ஏப்ரல் 23, 2011 அன்று மில்டோஸில் உள்ள ஜெயின் கோயிலில் ரமணரின் 61வது ஆராதனை விழா கொண்டாடப்பட்டது. அதில் ரமணாச்ரமத் தலைவர் வே.சு. ரமணனின் சகோதரர்கள் கணேசன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் ரமணர் முன்னிலையில் வளரும் பேறு பெற்றவர்கள். மணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரமணாச்ரமத்தின் நிர்வாகத்தில் பங்காற்றுகிறார். கணேசன், தத்துவத்தில் உயர்கல்வி பெற்றுச் சிலகாலம் நிருபராகப் பணியாற்றிய பின் தம்மை ஆசிரமப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர். Mountain Path என்ற ஆசிரமப் பத்திரிகையின் நிர்வாக மற்றும் ஆசிரியர் குழுவில் பணி செய்தார். இவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பகவானின் உபதேசங்களைப் பகிர்ந்து வருகிறார். ஆராதனை விழாவில் கணேசன் அவர்கள் பேசியதின் சாரம்....
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஆர்தர் ஆஸ்பர்னின் மகள் கிட்டி இங்கிலாந்திலிருந்து வந்து ஆசிரமத்தில் ஒரு மாதம் தங்குவார். கிறிஸ்துமஸ் அன்றைக்குத் தன்னுடன் கேக் சாப்பிட அழைப்பார். முட்டை வாசனை பிடிக்காததால் நான் மறுத்து விடுவேன். ஒரு வருடம் கிறிஸ்துமஸின் போது தானே செய்த முட்டையற்ற கேக்கைக் கிட்டி கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். உடல்நலம் குன்றியிருந்த காரணத்தால் முருகனாரை ஆசிரமத்தில் அப்போது வைத்து கவனித்துக் கொண்டார்கள். நான் கிறிஸ்துமஸ் கேக்கை முருகனாருக்குக் கொடுத்துச் சாப்பிட வேண்டினேன். அன்றைக்குக் கிறிஸ்துமஸ் என்பதை அறிந்த முருகனார் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. "கணேசா, உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் இன்று ஏசுநாதரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள் அல்லவா? பகவான் ரமணருடைய பிறந்த தினத்தையும் அதேபோல் ஒருநாள் இவ்வுலகம் முழுதும் கொண்டாடப் போகிறது. சாதி, இன, மத வேறுபாடின்றி எல்லோரும் கொண்டாடப் போகிறார்கள். நான் இருந்து பார்க்கப் போவதில்லை. ஆனால் நீ பார்க்கத்தான் போகிறாய்" என்று வாழ்த்தினார். ரமணரின் ஆராதனை விழாவைக் கொண்டாட இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரையும், முக்கியமாக சிறுவர்களை, பார்க்கும்பொழுது, "ஒருவேளை நானும் அந்த நாளைப் பார்க்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றுதான் தோன்றுகிறது!
பகவான் ஸ்கந்தாச்ரமத்தில் இருந்த காலத்தில் ஒரு சில பக்தர்களே அவருடன் இருந்தார்கள். பல நாட்கள் உணவே கிடையாது. சிலநாள் பிக்ஷையில் கிடைத்த அளவுதான் உணவு. என்றாவது ஒருநாள் பகவானின் அன்னை சிறிதளவு சமைப்பார். குஞ்சு ஸ்வாமி முதலான பக்தர்களோ 19, 20 வயது இளைஞர்கள். பிக்ஷையில் கிடைக்கும் உணவு போதாது. ஒருநாள் வசதி மிகுந்த ஈசானிய மடத்தில் திருஞான சம்பந்தரின் ஆராதனை விழா நடக்கப் போகிறது என்று அறிந்த பக்தர்கள், மலையிலிருந்து இறங்கி ஈசானிய மடத்துக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தனர். ரமணரிடம் அதுபற்றிக் கூறினார்கள். உடனே ரமணர், "ஒரு ஞானியின் ஆராதனை நாளை எப்படிக் கொண்டாடுவீர்கள்?" என்று கேட்டார். "சம்பந்தரின் சிலைக்குப் பூசை, தீபாராதனை செய்த பின் அருமையான விருந்து கிடைக்கும்" என்றார்கள். இதைக் கேட்ட பகவான், குஞ்சு ஸ்வாமியிடம் தேவாரப் புத்தகத்தை எடுத்து வருமாறு பணித்தார். குருவும் சீடர்களுமாக அமர்ந்து நூற்றுக் கணக்கான தேவாரப் பதிகங்களைப் படித்தனர். "பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ (ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது உபதேசங்களை நினைவு கூர்வதன் மூலமே. அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன உபதேசித்தார் என்பவற்றை நினைவு கொள்ள வேண்டும்" என்றார் ரமணர்.
