'விநாயகர்' நாட்டிய நாடகம்
மே 15, 2011 அன்று பாஸ்கர்ஸ் அகாடமி 'விநாயகர்' என்ற நாட்டிய நாடகம் ஒன்றை சாக்ரமென்டோவின் ஃபோல்ஸம் 3-ஸ்டேஜஸ் அரங்கில் நடத்தியது. ஒன்றரை மணிநேரத் தயாரிப்பான இந்த நாடகத்தின் கதைச் சுருக்கத்தை முன்னதாக

அகாடமியின் நடன ஆசிரியர் மீனாட்சி பாஸ்கர் கூறினார். அகாடமியில் பயிலும் மாணவியர் இதில் நடித்தனர்.

இதில் பார்வதியாக காவ்யா குடுபுடி, சிவனாக அழகு சிதம்பரம், விநாயகராக தீப்ரா ஹன்டா ஆகியோர் பாத்திரம் ஏற்றிருந்தனர். 6 சிறுமியர் ஆடிய விநாயக ஸ்துதியை அடுத்து வந்தது ஆற்றில் விளையாடிய யானைகளின் புதுமையான நடனம்.

18 மாணவியர் இதை மிகச் சிறப்பாகச் செய்தனர். விநாயகர் பிறப்பைக் குறிக்கும் நடனக் காட்சியமைப்பு அருமை. சிவன், பஞ்சபூதங்கள் ஒருபுறமும் விநாயகர் தேவியின் அம்சங்கள் இன்னொரு புறமும் நடத்தும் யுத்தக்காட்சி பிரமாதம்.

கண்கவரும் வண்ணங்களில் ஆடை அணிகலன்களும், குறை சொல்ல முடியாத ஒலி, ஒளி அமைப்புகளும் வெகு சிறப்பு. வெகு நிறைவான நிகழ்ச்சி.

தகவல்: ஜெயந்தி ஸ்ரீதர்,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா.
புகைப்படங்கள்: சஷாங்க் தேஷ்பாண்டே

© TamilOnline.com