சுத்தப் பட்டிக்காடு!
சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டுக்குப் போய் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு வந்தான். முதல் முதலாக அமெரிக்கா வந்திருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்ததில் ஒரே மகிழ்ச்சி அவனுக்கு. அதே சமயம் அப்பாவின் முன்கோபத்தையும் அம்மாவின் அலட்சியப் போக்கையும் நினைத்து மனத்தில் ஒரு பயம் இருந்தது.

இரண்டு நாட்கள் ஒரு சம்பவமும் இல்லாமல் கழிந்தது. மூன்றாம் நாள் இரவு ஒரு நண்பனும் அவனுடைய மனைவியும் வந்திருந்தார்கள். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலையில் அவன் பயந்தபடியே பூகம்பம் வெடித்தது. அப்பா ஏதோ சொல்ல அம்மா அதற்கு ஆமாம் போட வாக்குவாதம் முற்றியது.

ராஜு ஒன்றுமே சொல்லவில்லை. மனதில் ஒரு விரக்தியும் வெறுப்பும் சேர்ந்தது. எத்தனை வருடம் கழிந்தாலும் இவர்கள் மாறவே மாட்டார்களா என்று. இதற்கு ஒரு முடிவு இன்றே கட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டான். வேலையில் நாட்டம் செல்லவில்லை. ராத்திரி வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தான். ஏதோ ஒரு சின்ன விஷயத்திற்காக அம்மா உம்மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தாள்.

ராஜு "அம்மா, உங்களுக்கு நினைவிருக்கா, தாத்தா பாட்டி ஊரிலிருந்து பம்பாய் வந்த சமயத்தில் நீங்க ரெண்டு பேரும் கிராமத்திலிருந்து வந்தவா, ஒரு இங்கிதமும் தெரியாது. சுத்தப் பட்டிக்காடு" என்று சொல்லிச் சொல்லி எவ்வளவு தடவை அவாளுடைய மனதைப் புண்படுத்திருக்கீங்க. இப்போ அதே வார்த்தையைச் சொல்ல எனக்கு ஐந்து நிமிஷம் கூட எடுக்காது" என்று அமைதியாகச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுத் தூங்கப் போய்விட்டான்.

அடுத்த நாள் காலையில் அப்பாவும் அம்மாவும் அவனிடம் தொங்கிய முகத்துடன் வந்தார்கள். "ராஜு, நேத்து ராத்திரி நீ சொன்னதுல இருந்த உண்மை எங்களுக்குப் புரியுதுடா. இனிமே பாட்டி தாத்தாகிட்ட போய் நாங்க மன்னிப்புக் கேக்க முடியாது. ஆனால், இங்கே இருக்கற வரைக்கும் உங்களோடு சந்தோஷமா இருக்கலாமே" என்றார் அப்பா. அம்மா மௌனமான புரிதலோடு அவனைப் பார்த்தாள்.

நீலகண்டன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com