ராதிகா சித்சபையீசன்
கனடிய நாட்டின் பாராளுமன்றத்துக்குப் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதிகா சித்சபையீசன் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமல்ல, "இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் தவிர்த்த ஒரு நாட்டின் மத்தியப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரும் இவரே" என்கிறது விக்கிபீடியா. கனடாவின் ஸ்கார்பரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பாரளுமன்ற உறுப்பினரும் ஆவார் ராதிகா.

முப்பது வயதான இந்த அழகிய தமிழ் மகள் பிறந்தது இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலி கிராமத்தில். இவருக்கு மூத்த சகோதரிமார் மூவர் உள்ளனர். ராதிகாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கனடாவில் குடியேறினர். டொராண்டோவுக்கு மேற்கே மிசாவாகா பகுதியில் வளர்ந்தார் ராதிகா. பணியிட விபத்தொன்றில் இவரது தந்தை உயிரிழக்கவே இவரது தாயார் தனது செவிலியர் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் குடும்பதைக் காப்பாற்றுவதற்காகச் சம்பாதிக்கத் தொடங்கினார்.

தனது கல்லூரிப் படிப்பின் முதல் இரண்டாண்டுகளை டொராண்டொ பல்கலையில் செலவிட்ட போதே ராதிகா அதன் தமிழ் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். "முதன்முதலாக, என் தந்தையாரோடு ஏழு வயதில் டஃபரின் பீல் கத்தோலிக்க மாவட்ட வாரியம் தமிழையும் பன்னாட்டு மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டபோது நான் அரசியல் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தேன்" என்று நினைவுகூருகிறார் ராதிகா. இரண்டாண்டுகள் கார்லடன் பல்கலையில் வணிகவியல் பட்டத்துக்குப் படித்த போது அங்கே மாணவர் மன்றத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் குவீன்ஸ் பல்கலையில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2004ம் ஆண்டு புதிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தது இவரது பொதுவாழ்வின் திருப்பு முனை எனலாம். அங்கே ஒரு தன்னார்வப் பணியாளராகத் தொடங்கி, தேர்தல் பிரசாரக்குழு நிர்வாகி என்பதுவரை பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்தார். 'சீஷெமி ஃபவுண்டேஷன்', 'மால்வெர்ன் சமுதாயக் கூட்டமைப்பு' ஆகியவற்றின் நிர்வாகக் கமிட்டிகளில் உறுப்பினராக இருந்து வருவதோடு, 'அனைவருக்கும் வேலை' கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தாண்டிய நிலையிலான கல்வி எல்லோருக்கும் தரமானதாகக் கிடைப்பதற்கான முயற்சிகளில் கவனம் எடுத்து வருகிறார் ராதிகா. "சமுதாயம் குறித்த அக்கறையைப் பொதுமக்களிடையே பரப்புவது முக்கியம் என்று கருதுகிறேன்" என்று கூறும் ராதிகா இளைஞர் முன்னேற்றத்துக்கான செயல் பட்டறைகளில் கலந்துகொண்டு அவர்களிடையேயும் இந்த விழிப்புணர்வைத் தட்டியெழுப்புகிறார்.

"என் தொகுதியின் நூற்றுக் கணக்கான தொண்டர்கள் என் வெற்றிக்காக உழைத்தார்கள். இந்தத் தேர்தலில் 18 சதவிகித வாக்காளர்கள் அதிகமாக வந்திருந்து வாக்களித்தனர். அவர்களுக்கெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்று கூறும் ராதிகா தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தனது தொகுதிக்கு வந்து தரிசனம் தரும் மக்கள் பிரதிநிகள் போலல்லாமல், "எனது தொகுதி மக்கள் என்னை அணுகுவதை எளிதாக்குவது என் கடமை. உள்ளூரிலும் சரி, தேசிய அளவிலும் சரி நான் அவர்களுடைய நலனுக்காகக் குரல் எழுப்புவேன்" என்கிறார். உற்சாகமாக.

"ஒரு தமிழரான நான் பாராளுமன்றப் பிரதிநியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் மூலம் இங்கு குடியேறிய தமிழ்க் குடும்பங்களுக்கு ஒரு புதிய வாசல் திறந்துள்ளது. அவர்களுக்கான சில தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன" என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ராதிகா சித்சபையீசன். ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றி விசாரித்து அறிக்கை தருவதற்காகக் கனடிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றை அமைத்துப் பரிந்துரைகள் தரவும் உறுதி பூண்டுள்ளார். "நியாயமாக, சமமாக, கவுரமாக, நீதி பிறழாமல் மக்கள் நடத்தப்பட வேண்டும் என்பது என் நோக்கம். மெய்யான சமரசம் உண்டாக வேண்டுமென்றால் குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்" என்று தெளிவாகப் பேசுகிறார்.

எம்.பி. ஆகும்வரை டொரண்டோ பல்கலை மாணவர் சங்கத்துக்குப் பணியாற்றி வந்துள்ள ராதிகா, "நான் எப்போதுமே இளந்தலைமுறையினருக்காக உழைத்து வந்திருக்கிறேன். இந்தப் பதவி எனக்கு அதற்கான அதிக வாய்ப்புகளையும் ஆற்றலையும் தரும்" என்கிறார். "இளைஞர்கள் தமது சமுதாயத்தின்மீது அக்கறை கொண்டிருப்பது அவசியம். தாம் செய்வதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தலைமைப் பதவி தானே வந்து சேரும். ஐந்து வயதில் போர்க்களமாக இருந்த ஒரு நாட்டிலிருந்து ஓடிவந்த நான் கனடாவில் ஒரு எம்.பி. ஆக முடியுமென்றால், மற்றவர்களுக்கு வானமே எல்லை என்று தயங்காமல் சொல்லலாம் அல்லவா?".

சொல்லலாம்-கனவு காணவும், கனவை நனவாக்குவதற்காக உழைக்கவும் தயாராக இருந்தால். "இன்னும் பத்து ஆண்டுகளில் புதிய ஜனநாயகக் கட்சி மைய அரசில் ஆட்சியைப் பிடிக்கும், அந்த அமைச்சரவையில் நான் இருப்பேன் என்பது என் நம்பிக்கை" என்று ராதிகா தனது விழிகளில் நட்சத்திரங்களோடு சொல்லும்போது நாமும் அந்த நம்பிக்கையை எதிரொலிக்கத்தான் வேண்டியுள்ளது. அவர் கடந்து வந்துள்ள தூரம் அத்தகையது.

மதுரபாரதி

© TamilOnline.com