வாழையிலை
"ஒரு கட்டு வாழையிலை வாங்கிண்டு வாங்கோ" என்று அம்மா கூற அப்பா விழித்துக் கொண்டே கடைக்குப் போனார். நானோ நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே தொலைக்காட்சி முன்னே உட்கார்ந்தேன். அம்மாவுக்கு விருந்து என்றால் வாழையிலையில்தான்.

நாளைக்கு எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான விருந்து. அம்மா கண்டிப்பாக வாழையிலையில்தான் பந்தி பரிமாறுவாள். என் அண்ணாவின் கேர்ள் ஃபிரண்டுக்கு அதிலே சாப்பிடத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அம்மா யோசிக்கவே இல்லை. ஆமாம் இது ஒரு 'சிகாகோ டு சென்னை' கதைதான். அதன் முடிவு சுபமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்.

என்னுடைய அண்ணண் ஸ்ரீநிதி, வர்ஜீனியா யுனிவர்சிடியில் மாஸ்டர்ஸ் இன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் படித்துக் கையில் ஒரு கேர்ள் ஃபிரண்டுடன் பட்டம் வாங்கினான். இந்த விஷயத்தைக் கேட்டு அப்பா அதிரவில்லை என்றாலும் அம்மா சில நாட்கள் பேசாமலே இருந்தாள். தனிமையில் அழுது கடவுளிடம் வாதம் செய்து, பெருமாளிடம் பெடிஷன் போட்டு பின்பு அஷ்டலக்ஷ்மியிடம் சலித்துச் சரணடைந்தாள். நானும் அண்ணாவும் எல்லா இந்திய அண்ணா தங்கை போலவேதான். வெளியில் குடுமிப்பிடி சண்டை, ஆனால் தனிமையில் கூட்டுக் களவாணிகள். ஸ்ரீநிதியின் கேர்ள் ஃபிரண்ட் ஆஷ்லியைப் பற்றி எனக்கு ஒரு வருடமாகவே தெரியும். நானும் அவனும் chat பண்ணிக்கொண்டு இருக்கும்போது எனக்கு தவறாக "Will meet you at the pizza place at 5, love" என்றும், அவளுக்கு "இங்க பொங்கல் வடை எல்லாம் கிடைக்காதுடீ" என்றும் அனுப்பிவிட்டான். இப்போ யோசித்தால் அவன் சரியான கேடி, எல்லாமே பிளான் பண்ணித்தான் அனுப்பி இருப்பான் என்று தோன்றுகிறது.

எப்படியோ, ஆஷ்லி பற்றிய கதைகள் ஆரம்பித்தன. அவளை நேரில் காணவில்லை என்றாலும், ஓரளவிற்கு அண்ணனிடமிருந்து தெரிந்து கொண்டேன். ஆஷ்லி அமெரிக்கன் என்றாலும், 1960களின் இந்திய அம்மாக்களின் குணங்கள் நிறைவாக இருந்தன. எனக்கோ அவளைப்பற்றிக் கேட்கக் கேட்க விசுவின் படம் பார்ப்பது போலத் தெரிந்தது. என்ன, ஆஷ்லி இளமையான ஒரு கமலா காமேஷ். அவ்வளவுதான். இப்போது இந்தியாவில் கூட இப்படி யாரும் பாய்ஃபிரண்ட்/புருஷன் சொல்படி கேட்டு நடப்பதில்லை. நானே என் வழி தனி வழி என்று நினைக்கும் பெண். ஆக, ஆஷ்லியை அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். தன்னுடைய மகளைவிட.

ஆஷ்லி பற்றி ஸ்ரீநிதி சொன்ன உடனேயே நாங்கள் இருவரும் அம்மாவுக்கு ஏன் ஆஷ்லியைப் பிடிக்காது என்ற லிஸ்ட் தயாரித்து விட்டோம். இது அவர்கள் இருவரும் சந்திக்கும்போது எங்களுக்கு மிகவும் உதவும் என்று எண்ணினோம். அதில் இருந்தது பாயிண்ட் நம்பர் 35: எப்பொழுதும் சாப்பிடுவது ஃபோர்க் அண்ட் ஸ்பூனில்தான். வாழையிலையில் ஃபோர்க் அண்ட் ஸ்பூனில் எப்படி சாப்பிடுவது? ரசத்தை எப்படிக் குடிப்பது? மிகக் கடினமாச்சே. கைக்கும் வாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் ஃபோர்க் அண்ட் ஸ்பூன் சுத்த வேஸ்ட். அண்ணனோ அமெரிக்கா போனதுமே சாப்ஸ்டிக்க்கில்கூடச் சாப்பிட ஆரம்பித்து விட்டான். ஃபோர்க் ஸ்பூனெல்லாம் அவனுக்கு ஜுஜுபி.

