கி.வா.ஜகந்நாதன்
வாகீச கலாநிதி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்று கவிஞராகவும், சிறந்த எழுத்தாளராகவும், நாடறிந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர் கிருஷ்ணராஜபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்னும் கி.வா. ஜகந்நாதன். இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று கிருஷ்ணராஜபுரத்தில், வாசுதேவ ஐயர், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். குடும்பம் சேலம் அருகே உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின் வாங்கல், குளித்தலை பள்ளிகளில் கல்வியைத் தொடர்ந்தார். சிறுவயது முதலே காந்தமலை முருகப் பெருமான்மீது மிகுந்த பக்தி கொண்டவராகத் திகழ்ந்த கி.வா.ஜ., இளம் வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்றவற்றைத் தம் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். அவற்றை மனப்பாடமாகக் கூறும் வல்லமையும் பெற்றிருந்தார். பதினான்காம் வயதில் சிதம்பரம் நடராஜப் பெருமானின் மீது 'போற்றிப் பத்து' என்ற பதிகத்தை எழுதினார். அதுவே அவரது முதல் முயற்சி. தொடர்ந்து தனது வழிபடு தெய்வமான முருகப் பெருமானின் மீது பல பாடல்களைப் புனைந்தார்.

பள்ளியிறுதி வகுப்புப் படிக்கும்போது கி.வா.ஜ.வுக்கு முடக்குவாதம் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் படிப்பு தடைப்பட்டது. ஆனாலும் மனம் சோராமல் இலக்கியத்தின் மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். இயல்பாகவே தமிழார்வமும் பற்றும் கொண்டிருந்த அவர், கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 'ஜோதி' என்ற புனைபெயரில் அவர் எழுதிய கவிதைகள், அக்காலப் பிரபல இதழ்களான 'தமிழ்நாடு' போன்றவற்றில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. காந்திஜியின் விடுதலை இயக்கம் கி.வா.ஜ.வை ஈர்த்தது. அதன்படி தூய கதராடை உடுத்தத் துவங்கினார். தானே ராட்டையில் நூல் நூற்றுக் கதர் ஆடைகளை அணிந்தார். மோகனூரில் இருந்த திலகர் வாசக சாலைக்குச் சென்று பத்திரிகை படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது தேசபக்தியை வளர்த்தது. சுதந்திரதேவி திருப்பள்ளியெழுச்சி, திருக்கோயில் போன்ற பல பாடல்களை எழுதினார்.

ஆண்டுதோறும் காந்தமலை முருகனுக்குத் திருவிழா நடக்கும். அப்படி நடந்த ஒரு திருவிழாவில் கி.வா.ஜ.வுக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் அவரது முதல் பேச்சு. அப்போது அவருக்கு வயது 22. அன்பு என்ற தலைப்பில் அவர் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போல் அவர் பேசியதைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. அதுவே கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஆனது. அவர் பேச்சைக் கேட்ட கிச்சு உடையார் என அழைக்கப்பட்ட சேந்தமங்கலம் சுயம்பிரகாச சுவாமிகள், கி.வா.ஜ.வை அவ்வூரிலேயே தங்கிப் பணியாற்றும்படி வேண்டிக் கொண்டார். அதை ஏற்ற கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். அதே சமயம் சுவாமிகளிடம் துறவு பெற வேண்டுமென்றும் விரும்பினார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆசிரமத்தில் சிலகாலம் வசித்த கி.வா.ஜ. சொற்பொழிவு ஆற்றுவதையும், குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதையும் தனது கடமையாகக் கொண்டார். சுவாமிகள் மூலம் அறிமுகமான ட்ரோவர் துரை என்பவருக்கும் தமிழ் கற்பித்தார்.


