதியைச் சேர்ந்த எங்களுக்கு பிஸ்கட், சாக்லேட் எதுவும் தெரியாது. கடலை மிட்டாய் வேண்டுமென்று கேட்போம். பாபா வரவழைத்துக் கொடுப்பார்.

அ.ச.ஞா.பற்றி பா.சு. ரமணன் எழுதியிருந்த கட்டுரை மிகத் தெளிவாக இருந்தது. அவர் படித்த அதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் மொழியியல் படித்தேன். அ.ச.ஞா. அவர்களையும், கட்டுரையில் குறிப்பிட்டிருந்த அனைத்துத் தமிழ் அறிஞர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

பேரா. லிபியா ஞா. ராமானுசன்,
கேன்டன், மிச்சிகன்

*****


தென்றல் ஜூன் 2011 இதழில் சமயம் பகுதியில் 'மன்னார்குடி ராஜகோபால சுவாமி' பற்றிப் படித்தேன். ஒரு சிறு திருத்தம். கட்டுரை ஆசிரியர் மன்னார்குடியை 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். மன்னார்குடி 'அபிமான ஸ்தலம்' மட்டுமே அன்றி திவ்ய தேசம் கிடையாது. ஆழ்வார்களில் எவரும் ஸ்ரீ ராஜகோபால சுவாமியை மங்களாசாசனம் செய்யவில்லை.

ஸ்ரீராம்

*****


நான் என் மகள் வீட்டிற்கு வந்துள்ளேன். தேனின் இனிமையிலும் மதுரமான சேவையினை செய்துவருகிறது தென்றல். தென்றல் தவழ்ந்து வந்து இனிய எளிய காற்றால் மணம்வீசி மக்களுக்கு நன்மை செய்கிறது. சேவை மனப்பான்மையுடன், இன்றியமையா பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்து இயல், இசை, நாடக, செய்திகள், பண்பாளர்கள், வல்லுநர்களின் பேட்டிகளை பிரசுரித்து வரும் தென்றலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது மகள் பழைய தென்றல் இதழ்களைச் சேகரித்து வருகிறாள். அவற்றைப் படித்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கே.ஜெயராமன்,
சான்டா க்ளாரா, கலிஃபோர்னியா

*****


'சில மாற்றங்கள்' குறுநாவல் தொடர் நல்ல ஆரம்பம். அடுத்தது என்ன வரப்போகிறது என எதிர்பார்க்க வைக்கிறது. வீரபத்திராசன போஸ் - நல்ல கற்பனை. தமிழ்ப்பட டிரெய்லர் மாதிரி இல்லாமல், முழு நாவலும் இதுபோலவே சுவையாக இருக்கும் என நம்புகிறேன்.

விஷி ராமன் (ஆன்லைனில்)

*****


ஸ்ரீதர் சதாசிவனின் கதை என்றால் ('பழையன கழிதலும்', ஜூன் 2011) வித்தியாசமாக ஏதாவது கருத்து இருக்கும் என்று எண்ணிப் படிக்கத் துவங்கினேன். அப்படியே இருந்தது. இந்த எழுத்தாளரின் முற்போக்குச் சிந்தனை வியக்க வைக்கிறது. இதுபோன்ற கதைகளை வாசகர்களுக்கு வழங்கும் தென்றலுக்கு நன்றி!

சித்ரா வெங்கடராமன்,
மினியாபோலிஸ்

*****


பாகவதர் சின்னப்பாவை பற்றிய பா.சு. ரமணனின் கட்டுரைகள் மனதை உருக்கியது. இவர்கள் சந்தித்த வெற்றியும் தோல்வியும் எல்லோருக்கும் ஒரு படிப்பினை. இப்போது ஒரு படத்தில் நடித்தால் போதும் ஒரு படத்தில் பாட்டுப் பாடினால் போதும் பணம் வருகிறதோ புகழ் வருகிறதோ, உடனே ரசிகர்கள் மன்றம் தனி கவுரவம் எல்லாம் வந்துவிடுகிறது. ஈசல் பூச்சிகள் மாதிரி தினம் ஒரு நடிகர் ஒரு பாடகர் தோன்றுகிறார்கள். பாகவதர், சின்னப்பாவைப் போல் பாடிய நடிகர்கள் மகாலிங்கத்தைத் தவிர எவரும் இருந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ தெரியவில்லை. இருவருமே வறுமையில் இறந்தார்கள். பணமும் புகழும் நிரந்தரம் இல்லை என்பதற்கு அவர்கள் வாழ்க்கை ஓர் உதாரணம்.

பிரான்தியங்கரை ராமபத்ரன்

*****


'சில மாற்றங்கள்' குறுநாவல் நல்ல தொடக்கம். ஆம்ட்ராக் பயணம் நடந்ததா, இல்லையா? அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

மாலா கோபால் (இணையப் பக்கத்தில்)

*****


தென்றல் இதழில் சாதனையாளர்கள் வரிசையில் என்னை கௌரவப்படுத்தியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே அறியப்பட்ட என்னை உலகம் அறியும்படி உயர்த்தி விட்டீர்கள். காந்தி சுந்தர் அவர்களின் கைவண்ணத்தில் இன்னும் மிளிர்கின்றேன். மகிழ்ச்சி.

நீங்கள் தந்த ஊக்கமும் உற்சாகமும் என்னை மேலும் பல பொதுப் பணிகளில் ஈடுபடத் தூண்டுகோலாய் இருக்கும். நிச்சயம் இன்னும் சாதிப்பேன். நன்றி.

செல்லம் ராமமூர்த்தி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com