சாரதா ஒரு பித்துக்குளி என்பது ரொம்ப நாளாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு பேச்சு. பித்துக்குளிதானே? சரி. அவள் எப்படி இருந்தாலென்ன என்று விட்டுவிடலாமோ இல்லையோ? யாரும் விடுவதில்லை.
"இரண்டு கழுதைக்காகிற வயசாகிறது. இப்படியா பாவாடையும் சொக்காயும் போட்டுத் தெருவுக்கு அனுப்புவாள் பெற்றவள்? ஒரு மேலாக்கு போடப்படாதோ?" என்று சாரதாவையும் அவள் அம்மாவையும் கடிந்து கொள்ளத் தொடங்கினார்கள். இப்படிச் சொன்னவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். ஆண்கள் கண்ணில் சாரதாவின் அங்க வளர்ச்சி தெரியவில்லை என்று அர்த்தமல்ல; பூத்திருந்த ரோஜாப் பூவுக்கு முட்டாக்குப் போட்டு மொட்டாக்க முடியுமா என்பது அவர்கள் கேள்வி.
மகள் பித்துக்குளி என்றால், அம்மா அப்பாவி. ஊர் வாய்க்குப் பயந்து மகளுக்கு வேஷம் போட்டதோடல்லாமல், எப்படியாவது அவள் கழுத்தில் மூன்று முடிச்சும் விழப் பண்ணுவது என்று முனைந்து நின்றாள்.
பித்துக்குளிக்கு யார் பிள்ளை கொடுப்பார்கள் என்று அவள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. கல்யாணமான கொஞ்ச நாளிலேயே அவள் கணவன் எங்கோ ஓடி விட்டான். இன்றைத் தேதிவரை அவனைப்பற்றிய சமாசாரமே தெரியவில்லை. தாலியை விலக்கி விடுவதா விட்டு வைப்பதா என்ற பிரச்சினையைத் தவிர மற்றபடி சாப்பாடு முதலான சௌகரியங்களுக்குக் கஷ்டமில்லாமல் இருந்து வந்தாள். ஆகவே, சாரதாவின் கழுத்துக்கும் காதுக்கும் பளிச்சென்று மாட்டி விட்டால் போதாதா மாப்பிள்ளை பிடிக்க என்று தைரியமாயிருந்தாள்.
வெங்குசாமித் தரகர் அதிகச் சிரமமின்றி ஒரு பையனை அழைத்து வந்தார். பெண் பார்க்கிற வேளை வந்தது. மகளுக்கு அழகாக அலங்காரம் பண்ணி விட்டுக் கூடத்துக் கதவிடுக்கில் மறைந்து கொண்டு சாரதாவின் அம்மா ஊர் நிலவரம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அது முடிந்ததும் "சாரதா! சாரதா!" என்று கூப்பிட்டாள்.
மடமடவென்று ஓடிவந்து நின்றாள் சாரதா. எப்படி? அம்மா உயிரை விட்டுச் செய்த அலங்காரம் ஒன்று கூட இல்லை. கழுத்தும் காதும் மூளியாயிருந்தன. சாதாரணக் கிழிசல் சிற்றாடை அணிந்திருந்தாள்.
"அடியே சாரதா" என்று அம்மா கூவ, "வந்து... வந்து..." என்று வெங்குசாமி திணற, வந்த பிள்ளை ஓடியே விட்டான்.
"அடிப்பாவி! என்னத்துக்காக இப்படிப் பண்ணினாய்?" என்று அம்மா மொத்து மொத்தென்று அறைந்ததை வெங்குசாமி தடுத்து நிறுத்தினார்.
சாரதா அழக் கிழ இல்லை. கபகபவென்று சிரித்தாள். சிமிட்டித் தரையில் சோழியைக் கொட்டின மாதிரி. "இதோ பாரம்மா. நாந்தான் பித்துக்குளி என்று ஊரெல்லாம் பேராச்சே? இவன் ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வருகிறான்? பணம் ஏதாவது சுருட்டலாம் என்றுதான். அதெல்லாம் ஒன்றும் கிடையாது, ஏழைதான் என்கிறாற் போலக் காட்டினால் என்ன பண்ணுவான் என்று பார்த்தேன். நினைத்தபடியே ஆயிற்று. பார், ஓடிவிட்டான்!"