பகவானைச் சுமந்த காலத்தில் அழகம்மாள், உடலில் மிகுந்த வெப்பத்தை உணர்ந்ததால் வேப்பிலை, வில்வ இலைகளை அரைத்துப் பூசி வெப்பத்தைத் தணிக்க வேண்டியிருந்தது. பிரசவம் பார்த்த மருத்துவப் பெண்மணியோ பிறவியிலேயே கண்பார்வையற்றவர். குழந்தை பிறந்ததும் தன் வாழ்வில் முதன்முறையாகவும் (கடைசி முறையாகவும்) ஓர் அற்புத ஒளியினைக் கண்டார். 16ம் வயதில் ரமணரின் மரண அனுபவத்தின்போது அவரது மனோமயமான உடல் எரிந்து அழிந்து போனது. எஞ்சியிருந்தது அருணாசலமே! பிறந்தது முதல் 'அருணாசலா' என்ற ஒலி அவர் மனதில் கேட்டுக்கொண்டே இருந்தது. பகவான் திருக்கோவிலூரை அடைந்த போதும் கோவிலில் ஒரு மாபெரும் ஒளியைக் கண்டார். அவர்தம் மனித உடலை நீங்கிய போதும் வானத்தில் எரிநட்சத்திரம் போல் தோன்றிய அற்புத ஒளியைப் பற்றி அமெரிக்க நிருபர்களும் லைஃப் பத்திரிகையின் புகைப்படக்காரராகிய காத்தியே ப்ரெஸான் (Cartier Bresson) போன்றோரும் வியந்து எழுதினார்கள். அன்றிரவே இதுபற்றிய தகவல் பிபிசியில் வெளியானது. அந்த அற்புத ஒளியை நானும் பார்த்திருக்கிறேன்.
முதன்முறையாக பால் பிரண்டன் 36 பக்கங்களுக்குக் கேள்விகள் தயாரித்துக் கொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளருடன் பகவானைத் தரிசிக்க வந்தபோது, பகவானைப் பார்த்தவுடன் ஒரு கேள்வியும் எழாமல் ஒன்றரைமணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். மதிய உணவு இடைவேளையின்போது மொழி பெயர்ப்பாளர் (வேலூர் சுப்பிரமணிய ஐயர்), "36 பக்கம் தயாரித்தும் ஏன் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை?" என்று வினவியதற்கு, "தேவை எழவில்லை. என்னுடைய எல்லாச் சந்தேகங்களும் பகவானுடைய ஒரே பார்வையில் தெளிந்தன" என்று அவர் பதிலளித்தார்! பகவான் நமது அந்தராத்மாவைப் பிரதிபலிக்கும் ஞானக் கண்ணாடி" ஆவார்.
பகவத்கீதை, உபநிடதங்கள் எல்லாம், "நீ உடலுக்கெல்லாம் அப்பாற்பட்ட சத்தியமாகிய அழிவற்ற பொருள்" என்று சொல்வதைப் பலமுறை படித்தும், கேட்டும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், 'நம் உடல்தான் நாம்' என்கிற தவறான நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பதால், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று, ஒரு மனித உடலையே தாங்கி வந்தால்தான் அதன்மூலம் நாம் நம்மைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்வோம் என்று, அருணாசலமாகிய ஞானச்சுடர் ரமண உருவில், நம்மைப் பற்றிய உண்மையைத் தானே வாழ்ந்து காட்டி நமக்கும் உபதேசித்தது.
"இவ்வுடலை நீ என்று எண்ணாமல், உனக்குள் உன்னை யார் என்று விசாரித்து அறி. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் ஆழ்ந்த தியானம் செய்வாயேல் உன்னைப் பற்றிய உண்மை தன்னைத் தானே உணர்த்தும். இது உண்மை" என்று ரமணர் உபதேசிக்கிறார்.
