சிகாகோ: ஸ்ரீராம நவமி
ஏப்ரல் 30, 2011 அன்று சிகாகோ ஸ்ரீ பாலாஜி கோவில் ஸ்ரீராம நவமியை ஒட்டி ஜயந்தி சாவித்ரியின் ஹரிகதை மற்றும் லாவண்யா அனந்த்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றை வழங்கியது. இசை, கதை, கவிதை, தத்துவம் என எல்லாவற்றையும் இணைத்து வெகு அழகாக 'சீதாராம கல்யாணம்' ஹரிகதையை வழங்கிய ஜயந்தி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாசார்யா திட்டத்தின் கலைஞர் ஆவார்.

அடுத்து பரதநாட்டியம் ஆடிய லாவண்யா 'நிருத்ய சமர்ச்சிதா' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை வழங்கினார். இந்நிகழ்ச்சியை 'நிருத்யா டான்ஸ் தியேடர்', 'நிருத்யாஞ்சலி ஸ்கூல் ஆஃப் டான்ஸ்' மற்றும் 'நிருத்ய சங்கீத் ஸ்கூல் ஆஃப் டான்ஸ்' ஆகியவை இணைந்து வழங்கின. பிருந்தாவன சாரங்கியில் நிருத்யாஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அடுத்து 'தேவி ஸ்துதி' வந்தது. இதற்கு துர்கா, சாம்பவி, அம்பிகா, ராஜேஸ்வரி, மீனாட்சி போன்ற அம்பிகையின் பல்வேறு ரூபங்களைச் சிறப்பாக அபிநயித்தார். தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்களின் ராகமாலிகையில் அமைந்த 'சாமியை அழைத்தோடி வா' வர்ணத்துக்கு அவர் காட்டிய ரசங்கள் வெகு நேர்த்தி. அடுத்து அவர் சித்திரித்த அர்தநாரீஸ்வர தத்துவம் எவ்வாறு இயற்கையில் ஆண்மையும் பெண்மையும் இணைந்தே காணப்படுகிறது என்பதை எழிலோடு காண்பித்தது. விறுவிறுப்பான தில்லானோவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com