சேப்புக்குரங்கு கறி
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வேலையிலிருந்த 'பையனுக்கு' பெண்ணை மணம் செய்து கொடுத்த சூட்டோடு, ஐம்பத்தைந்து வயதுக்குள் பணி ஓய்வு வாங்கிக்கொண்டு, மனைவியுடன் இந்திய மண்ணை விட்டு அமெரிக்காவுக்குப் பறந்து வந்தவர் அவர். பேரன், பேத்தி பிறந்த பிறகு தாத்தா, பாட்டியின் உலகமே அவர்களைச் சுற்றித்தான். பாட்டியும், தாத்தாவும் தமிழிலேயே கொஞ்சி வளர்த்ததும், ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்ததும் சிறார்களின் தமிழ்ச் சொல்வளத்தை வளர்த்தது!

பாட்டி குடித்தனம் செய்ததெல்லாம் வட இந்தியாவில். கல்லூரியில் படிக்காவிட்டாலும் எல்லாக் கலைகளிலும் எக்ஸ்பர்ட். பாட்டு, தையல், சமையல் எல்லாவற்றிற்கும் யோசனை கேட்க இந்தியப் பெண்களின் கூட்டம் பாட்டியை மொய்க்கும். பாட்டி மூச்சுவிடாமல் பேசுவதைக் கண் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் நடுவே பேத்தியும் உட்கார்ந்திருப்பாள். பாட்டியின் பேச்சு தமிழிலிருந்தாலும், ஹிந்தி, ஆங்கிலச் சொற்களும் தாராளமாகக் கலந்திருக்கும். ஒருமுறை தனது இளவயதில் காந்திஜியைப் பார்த்த அனுபவத்தைக் கூறிக்கொண்டிருந்தார். எல்லோரும் கடைப்பிடித்த காந்திஜியின் போதனைகளை விவரித்து விட்டு, கடைசியில் சத்யாக்ரக இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக 'பைஸா தே, பைஸா தே!' (காசு கொடுங்கள்) என்று காந்திஜி கேட்டுக்கொண்டார் என்று சொல்லிச் சற்று நிறுத்தினார். பேத்தி குறுக்கிட்டு, 'பாட்டி, காந்தி சொன்னபடி எல்லோரும் நடந்தீங்களா?' என்று கேட்டாள். பாட்டி ஆக்ரோஷத்துடன், "காந்தி மஹான் இல்லையா, அவர் சொன்னபடி நடக்கத்தான் வேண்டும்!' என்றார். சிறுமி வெடுக்கென்று, "காந்தி 'பேசாதே, பேசாதே!' ('பைஸா தே, பைஸா தே!') என்று சொன்னதை மட்டும் நீ ஏன் கேட்கலை?" என்றதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.

தாத்தா தூங்கிக் கொண்டிருந்தார். பேரப்பிள்ளை ஓடி வந்து அவரை எழுப்பினான். 'சேப்புக்குரங்கு கறி சாப்பிடப் பாட்டி உன்னைக் கூப்பிடுகிறாள்" என்றான். தாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சமையலறைக்குப் போய் வாணலியில் கமகமவென்று வதங்கிக் கொண்டிருந்த சேப்பங்கிழங்கு ரோஸ்டைப் பார்த்த பின்தான் அவருக்கு உயிர் வந்தது!

தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்த சிறுவன் கேட்ட கேள்வி அவரை உலுக்கிவிட்டது. “பக்கத்து வீட்டு மாமா 'ட்ரங்கர்ட்' (குடிகாரர்) என்று பாட்டி சொன்னது உண்மையா?”. பதிலுக்கு ஏதோ மழுப்பிவிட்டு, வீட்டுக்குப் போனவுடன் மனைவியைக் கேட்ட பிறகுதான் தெளிவு பிறந்தது. அடுத்த வீட்டுக்கு ஒரு மாமா புதுசா 'குடி வந்திருப்பதாக' சொல்லியிருக்கிறார் பாட்டி. பேரனோ புதிய மாமாவைக் குடிகாரர் ஆக்கிவிட்டான்!

அ. சந்திரசேகரன்,
மோர்கன் ஹில், கலிஃபோர்னியா

© TamilOnline.com