ஒருமுறை சேந்தமங்கலம் வந்திருந்த ஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளின் சொற்பொழிவைக் கேட்ட கி.வா.ஜ. அவரிடம் தமிழ் பயிலும் தமது ஆர்வத்தை வெளியிட்டார். ஆனால் சுவாமிகளோ அதை ஏற்காது, உ.வே.சா.விடம் பயிலும்படி ஆலோசனை கூறினார். உ.வே.சா. அப்போது சிதம்பரத்தில் ஆசிரியப்பணி ஆற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து தமது விருப்பதைத் தெரிவித்தார் கி.வா.ஜ. வந்தவரின் அறிவுத்திறனை உணர்ந்த உ.வே.சா. அதற்குச் சம்மதித்தார். தான் சென்னைக்குச் செல்ல இருப்பதாகவும், அங்கு வந்து தன்னுடன் தங்கிப் பயிலச் சம்மதமா என்றும் கேட்டார். கி.வா.ஜ. ஒப்புக் கொண்டார்.

சென்னையில் குருகுல வாசம் துவங்கியது. அது கி.வா.ஜ.வின் வாழ்வில் அடுத்த திருப்புமுனை ஆனது. அதுமுதல் உ.வே.சா.வின் தமிழ்ப் பணிக்கு உதவுவதையே தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டார். உ.வே.சா.வுக்கு உதவியாளராக மட்டுமல்லாமல், அவரது அன்புக்குகந்த மாணவராகவும் இருந்து இலக்கண, இலக்கியங்கள், சங்க நூல்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள், சிற்றிலக்கியங்கள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல கூறுகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசும் கி.வா.ஜ.வுக்குக் கிடைத்தது. ஆய்வுப்பணி, பதிப்புப்பணி என எழுத்துலகின் அனைத்துக் கூறுகளையும் ஆசான் மூலம் கற்றறிந்த கி.வா.ஜ., ஆசானின் அப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். இது குறித்து உ.வே.சா., தான் பதிப்பித்த தக்கயாகப் பரணி நூலின் முன்னுரையில், "இந்நூலைப் பரிசோதித்துப் பதிப்பித்து வரும் நாட்களில் உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளை அன்போடு செய்தவர்.......... மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாத ஐயரும் ஆவார். இவர்களுள் ஸ்ரீ ஜகந்நாத ஐயர் எடுத்துக் கொண்ட உழைப்புப் பாராட்டத் தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

உ.வே.சாவுக்கு உதவியாக இருந்ததுடன் தாமும் சிறுசிறு நூல்களை எழுதத் துவங்கினார் கி.வா.ஜ. 1932ம் ஆண்டில், கி.வா.ஜ.வுக்கு, அலமேலு அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. தொடர்ந்து 'கலைமகள்' இலக்கிய இதழில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. உ.வே.சா.வின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஏற்றுக்கொண்ட கி.வா.ஜ., பத்திரிகையாளராக, இதழாளராக, எழுத்தாளராக, இலக்கியக் கட்டுரையாளராக கலைமகளில் பல சாதனைகளைப் படைக்கத் தொடங்கினார். துணையாசிரியராகப் பணியில் சேர்ந்த அவர், தமது திறமையால் கலைமகளின் ஆசிரியராக உயர்ந்தார். அதனை ஒரு தரமான இலக்கிய இதழாக உயர்த்தினார். அதற்காகக் கடும் உழைப்பை மேற்கொண்டார். அவரது ஆசிரியர் பொறுப்பில் தரமான பல கட்டுரைகளைத் தாங்கிய இதழாகக் கலைமகள் வெளிவந்தது. பண்டை இலக்கியங்களை ஆராய்ந்து பதிலளித்த அவரது 'விடையவன் பதில்கள்' அக்காலத்தில் பிரபலமான ஒன்று. அத்துடன் உ.வே.சா.வின் பணிகளுக்கும் அயராது உதவி வந்தார் கி.வா.ஜ.