நாளை வாழையிலைக்கும் ஃபோர்க் அண்ட் ஸ்பூனுக்கும் நடக்க இருக்கும் போராட்டம் பற்றி நினைத்தபடியே தூங்கிப் போனேன். அம்மாவோ நாளை ஆஷ்லியைப் பார்த்துப் பழக வேண்டும் என்ற கவலையுடன் தூங்கினாள். இத்தனைக்கும் அம்மா ரொம்பவும் ஓவராக்ட் ஒன்றும் பண்ணவில்லை. ஸ்ரீநிதி பற்றி நன்றாகவே அறிவாள், அத்துடன் இப்போது எல்லா தமிழ்க் குடும்பத்திலும் ஒரு அமெரிக்க மருமகளோ மருமகனோ இருக்கிறார்கள். தன்னை நன்றாகவே தயார்படுத்திக் கொண்டாள். ஃபேஸ்புக்கில் கூட அக்கௌன்ட் ஓபன் செய்திருந்தாள். ஆனால், ஆஷ்லியைப்பற்றிச் செய்தி வந்தவுடன் எல்லா அம்மாக்கள் போலவும் அதிர்ந்தாள். என்னுடைய அருமைத் தயிர்சாதம் சாப்பிடும் பையன் எப்படி அரையும் குறையும் போடும் அமெரிக்கனுடன் குடும்பம் நடத்துவான் என்று யோசித்தாள். பேரன், பேத்தி பெயர்கள் எப்படி இருக்கும் என்று புலம்பினாள். ஆனால் அம்மாவின் சகோதர சகோதரிகள் எல்லாம் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்கள் வீட்டில் சற்று முன்னதாகவே இந்த பாம் வெடித்து விட்டிருந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

ஆஷ்லியும் ஸ்ரீநிதியும் சிங்காரச் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். கை கோக்காமல், குர்த்தாவும் போனி டெய்லுமாக வந்த ஆஷ்லி அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கை கூப்பினாள். என்னையும் பாட்டியையும் கட்டி அணைத்தாள். என்னுடைய ரிப்போர்ட் கார்டில் 100க்கு 200 மதிப்பெண் பெற்றாள். வீட்டுக்கு வரும் வழியில் அப்பா அமெரிக்காவைப் பற்றி க்விஸ் ப்ரொகிராமே நடத்த அம்மா ஆஷ்லியை பார்த்தும் பார்க்காத மாதிரி அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.

சென்னை டிராஃபிக்கில் வீட்டுக்கு வருவதற்குள் பசி பல மடங்கு அதிகரித்தது. இருந்தாலும் ஆஷ்லி சாப்பிடுவதற்கு முன்பு குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறவும் நானும் ஸ்ரீநிதியும் கண்ணடித்தோம். ஆனால் அவள் அம்மாவுடன் பரிமாறுகிறேன் என்றதும், அவசரமாகச் சமாளித்து, பாதி உலகத்தை தாண்டி வந்திருப்பதால் இந்த தடவை முதலில் சாப்பிடலாம் என்றோம்.

வாழையிலைகள் வெளியே வந்தன. எனக்கும் ஸ்ரீநிதிக்கும் BP மேலே எகிறியது. விதியோ சதியோ ஆஷ்லியிடம் நுனியிலை வந்து சேர்ந்தது. நான் ஸ்ரீநிதியைப் பார்த்து சைகை செய்வதற்கு முன்பாகவே ஆஷ்லி இலையைச் சரியாக வைத்து, தண்ணீர் தெளித்து, துடைத்தாள். என் வாயில் ஈ ஊர, அம்மா அப்பாவைப் பார்த்து பெருமிதத்துடன் பெருமூச்சு விட, ஆஷ்லி நிதானமாக, நிரந்தரமாக எங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள். சுபம்.

மீரா ராமநாதன்,
டான்பரி, கனெக்டிகட்

© TamilOnline.com