ஃபேஸ்புக்கில் ஓராண்டு
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை!

ஓராண்டு உன் முகம் பார்த்தபின்
கொஞ்சம் அறிவு ம(ய)ங்கியது
ஆனால் கவிதை பொங்கியது!

முகப் புத்தகத்தில் என் அகத்தைப் புதைத்தேன்
என் முகம் உன் முகமாய்த் தெரிகிறதே

பழைய நண்பர்கள் பக்கத்தில் வந்தார்கள்
கன்றுக் குட்டி வயது நண்பர்கள்
கந்து வட்டி போட்டுப் பெருத்திருந்தனர்!
பங்கிட்டு நண்பரும் பங்காளியானார்!

சுவையான செய்திகள் சுடச்சுட வந்தன
பண்டிகை நேரத்தில் பாசப் பரிமாற்றங்களாயின!
சிலர் முகம் மாற்றி முழுமை அடைந்தனர்
மறந்த பாட்டு மனதைத் தொட்டது!
என் பெருமூச்சில் உன் ஸ்நாக்கின் வாசம்!
என் இமெயில் நகைச்சுவை உன் முகத்தில்

சில புத்தகப் புழுக்கள் தினமும் கடித்தன!
என் இடுகைகளைப் பல கைகள் பதம் பார்த்தன!

வயதை மறந்து வாலிபம் பேசினோம்
குரூப்புகளில் குவிந்து கும்மி அடித்தோம்
காமென்டு அடித்து கலாட்டா செய்தோம்
ஆறுதல் சொல்லிக் கண்ணீர் துடைத்தோம்
பாட்டும் பரதமும் பஜனையும் பகுத்தறிவும்
பாங்குடன் பகிர்ந்தோம்

கண்ணா -> லைக்கை பார்த்து லட்டு தின்ன மறந்தாய்!
காப்பி அடித்துப் புதுக் காப்பியம் படைத்தாய்
தத்துவத்தை தத்தெடுத்து தவமின்றி குருவானாய்
நிகழ்வுகளை நிழற்படமாய் நேரடி ஒலி(பர)பரப்பி நீயும் நிருபரானாய்

நாளொரு நியூசும் பொழுதொரு போஸ்டுமாய்
வயதொன்று கூடியதுதான் மிச்சம்!
இதோ பிடியுங்கள் இனிப்பு
"மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!"

அபயநாதன் ராதா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com