1976ம் ஆண்டில் கர்நாடக இசை ரசிகர்களுக்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்டது CMANA (The Carnatic Music Association of North America). இதன் 35வது ஆண்டு விழா, கர்நாடக இசை விழாவாக ஏப்ரல் 16, 17 தேதிகளில் எடிசனில் (NJ) கொண்டாடப்பட்டது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் பலர் பங்கு கொண்டனர். முதல் நாள் முதல் நிகழ்ச்சியாக ராஜேஷ் வைத்யாவின் வீணைக் கச்சேரி நடைபெற்றது. மதியம் நெய்வேலி சந்தான கோபாலன் கர்நாடக இசை பற்றி விரிவுரையாற்றினார். தொடர்ந்து தனது குழுவினருடன் கச்சேரி செய்தார். மாலையில் டி.எம். கிருஷ்ணாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இரண்டாவது நாள் முதல் நிகழ்ச்சியாக வயலின் வித்வாம்சினி கன்யாகுமரியும் அவரது சீடர் எம்பார் கண்ணனும் இணைந்து வயலின் இசை அளித்தனர். மதியம் நடந்த ப்ரியா சகோதரிகளின் இன்னிசை மழையில் பார்வையாளர்கள் நனைந்து குளிர்ந்தனர். மாலையில் நிகழ்ந்த டாக்டர் கே.ஜே. ஏசுதாஸின் கச்சேரி மிகுந்த மன நிறைவைத் தருவதாய் இருந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முக்கிய விருந்தினராக டேவிட் ரெக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர் CMANAவின் கவுரவப் புரவலர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.வசந்தகுமாரி அவர்களுக்கு 'கான ஜோதி' விருது வழங்கிப் பெருமை பெற்றது CMANA. தற்போது அவரது சிஷ்யை கன்யாகுமரிக்கு 'வாத்ய ஜோதி' விருது வழங்கிச் சிறப்பித்தது. விழாவின் சிறப்பம்சம் CMANAவுக்கு என இணையதளம் ஒன்று துவங்கப்பட்டதுதான். www.CMANA.org என்ற அந்த இணையதளத்தில் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை அறிந்து கொள்ளலாம், கர்நாடக இசை பற்றி அறிந்து கொள்வதுடன் கற்றுக் கொள்ளவும் வசதி உண்டு. CMANA ஒரு வரிவிலக்குப் பெற்ற தொண்டு நிறுவனம்.
செய்திக் குறிப்பிலிருந்து |