தான் உயர்ந்தது மட்டுமல்லாமல் கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, த,நா. குமாரஸ்வாமி, சிதம்பர சுப்ரமணியன், புதுமைப்பித்தன் அ.ச.ஞா., போன்ற எழுத்தாளர்களையும், அநுத்தமா, அகிலன், மாயாவி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எல்லார்வி, பி.வி.ஆர்., என இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் தொடர்ந்து கலைமகளில் எழுதச் செய்து ஊக்குவித்தார். அவர்களது உயர்வுக்குக் காரணமாக அமைந்தார். இதுபற்றி அ.ச.ஞா., "எழுத்தைப் பொறுத்தவரை முழுச்சோம்பேறியாக இருந்த என்னை விடாமல் சொல்லிச் சொல்லி மாதந்தோறும் எழுதுமாறு ஓர் ஏற்பாடு செய்தார் கி.வா.ஜ. எழுத்துத்துறையில் நான் புகுந்ததற்கு நண்பர் கி.வா.ஜவும் 'கலைமக'ளுமே காரணமாகும்" என்று குறிப்பிட்டிருக்கிறார், தனது 'நான் கண்ட பெரியவர்கள்' என்னும் நூலில்.

'என் சரித்திரம்' என்ற தலைப்பில் உ.வே.சா. தமது வாழ்க்கை வரலாற்றை எழுதி வந்தார். ஆனால் அது முற்றுப்பெறும் முன்னேயே திடீரென அவர் காலமானார். தன் தந்தையை இழந்த நான்கே நாட்களில் தன் குருவான உ.வே.சா.வையும் இழந்தது கி.வா.ஜவுக்குப் பேரிழப்பாக இருந்தது. மனதைத் தேற்றிக் கொண்ட அவர், ஆசிரியரின் முற்றுப் பெறாத அந்நூலை எழுதி முடித்து ஆசிரியரின் தவ வாழ்க்கைக்குப் புகழ் சேர்த்தார்.

நாடோடிப் பாடல்கள் மீது கி.வா.ஜ.வுக்கு மிகுந்த நாட்டமிருந்தது. அதற்குக் காரணம் இந்தியா முழுமையும் பயணம் செய்து நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்துத் தொகுத்த தேவேந்திர ஸத்யார்த்தியின் நட்புதான். தானும் அதுபோலவே பாடல்களைத் தொகுக்க ஆர்வம் கொண்ட கி.வா.ஜ., பல கிராமங்களுக்கும் பயணம் செய்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களை பாடச்சொல்லிக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவற்றைப் பின்னர் தொகுத்து நூலாக வெளியிட்டார். தான் அவற்றைச் சேகரித்த விதம் குறித்து, "பெரும்பாலும் பெண்களே இவற்றைப் பாடுகிறார்கள், அவர்களிடம் பாடு என்றால் பாட மாட்டார்கள். ஆனால் நாம் பாடத் தொடங்கினால் அவர்கள் நாணத்தை விட்டுப் பாடுவார்கள். இந்தத் தந்திரத்தை மேற்கொண்டு அவர்கள் வாயிலிருந்து பாடல்களை வருவித்தேன்" என்கிறார், தனது தெய்வப்பாடல்கள் நூல் முன்னுரையில். இது தவிர ஏற்றப்பாட்டுக்கள், திருமணப் பாடல்கள், தமிழ்ப் பழமொழிகள் போன்றவை அவரது தொகுப்பு நூல்களாகும். நாட்டுப்புறவியல் பற்றி அவர் ஆய்ந்து எழுதிய 'மலையருவி' என்ற நூலும் குறிப்பிடத் தகுந்தது. அந்த வகையில் நாட்டுப் புறப்பாடல் சேகரிப்பாளர்களின் முன்னோடியாக கி.வா.ஜ.வைக் கருதலாம். நாட்டுப்பாடல்கள் மட்டுமல்ல; தமிழர்களின் பண்டைப் பொக்கிஷமான பழமொழிகளையும் தேடிச் சேகரித்துத் தந்துள்ளார் கி.வா.ஜ. சுமார் 22000த்துக்கு மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கி.வா.ஜ. சிறந்த சிறுகதையாசிரியரும் கூட. அன்பு, மனிதநேயம், கலாசாரப் பெருமை போன்றவற்றை வலியுறுத்துவதாக அவரது கதைகள் அமைந்திருந்தன. இது குறித்து அகிலன், "திரு கி.வா.ஜ., அவர்களின் சிறுகதைகளின் அடித்தளத்திலே ஊடுருவி மணப்பது அன்பு, பவளமல்லிகை போல் மணம் சொரியும் அன்பு. கதைகளில் கி.வா.ஜ. அவர்களின் தனித்தன்மையான அன்பின் முத்திரையைக் காணலாம். அவர்களுடைய உள்ளத்தைக் காணலாம்" என்கிறார். சங்க இலக்கியம் மற்றும் இலக்கணம் குறித்து கி.வா.ஜ., எழுதிய ஆய்வுநூல்கள் குறிப்பிடத்தகுந்தன. சிறு குழந்தைகளுக்காக விளையும் பயிர், தேன்பாகு போன்ற தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தொல்காப்பியம் பற்றிய இவரது ஆய்வு நூல் முக்கியமானது. இவரது 'தமிழ் நூல் அறிமுகம்' பண்டை நூல்கள் பற்றிய அறிமுக மற்றும் ஆய்வுக் குறிப்பாக விளங்குகிறது. திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் போன்றவற்றுக்கு அவர் எழுதியிருக்கும் விளக்கவுரைகள் அவரது நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுவன. கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியர் மட்டுமல்லாமல், சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தார். அவருடைய 'தமிழ்க் காப்பியங்கள்' என்னும் ஆய்வு நூலும், 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் கட்டுரை நூலும் அவரது ஆய்வுத் திறனுக்குச் சான்று பயப்பவை. இவருடைய 'கவி பாடலாம்' நூலைப் படித்துக் கவிஞரானவர்கள் பலர்.

