கே. பாலசந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது திரையுலகில் நீண்ட காலம் பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகிப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. 'நீர்க்குமிழி' படத்தில் இயக்குநராக அறிமுகமான பாலசந்தர் தனது வித்தியாசமான கதையம்சம், காட்சி உத்திகள், வசனம் இவற்றால் புகழ் பெற்றார். நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ரஜினி, ராஜேஷ், சுஜாதா, சரிதா என நல்ல பல நடிகர்களைத் திரையுலகிற்குத் தந்தவர். நாடகங்களை இயக்குவதிலும் மிகத் தேர்ந்தவர். 'அவள் ஒரு தொடர்கதை', 'தாமரை நெஞ்சம்', 'அபூர்வ ராகங்கள்', 'வறுமையின் நிறம் சிகப்பு', 'உன்னால் முடியும் தம்பி', 'அச்சமில்லை அச்சமில்லை', 'வானமே எல்லை', 'மனதில் உறுதி வேண்டும்', 'புதுப்புது அர்த்தங்கள்', 'கல்கி' என மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தந்தவர். தமிழில் மட்டுமல்லாமல் 'மரோ சரித்ரா', 'ஏக் துஜே கேலியே' போன்ற படங்கள்மூலம் கன்னட, ஹிந்தித் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்தவர். கதாநாயகர்களை நம்பாமல், கதையை மட்டுமே நம்பிப் படமெடுத்த துணிச்சல் கொண்டவர். இன்றும் சின்னத்திரை மூலம் நல்ல பல தொடர் நாடகங்களை அளித்து வருகிறார். தாமதமாக வந்தாலும் மிகச் சரியான விருதுதான்!
எஸ்.ரா.வுக்கு தாகூர் விருது தேசியக்கவி ரவீந்திரநாத் தாகூரின் நினைவை கௌரவிக்கு முகமாக அவர் பெயரில் 2009ம் ஆண்டு முதல் இலக்கியத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாகித்ய அகாதமியுடன் சாம்சங் நிறுவனம் இணைந்து அளிக்கும் இவ்விருது, ஒவ்வோராண்டும் இந்தியாவின் எட்டு முக்கியப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு முதன்முறையாகத் தமிழுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதைத் தமிழின் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுள்ளார். எஸ்.ரா. எழுதிய 'யாமம்' என்ற நாவலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 91 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டுப்பத்திரமும் தாகூர் உருவச்சிலையும் அடங்கியது இவ்விருது. 'யாமம்' ஏற்கனவே கனடாவின் இயல்விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செம்மொழி விருதுகள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 2005-2008 காலகட்டத்திற்கான இவ்விருதுகளில் தொல்காப்பியர் விருது பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்கும், குறள் பீடம் விருது முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இளம் அறிஞர்களுக்கான விருது சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2005-2008க்கான இவ்விருதுகளை முனைவர் இரா. அறவேந்தன், முனைவர் ய. மணிகண்டன், முனைவர் சி. கலைமகள், முனைவர் வா.மு.செ. ஆண்டவர், முனைவர் கே. பழனிவேலு, முனைவர் சு. சந்திரா, முனைவர் அரங்க பாரி, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் மா. பவானி, முனைவர் இரா. கலைவாணி, முனைவர் அ. செல்வராசு, முனைவர் ப. வேல்முருகன், முனைவர் ஆ. மணவழகன், முனைவர் ச. சந்திரசேகரன், முனைவர் சா. சைமன் ஜான் ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்களில் தொல்காப்பியர் விருது பெற்ற அடிகளாசிரியர் 102 வயதானவர். பன்னெடுங்காலமாகத் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் முகமாக மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு மையம், தொல்காப்பியம் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுத, ரூ. 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அரவிந்த் |