இந்த நிகழ்சிக்குப் பிறகு வெங்குசாமித் தரகரே பெரும் பாடுபட்டுப் போய் விட்டார் வேறு மாப்பிள்ளை பிடிக்க. சாரதாவுக்கு நிஜமாகவே கொஞ்சம் சொத்து பத்து இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர் பல ஆதாரங்களைக் காட்ட வேண்டியதாயிற்று.
கடைசியில் சீதாபதி அவளுக்குக் கணவனாக வந்து வாய்த்தான். கண் நிறைந்த யுவன் என்ற விஷயத்தில் சாரதா அதிர்ஷ்டக்காரிதான். சாரதாவுக்கு ஏகக் குஷி. அவளுக்கு ஒரே சினேகிதி. பால் ஊற்றும் கிழவியான பொன்னம்மா. அவளிடம், " பொன்னு, அவனைப் பார்த்தாயா! செக்கச் செவேலென்று ராஜாவாட்டம் இல்லை?" என்று கேட்டாள்.
"அடி அசடே! அவன் இவன் என்றெல்லாம் பேசாதேம்மா! அவர் என்கணும்" என்று மனைவி கற்க வேண்டிய முதல் பாடத்தைச் சொல்லித் தந்தாள் கிழவி.
ஆனால் கல்யாணத்தன்றைக்கு, சாரதாவால் வேறொரு கலாட்டா நிகழ்ந்து விட்டது.
விடிகாலை ஆறுமணிக்கு முகூர்த்தம் வைத்திருந்தார்கள். எழுந்து பார்த்தால் சாரதாவைக் காணோம்!
ராத்திரி படுத்துக் கொண்டிருந்தவள் இப்போது எங்கே போயிருப்பாள்? வீடு, வாசல், கிணறு, குளம், குதிருக்குள்ளே, மச்சு மேலே எல்லா இடத்திலும் தேடினார்கள்.
திடீரென்று, "ஐயையோ! என்னடி காரியம் இது?" என்று சாரதாவின் அம்மா கூச்சல் போடுவது கேட்டது.
ஓடிப்போய்ப் பார்த்தால் சமையல் அறை மூலையில், ஆட்டாங்கல்லுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, சாவதானமாக இட்டிலிக்கு மாவரைத்துக் கொண்டிருந்தாள் சாரதா!
பரபரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள் அவளை, நாலைந்து பெண்களாய். ஒருத்தி அவள் முகத்தைத் துடைத்து விடுவதும், ஒருத்தி தலையைப் பின்னி விடுவதும், இன்னொருத்தி புடவையைச் சுற்றுவதுமாக இருக்க, சாரதா தன் அம்மா மேல் சீறிக் கொண்டிருந்தாள், அத்தனை ரகளைக்கும் நடுவே.
"என்ன அநியாயம் பின்னே? பேசினால் பேசினபடி இருக்க வேண்டாமோ? அந்த இட்டிலிப் பாட்டிக்குப் படிக்கு நாலணா என்று பேசி அழைத்து வருவானேன்? அப்புறம் மூன்றணா என்பானேன்? அவள், பாவம் அழுது கொண்டே அரைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்டதும் சொன்னாள். 'வேலை செய்யாதே, போய் விடு' என்று காசு கொடுத்து அனுப்பி விட்டேன்" என்று சாரதா சொல்லிக் கொண்டிருந்ததை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
ஒருவழியாய்க் கல்யாணம் முடிந்தது. சாரதாவும் வம்பு எதுவும் பண்ணவில்லை. கணவனுடன் அவன் வேலை செய்யும் ஊருக்குப் போனாள்.