சொற்பொழிவு, சிலேடைகளிலும் கி.வா.ஜ. தேர்ந்தவர். தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய சிலேடைகள் மிகப் பிரபலமானவை. பல நூல்களாக வந்து புகழ்பெற்றவை. இவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவன் தனது கட்டுரை ஒன்றில், "ஒரு சிறந்த அறிஞனின் நுட்பம், சுவைத் திறன், வல்லுநனின் மென்னயம், உண்மையான திறனாய்வாளனின் பரந்த நோக்கம், பரிவிரக்கம், புலவனின் அகத்திற உணர்வு இவையெல்லாம் அவர் பேச்சில் கலந்திருந்தன. தமிழ்க் காவியங்களின் நன்னயமும் நறுமணமும் இணைந்த ஓர் அற்புத நடையில் அவர் பேசினார்" என்கிறார். "ஜகந்நாதன் என்றால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கி.வா.ஜ. என்ற மூன்று எழுத்து தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும்." என்று குறிப்பார் ஓ.வி. அளகேசன்.

பன்முகம் கொண்ட கி.வா.ஜ. சுமார் 150க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அவரது நூல்களுக்கு தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா எனப் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழின் பெருமையைப் பரப்பிய கி.வா.ஜ.வுக்கு நான்கு குழந்தைகள். முதல் குழந்தைக்குத் தனது ஆசான் நினைவாக சாமிநாதன் என்று பெயர் சூட்டினார். ஏனையோருக்கு குமரன், முருகன் எனத் தமது வழிபடு கடவுளின் பெயரையும், பெண் குழந்தைக்கு உமா என்றும் பெயர் சூட்டினார்.

தமிழ்க் கவி பூஷணம், உபன்யாஸ கேசரி, திருமுருகாற்றுப்படை அரசு உட்படப் பல பட்டங்களையும் கௌரவங்களையும் கி.வா.ஜ. பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்ததால் அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கக் கூறியும் கூட அதனைக் கேளாது, பெரிய புராணத்துக்கு உரை எழுதும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த வேளையில் நவம்பர் 4, 1988 அன்று அவர் காலமானார்.

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், ஆன்மீகவாதி என்று பலபடப் பரிமளித்த கி.வா.ஜ. தமிழின் சிறந்த முன்னோடிகளுள் ஒருவர் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

(தகவல் உதவி: நான் கண்ட பெரியவர்கள், அ.ச.ஞா., இணையற்ற சாதனையாளர்கள், முக்தா சீனிவாசன், புது டயரி, கி.வா.ஜ., கி.வா.ஜகந்நாதன், நிர்மலா மோகன்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com