முருகனார் ஒருமுறை ஆசிரமத்தில் நுழைந்தபோது வேறு யாரும் இல்லை. 5 முதல் 11 வயது வரையிலான 10 சிறுவர்கள் பகவானுடன் அமர்ந்திருந்தனர். பகவான் அவர்களிடம் உபதேச சாரத்தை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். அச்சிறுவர்களும் அவர் முகத்தையே பார்த்தவாறு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவான் முடித்ததும், முருகனார், "பகவானே, உபதேச சாரத்தின் ஒரேயொரு செய்யுளையே எங்களால் புரிந்து கொள்ள இயலாதபோது இச்சிறுவர்களுக்கு என்ன புரியும்?" என்று கேட்க, பகவான். "புரிந்து கொள்வது என்பது வெறும் புத்தியைப் பொறுத்த அறிவு மாத்திரம்தானா? நான் சொன்னதை அவர்கள் மனதில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுள் இருந்து வேலை செய்யும்" என்று பதிலிறுத்தார்.
பகவான் அன்றைக்குக் குஞ்சு சுவாமியிடம் ஈசானிய மடத்திற்குப் போய் விருந்து சாப்பிடாதே என்று கூறவில்லை. அத்துடன் ஞானசம்பந்தரின் வாக்குகளையும் நினைவு கொள் என்றுதான் கூறினார். அதுபோல நாமும் பகவான் ஆராதனையாகிய இன்று மதிய விருந்து சாப்பிடுவதுடன், அவரது அறிவுரைகளையும் நினைவு கூர்வது முக்கியம்.
கல்லூரியின் தத்துவம் படித்து, அரசாங்கத்தில் பெரிய பதவி வகுத்த சிவப்பிரகாசம் பிள்ளை, பகவானைப் பற்றிப் பலரும் அறிந்திராத காலத்தில், கல்லூரி நாட்கள் முதலே தமது நெஞ்சில் எழுந்த, "நான் யார்? முக்தி அடைவது எப்படி?" முதலான கேள்விகளைக் கேட்க, பகவான் அவருக்கு, "விடாமல் மனதை உள்முகமாகத் திருப்பி விசாரித்துத் தன்னைத் தான் அறிவதுதான் முக்தி" என்று எளிமையாகச் சொன்னாரேயன்றி, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தரவில்லை. இது ஏன் என்று எனக்கு எப்போதும் வியப்பாகவே இருக்கும். ஞானிகளின் வாக்குகளை அறிவு கொண்டு புரிந்து கொள்வதை விடுத்து அனுபவபூர்வமாக உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போது அதற்கென்று தனியாக விளக்கம் தேவையில்லை. விளக்கம் அனுபவமாகி விடாது. 'கடவுள்' என்று பேசுகிறோமே தவிரக் கடவுளை நாம் அனுபவத்தில் உணர்ந்ததில்லை. பகவானின் வார்த்தைகளை விடாமல் பற்றிக்கொள்ள நாம் கடவுளின் சொரூபமே என்பதை அனுபவத்தில் காணலாம்.
எளிய, சத்துள்ள, அளவான உணவு, நன்னடத்தை போன்றவை மனத்தூய்மைக்கு ஏதுவானவை. மனத்தூய்மை ஆத்ம விசாரத்துக்கு ஏதுவாகும். "மனம் என்பது என்ன?" என்பதை விளக்கியவர் பகவான். இந்த தேகத்தில் "நான், நான்" என்று எது எழுகிறதோ அதுவே மனம். 'நான்' என்கிற உணர்வு, நமது இருப்பின் மையமாகிய இருதயத்திலிருந்து எழுகிறது. நான் யாரென்று விசாரிப்பதன் மூலம் மனம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு உள்முகமாகத் திரும்புகிறது. உண்மையை உணர்கிறது. அமைதியில் ஆழ்கிறது. அந்த அமைதியே உங்கள் உண்மை சொரூபம். மனம் அடங்கி ஆத்மாவில் ஒன்றுவதே ஆன்ம விடுதலை அல்லது முக்தி.
அந்த உண்மை ஒளியை நாம் தரிசிக்க உதவுவது பகவான் அளித்த "நான் யார்?" என்னும் ஆத்ம விசாரணையாகும். இக்கேள்விக்கு பதில் என்று ஒன்றும் கிடையாது. நான் யார் என விசாரித்து, கவனத்தை உட்பக்கம் திருப்பி ஆழ்ந்த அமைதியில் எப்போதும் திளைத்திருப்பதே ரமணர் நமக்களித்த பாடம்.
கௌசீ ராமன் |