லட்சுமி தமிழ் பயிலும் மைய ஆண்டு விழா
மே 7, 2011 அன்று, அட்லாண்டா மாநகரத்தில் லட்சுமி சங்கர் அவர்களால் தொடங்கப்பட்டுப் பல ஆண்டுகளாக இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சித்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் நிர்மலா மூர்த்தி தலைமையேற்றார். சரவணன் சிவகுமார் இறைவணக்கம் பாடினார். ஆசிரியர் பிரியா ராமச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார்.

சரண் ராமச்சந்திரனும், சுருதி சந்தானமும் தொகுப்புரை வழங்கினர். தலைமை உரையைத் தொடர்ந்து, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், திவ்ய பிரபந்தம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருந்து பாடல்களைச் சிறு குழந்தைகள் அழகாகப் பாடி மகிழ்வித்தனர். 'பேச்சுமொழியைத் தவிர்ப்பது ஏன்?' என்னும் தலைப்பில் பெரியண்ணன் சந்திரசேகர் ஆய்வுரையாற்றினார். மகாகவி பாரதியாராக வேடமணிந்து சித்தார்த் நாதனும், முருகனாக வேடமிட்டு செளமியா கிருத்திவாசனும் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர். வள்ளிக்கண்ணு முத்தையா, பிரியா விஜய், ரேணுகா சந்திரன் ஆகியோரின் வகுப்பு மாணவர்கள் பாடல் பாட, ராஜி ராமச்சந்திரன், லட்சுமி சங்கர் ஆகியோரின் வகுப்பு மாணவர்கள் பாரதியார், பாரதிதாசன், ரவீந்தரநாத் தாகூர் கவிதைகளைப் படித்தனர். வந்தனா ராமன் வகுப்பு மாணவர்கள் 'தோசைப்புரத்து புலிகேசி' என்னும் நகைச்சுவை நாடகத்தை வழங்கினர். குழந்தைகளின் திருப்புகழ், தேவாரப் பாடல்களும், ஹானாவின் விவிலிய வாசகமும் இறையுணர்வைத் தூண்டின.

இடையிடையே, பொங்கல், எனக்குப் பிடித்த இந்திய உணவு, அருணகிரிநாதர் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் அளித்த பவர் பாயிண்ட் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தன. தவிர, சிரிப்பூட்டும் தமிழ், ஒத்திசைச் சொற்கள், அழகுத் தமிழ் பழகு, கடி ஜோக்ஸ் போன்றவையும் ரசிக்கும்படி இருந்தன. ஹேமா மோகனின் வழிகாட்டலில் தமிழ் மொழி, கலாசாரம், நாடு பற்றிய பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் உருவாக்கிய சுவரொட்டிகள் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விழாத் தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார். தொடக்க நிலையிலிருந்து, 9ம் வகுப்புவரை தமிழ் பயின்று இந்தப் பள்ளியின் முதல் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்ற அட்சயா சுரேஷ், தான் பயிலப்போகும் யேல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து தமிழைக் கற்கப் போவதாகக் கூறி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ரேணுகா சந்திரன் வழங்கிய நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா

© TamilOnline.com