இரண்டு மாதம் கழித்து, சீதாபதியுடன் அவள் ஒருமுறை வந்தபோது பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். கிராமத்தின் செழுமையில் டவுனின் நாகரிகம் குத்து விளக்குக்குக் குங்குமம் வைத்தாற்போல் பளீரென்று கலந்திருந்தது. ஆணாகட்டும், பெண்ணாகட்டும், ஒரு பயலுக்காவது அவளிடம் முன்னைப் போலக் கிண்டலாகப் பேசத் துணிச்சல் வரவில்லை. என் வீட்டுக்கு வா, உன் வீட்டுக்கு வா என்று வருந்தி வருந்தி அழைத்தார்கள். ஒரு வாரம் சாரதா தாய் வீட்டில் இருந்தாள். வேளைக்கொரு உடையும் அலங்காரமுமாய்க் காட்சி தந்து விட்டு, "சீதாபதி அதிருஷ்டக்காரன்" என்று நாலு பேர் சொல்லுகிற அளவுக்குச் செய்து விட்டுப் போனாள்.
சீதாபதியும் கொஞ்சம் புத்திசாலிதான். பித்துக்குளியை சரிக்கட்டிக் கொண்டு போக எப்படியோ கற்றிருந்தான். சுவரொட்டிகள் அச்சடிக்கும் கம்பெனியொன்றில் அவனுக்கு நல்ல வேலை. முன்னூறு ரூபாய் சம்பளம். கையில் பணம் வந்ததுமே மனைவியிடம் கொடுத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கிக் கொள்வான். கூட்டிப் பார்த்தால் முன்னூற்றைம்பது ரூபாய் கொடுத்திருப்பாள். ஐம்பது ரூபாய் சாரதாவின் சொந்தப் பணம். போனால் போகட்டுமென்று சாரதாவும் பெருந்தன்மையாக விட்டு விடுவாள்.
ஒருநாள் ரொம்பக் கவலையுடன் சீதாபதி வீடு திரும்பினான். சாரதா குடைந்து குடைந்து கேட்ட பிறகுதான் மெதுவாய் விஷயத்தைச் சொன்னான்.
"என் அப்பா இறந்தபோது ஆயிரம் ரூபாய் கடன் வைத்து விட்டார். அதை அடைக்கவும், எனக்குக் கொஞ்சம் சொந்தச் செலவுமாய், இப்போது ஆயிரத்தைந்நூறு ரூபாய் கடன் ஏற்பட்டிருக்கிறது. மூன்று நாலு பேர் ஒரே சமயத்தில் நெருக்குகிறார்கள்" என்று ஒப்புக் கொண்டான்.
அன்று இரவே சாரதா அம்மாவிடம் புறப்பட்டுப் போய் மறுநாள் அஸ்தமிப்பதற்குள் பச்சை நோட்டாகப் பணம் கொண்டு வந்து விட்டாள்! சீதாபதி திணறிவிட்டான் திணறி, அவளைப் பாராட்டத் தெரியாமல்.
ஆனால் மறுவாரம் சீதாபதியின் பெயருக்கு ஒரு ரெஜிஸ்டர் செய்த கார்டு வந்தது. யாரோ சிவசாமியாம். ஐந்நூறு ரூபாயைத் திருப்பப் போகிறாயா இல்லையா என்று அதட்டியிருந்தான்.
"இவனுடைய பாக்கியையும் எறிந்து விடுவதற்கென்ன?" என்று புருஷனைப் பார்த்துக் கேட்டாள் சாரதா.
"எல்லாம் எறிந்தாகி விட்டது" என்று அலட்சியமாகப் பதிலளித்தான் சீதாபதி.
"எப்போது?"
"போன வாரம்தான்! விடு! பசிக்கிறது. டிபன் ஏதாவது...."
"இதற்கு பதில் சொல்லுங்கள் முதலில். இவனுக்கு எப்படிப் போன வாரம் கொடுத்திருக்க முடியும்? ஆயிரத்தைந்நூறுக்கு மூன்று பேர் கடனைத்தானே அடைத்தீர்கள்? இவன் பெயர் இல்லையே?" என்று சாரதா விடாமல் குறுக்கு விசாரணை செய்தாள்.
