கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதுகளுக்கான விழா டொரண்டோவில் ஜூன், 18 அன்று ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இவ்வாண்டு எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களித்தவர் இவர். 25க்கு மேலான நூல்கள் எழுதியுள்ளார். இவருடைய 'நனவிடை தோய்தல்' மிகப் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இவருக்கு அதிகப் புகழ் தேடித்தந்த 'சடங்கு' நாவல் 'ஸிவீtuணீறீs' என்ற பெயரில் பேரா. செல்வா கனகநாயகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு அண்மையில் வெளியானது. தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் இயல் விருதை வழங்க எஸ்.பொ. பெற்றுக்கொண்டார்.
எஸ்.பொ.வை அறிமுகம் செய்து ஜெயமோகன் பேசும்போது ஈழத்து இலக்கியக்காரர்களில் இருவர் முக்கியமானவர் என்று கூறினார். ஒருவர் மு. தளையசிங்கம், மற்றவர் எஸ்.பொன்னுத்துரை. எஸ்.பொ. தன்னுடைய உள்ளுணர்வின் தடம்வழியே தன்னை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திக்கொண்டவர். 'சடங்கு' நாவலில் ஓரிடத்தில், ரயில் வண்டியில் பயணம் செய்யும் ஒருவர் "யார் இது குடித்துக் கிடப்பது?" என்று கேட்பார். மற்றவர் "அது எஸ்.பொ" என்று பதில் கூறுவார். இப்படித் தன்னையே கேலி பண்ணி எழுதியவர் எஸ்.பொ. அவருக்கு விருது கிடைப்பது மிகவும் தகுதியானதே எனக் கூறினார். தனது ஏற்புரையில் எஸ்.பொ. தான் ஈழத்துப் பாணன் என்றும் தனக்குப் பிடித்ததையே தான் படைப்பதாகவும், 60 வருட எழுத்து ஊழியத்தில் 40க்கு மேலே நூல்கள் எழுதியிருந்தாலும் இலங்கை அரசாங்கம் தனக்கு ஒரு கௌரவமும் செய்யவில்லை என்றும், தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன: புனைவு இலக்கியப் பிரிவில் 'பதுங்கு குழி' நாவலுக்காக பொ. கருணாகரமூர்த்திக்கும், 'காவல் கோட்டம்' நாவலுக்காக சு. வெங்கடேசனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'பண்பாட்டுப் பொற்கனிகள்' நூலுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூலுக்கு சு.தியடோர் பாஸ்கரனுக்கும், கவிதைப் பிரிவில் 'இருள் யாழி' தொகுப்புக்காக திருமாவளவனுக்கும், 'அதீதத்தின் ருசி' தொகுப்புக்காக மனுஷ்யபுத்திரனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட 'கணிமை விருது' முத்து நெடுமாறனுக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற 'சுரா 80' விழாவில் வழங்கப்பட்டது. மாணவர் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர் சிரோதி இராமச்சந்திரன்.
விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.
செய்திக் குறிப்பிலிருந்து |