மயிலை கபாலீஸ்வரர் கோயில்
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தர் 'கானல் மடமயிலை', 'உலாவும் உயர் மயிலை' என்றும், திருமழிசை ஆழ்வார் 'நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்றும், திருமங்கையாழ்வார் 'தேனமர் சோலை மாட மயிலை' என்றும் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்கு இறைவனின் நாமம் கபாலீஸ்வரர். இறைவியின் நாமம் கற்பகாம்பிகை. சிறப்புமிகு தீர்த்தங்கள் கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாயு தீர்த்தம், கங்கை தீர்த்தம், ராம தீர்த்தம். சுக்கிர தீர்த்தம் கோவிலின் வடகிழக்கில் அமைந்துள்ளது.

தலப்பெருமை
மயில் உருவில் அம்பிகை இங்கே இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்னும் பெயர் ஏற்பட்டது. பிரமன் இத்தலத்துக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு கர்வம் நீங்கி மீண்டும் தனது படைப்பாற்றலைப் பெற்றார். சுக்கிர பகவான் இழந்த கண்ணைத் திரும்பப் பெற்றது இங்கேதான். ராமபிரானும் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கியதாக வரலாறு. சக்கரம் பெறும் பொருட்டு திருமால் நடனம் புரிய, அதைக் கண்டு மகிழ்ந்த விநாயகர் சக்கரத்தை மாலுக்கு அளித்ததுடன் தானும் கூத்தாடியது இத்தலத்தில்தான். ஆறுமுகப் பெருமான் ஆராதனை செய்து வடிவேலைப் பெற்று சிங்கார வேலனாகக் கோவில் கொண்டிருப்பதும் இங்குதான். ஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததும் இத்தலத்தில் தான். அதனால் இது சஞ்சீவினி க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. பொய்கையாழ்வார், பேயாழ்வார், வாயில் நாயனார், குறள் தந்த வள்ளுவர் ஆகியோர் தோன்றிய தலமும் இதுவே! ஆதலால் இத்தலம் பதிமயிலை எனப்படுகிறது.

ஒருசமயம் கயிலையில் சிவபெருமான் உமாதேவிக்கு ஞான உபதேசம் செய்தபோது அதில் கவனம் செலுத்தாமல் அருகில் ஆடிக் கொண்டிருந்த மயில்மீது கவனத்தைச் செலுத்தியதால் கோபம் கொண்ட சிவன், உமையை மயிலாகுமாறு சபித்தார். அன்னை பிழை உணர்ந்து வணங்கி சாப விமோசனம் வேண்ட, மயிலுருவில் தவம் செய்து தம்மை வணங்கி வருமாறும், அவ்வாறு வணங்கி வரும் காலத்தில் என்று சிவலிங்கத்தைக் காண்கிறாரோ அன்று உமையை ஆட்கொள்வேன் என்றும் ஆசி கூறியருளினார்.

அன்னையும் அவ்வாறே பல ஆண்டுக்காலம் தவம் செய்து வரும்போது ஒருநாள் மயிலை திருத்தலத்தில் புன்னை மர நிழலில் சிவலிங்கத்தைக் கண்டாள். தம் அலகினால் மலர்களைக் கொய்து வந்து அர்ச்சிக்க, அகமகிழ்ந்த சிவன் காட்சி தந்து உமாபதியானார்.

ஆலய அமைப்பு
கிழக்கு மாடவீதியில் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் தாண்டிக் கோவிலினுள் நுழைந்தால் நர்த்தன விநாயகர் சன்னதி, அடுத்து அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதி. தெற்குப் பிரகாரத்தில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். வடக்கு நோக்கி இருக்கும் பழனி ஆண்டவர், வாயில் நாயனார் சன்னதிகளுக்குப் பின் பன்னிருகால் திருமுறை மண்டபத்தைக் காணலாம். நவராத்திரி ஒன்பது நாளும் அருள்மிகு கற்பகாம்பிகை வேத மண்டபத்தில் கொலுவீற்றிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் போது இவ்விடம் அலங்காரம் செய்யப்படும். ஆலய நூல் நிலையம், திருமுறை பாராயண அறை மண்டபத்தின் வலப்புறம் உள்ளது. அருணகிரிநாதருக்குத் தனிச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

மேலக் கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால் கடல்போல் காணப்படும் பரந்துள்ள திருக்குளம் கபாலி தீர்த்தம். அதன் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. மேற்குக் கோபுரத்தின் வடபுறம் கற்பக விநாயகர், பாலமுருகனை தரிசிக்கலாம்.

இக்கோவிலில் சிவபெருமான் சிவலிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பாடல் பெற்ற 274 தலங்களில் 40 தலங்களில் மட்டும் இறைவன் மேற்குப் பார்த்து வீற்றிருக்கிறார். இதில் திருமயிலையும் ஒன்று. சன்னிதியின் உள்ளே துர்கை, சண்டிகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, செல்வ கணபதி, சோமாஸ்கந்தர், கற்பகாம்பிகை, உற்சவ மூர்த்திகள், 63 நாயன்மார்களை தரிசிக்கலாம். அம்பாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பிரகாரச் சுவர்களில் பாமாலைகளும், துதிப்பாடல்களும் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வெளியில் வந்தபின் அம்பாள், சுவாமியை வணங்கிய பின் ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாப்பிராட்டி, அனுமன் உள்ள திருத்தூணை வலம்வந்து பின் கொடிமரம் அருகே நின்று வணங்கியபின் இருப்பது பூம்பாவை சன்னதி. வடக்குப் பிரகாரத்தில் வலதுபுறம் புன்னைவன நாதருக்கு அம்பாள் மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சி. அருகில் தலவிருட்சம் புன்னை மரம், மயில்கள் உள்ள கூண்டு ஆகியவற்றைக் காணலாம். பின் சனீஸ்வர பகவான் சன்னதி, நவக்கிரக சன்னதிகளை வலம் வந்து, சுந்தரேசர், ஜகதீசர் சன்னதிகளைக் காணலாம்.

கோவிலில் பங்குனிப் பெருவிழா 10 நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் காலை அதிகார நந்திசேவை, ஐந்தாம்நாள் இரவு ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளின் மஹா தரிசனம் பார்க்கப் பரவசம். தேர்த்திருவிழாவும் அறுபத்துமூவர் விழாவும் கோவிலின் சிறப்பான விழாக்கள். 'கபாலீ, கபாலீ!' என பக்திப் பரவசத்துடன் உச்சரித்தவாறே பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. நான்மறைகளோடு தமிழ் மறையும் ஓதப்படுவது சிறப்பு. பாபநாசம் சிவன் அம்பாள் மீதும், சிவன்மீதும் நிறையக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். அவர் பாடியிருப்பதைப் போலவே கபாலியையும், கற்பகாம்பாளையும் காணக் கண் கோடிதான் வேண்டும். கபாலியையும், கற்பகத்தையும் கண்டு தொழுதிட எவ்வினையும் நீங்கும் என்பது பக்தர்களின் அனுபவம். கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரைத் தொழுவோம். கவலைகளை வெல்வோம்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com