"சரி, கொடுக்கவில்லை!"
"அப்படிச் சொன்னால்! இவன் தகராறு பண்ணுகிறானே?"
"ஒன்றும் பண்ண முடியாது. அயோக்கியப் பயல்! திண்டாடட்டும்"
"திண்டாட்டம் என்ன இதில்?"
சீதாபதிக்குக் கோபத்தோடு சிரிப்பும் கலந்து வந்தது. "அநியாய வட்டி வாங்கினான் ராஸ்கல். ஒருநாள் அவனுக்கே தெரியாமல் புரோநோட்டைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன்!"
"என்னது!"
"நோட்டுத் தன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு குதிக்கிறான், மடையன்!"
எரித்து விடுகிறாற் போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் சாரதா. பிறகு விர்ரென்று போய் விட்டாள்.
மறுநாள் சீதாபதி வேலையிலிருந்து திரும்பியபோது, அவனுடைய அறை அலங்கோலமாய்க் கிடந்தது. கைப்பெட்டி பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. சாரதா உல்லாசமாய்க் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்தாள்.
"சாரதா, என்ன இது!" என்று கத்தினான் சீதாபதி.
சாரதா இடிஇடியென்று சிரித்தாள். "என்னைத்தான் பித்துக்குளி என்பார்கள். நீங்கள் எனக்குமேல் பித்துக்குளியாக இருக்கிறீர்களே! புரோநோட்டைக் கிழித்துப் போடாமல் பெட்டியிலேயே வைத்திருந்தீர்களே?" என்று சொல்லி விட்டு மறுபடி சிரித்தாள்.
"நல்லவேளை! நீயாவது கிழித்துப் போட்டாயே" என்று ஆறுதலாக மூச்சு விட்டான் சீதாபதி.
"கிழித்துப் போடுவதா? அந்தச் சிவசாமிக்கே அனுப்பி விட்டேன் ரிஜிஸ்டர் தபாலில்!" என்றாள் சாரதா.
சீதாபதி ரொம்ப மூர்க்கமாய்த்தான் அறைந்து விட்டான். கால் மணி நேரம் நினைவே தவறி விட்டது சாரதாவுக்கு. விழித்துக் கொண்டதும் புடவை, ரவிக்கைகளை சுருட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் தாய் வீட்டுக்கு.
"என்ன சாரதா? உன் புருஷன் எங்கே?" என்று கேட்டார்கள்.
"அவன் கிடக்கிறான் அயோக்கியன்!" என்று பதில் வந்தது. 'அவர்' பறந்து விட்டது.
ஆனால் 'அயோக்கிய'னுக்கும் அவளுக்கும் இருந்த பந்தம் அவ்வளவு சுலபமாய் விடுபடவில்லை. ஊருக்கு வந்தபோது சாரதா நாலு மாத கர்ப்பிணி. தாயார் மரணப் படுக்கையில் இருந்தாள். அக்கம்பக்கத்தில் யார் எழுதிப் போட்டார்களோ, சீதாபதி ஒருநாள் வந்து சேர்ந்தான்.
"நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். உன் மனசில் எண்ணியிருக்கிற காரியம் நடக்கும்" என்று அவனை வரவேற்றாள் சாரதா.
அந்த 'நீ'யைக் கேட்டுச் சீதாபதி கொஞ்சம் நிலை குலைந்து போனாலும் ஒரு சமாளிப்புச் சிரிப்புடன், "அது என்ன, மனசிலே எண்ணியிருக்கிற காரியம்" என்று கேட்டான்.
"அம்மா கண்ணை மூடி விடுவாள். இந்தப் பித்துக்குளியின் சொத்தைப் பந்தோபஸ்து பண்ண வேண்டாமா?"
சீதாபதி பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் சாரதா சொன்னபடிதான் நடந்தது. மாமியார் இறந்ததும், வீட்டைத் தவிர மற்ற சொத்துக்களை விற்று முதலாக்கினான் சீதாபதி. ஒப்புக்காக சாரதாவையும் கூட்டிக் கொண்டு பட்டணம் திரும்பினான்.
ஐந்தாவது மாதத்திலேயே கர்ப்பம் கலைந்து விட்டது. வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, சாரதா ஒரு வார காலம் அழுது கொண்டேயிருந்தாள். நோய் நொடி என்று அவள் உருக்குலையத் தொடங்கிய வேளையில் சீதாபதியும் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினான்.
பொறுக்க முடியாமல் ஒருநாள் சாரதா அவனை வழிமறித்துக் கொண்டு, "ராத்திரி வருவாயா?" என்று கேட்டாள்.
"மாட்டேன், அப்புறம்?"
"இதோ பார், தாலி கட்டின பெண்டாட்டி வீட்டில் இருக்கிறபோது இப்படி ஊர் சுற்றுவது..."
"சுற்றுவது....?"
"ரொம்பத் தப்பு. ரொம்பப்..... பாவம்.... நான் பித்துக்குளி. எனக்கு அதற்குமேல் சொல்லத் தெரியாது" என்று முகத்தைக் கையால் மூடிக் கொண்டு சாரதா ஓவென்று அழுதாள். பலனே இல்லை. கையை விலக்கிக் கொண்டு பார்த்தபோது வாசல் கதவு திறந்து கிடந்தது.
அப்புறம் ஒரு வாரம் வரை சீதாபதி வரவேயில்லை. ஆபிஸ் பியூன் ரத்தினத்தின் வீடு அருகேதான் இருந்ததால் அங்கே போய் விசாரித்தாள் சாரதா.
"எனக்கென்னம்மா தெரியும்? எஜமானுக்கு எத்தனையோ இடம் பழக்கம்" என்றான் அவன்.
"குறிப்பாகச் சொல்லு... ரொம்ப நெருக்கமாய் யாராவது... ஐந்து ரூபாய் பணம் தருகிறேன், சொல்லு"
"பொல்லாப்பு அம்மா... வந்து... சிங்காரின்னு பேரு. மேலத் தெருவுல வீடு. கல்யாணத்துக்கு முன்னாலெல்லாம் அங்கேதான் எப்பப் பார்த்தாலும்...."
"போதும் இந்தா பிடி" என்று ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு "ஆனால் இந்த மாதிரி எஜமானனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது மகா பாவம்" என்றும் கூறி விட்டுப் போனாள் சாரதா.
மேலத் தெரு சிங்காரி சிங்காரியாகவும் இல்லை. ஒய்யாரியாகவும் இல்லை. பல காலமாகப் படுக்கையில் கிடந்தவளாகக் காட்சியளித்தாள்.
"சீதாபதி இங்கே வந்தானா?" என்று சாரதா கேட்டாள்.
"அந்தப் பாவி இங்கே ஏன் வருகிறான்? அவனை நம்பி நான் நாசமாய்த்தான் போயாச்சே?" என்று கத்தினாள் சிங்காரி.
"ஏன்? என்ன மோசம் பண்ணினான்? விவரமாகச் சொல்லு" என்று கேட்டுக் கொண்டே வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சாரதா.
சிங்காரி புலம்பினாள்.
"என்னை ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றான்; அப்புறம் அது முடியவில்லை என்றான். சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். வேறே யாரோடும் நான் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றான். நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது என்று கேட்டேன். மாசம் எழுபத்தைந்து ரூபாய் தருகிறேன் என்றான். சரியென்றிருந்தேன். இப்போ நாலு மாசம் ஆச்சு. இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை...."
"பணம்" என்று சாரதா குறுக்கிட்டாள்.
"அவனே வராத போது பணம் எங்கேர்ந்து வரும்? பாதி நாளைக்குப் பட்டினிதான். இந்தப் பாவிக்காக நான் எல்லோரையும் விரோதித்துக் கொண்டாகி விட்டது...."
சாரதா இடுப்பிலிருந்து பர்சை எடுத்து, ஒரு பத்து ரூபாயை அவளிடம் கொடுத்தாள். "அப்புறம் வந்து உன்னைப் பார்க்கிறேன்" என்று விடைபெற்றுக் கொண்டு திரும்பினாள்.
சீதாபதி முதல் தேதியன்றுதான் வீட்டுக்குத் திரும்பினான்.
அப்போது இரவு மணி பதினொன்று இருக்கும். விடிவிளக்கின் வெளிச்சத்துடன் சாரதா கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்தாள்.
சீதாபதி தள்ளாடிக் கொண்டே தன் படுக்கையில் விழப்போன சமயம்....
திடீரென்று சாரதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கட்டிலின் அடியிலிருந்து உருவியெடுத்த மரச்சட்டமொன்று அவள் கையிலே இருந்தது.
"இங்கே படுத்தாயோ மண்டை டணார்! மரியாதையோடு அந்த சிங்காரி வீட்டுக்குப் போய்ச் சேர். பணத்தையாவது கொடுத்து விட்டு வா" என்று உறுமினாள்.
சீதாபதி விகாரமாய் இளித்துக் கொண்டே, "சிங்காரி... நீ தான் இதோ இருக்கிறாயே" என்று கிட்ட வந்து அவளது கையிலிருந்த சட்டத்தைப் பறிக்கத் தாவினான். அவ்வளவுதான்.
மடேரென்று தலையில் விழுந்தது அடி! பொட்டுக்கு மேலிருந்து குபு குபுவென்று ரத்தம் பெருகிற்று.
சட்டெனப் போர்வையின் நுனியைக் கிழித்து, காயத்தை அமுக்கிக் கட்டினாள் சாரதா. "சொன்னால் கேட்கிறாயா? எழுந்திரு..." என்று கைத்தாங்கலாக அவனைத் தூக்கி வாசல்புறம் அழைத்து வந்தாள்.
"எங்கே.... டாக்டரிடமா?" என்று சீதாபதி தடுமாறினான்.
"ஆமாம், வா" என்று சொல்லி விட்டுச் சாரதா தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு ரிக்ஷாவை நிறுத்தினாள். சீதாபதியை முதலில் ஏற்றி, பிறகு தானும் ஏறிக் கொண்டு, "மேலத் தெருவுக்குப் போ" என்றாள்.
ரிக்ஷாவின் மறு மூலையில் சாய்ந்து கிடந்த சீதாபதி ஏதோ முணுமுணுத்தான்.
வியப்பும் திகைப்புமாய்ச் சிங்காரி வாசற்கதவைத் திறந்து எட்டிப் பார்த்தபோது நடுநிசி.
"பிடி உன் ஆளை. இனிமேலே உன் சாமர்த்தியம்" என்று அவளிடம் கூறிச் சீதாபதியைத் திண்ணையில் படுக்க வைத்தாள் சாரதா. பிறகு அவன் சட்டைப் பையைத் துழாவி ஓர் உறையை எடுத்தாள் வெளியே.
"இந்தா! உன் அதிர்ஷ்டம். சம்பளப் பணம் முன்னூறும் அப்படியே இருக்கிறது. நாலு மாசத்துப் பாக்கி. என்ன, சரியாப் போச்சா?" என்று கணக்குத் தீர்த்தாள்.
இரண்டு நாள் கழித்து, தன் பிறந்த வீட்டிலேயே சாரதா நுழைந்து கொண்டாள். தாயைப் போலவே, தாலியை விட்டு வைப்பதா, வேண்டாமா என்ற பிரச்சினை அவளுக்கும் ஏற்பட்டது.
சாரதாவை இன்றைக்கும் பித்துக்குளி என்றுதான் சொல்கிறார்கள்.
ரா.கி.ரங்கராஜன் |