ஒருவரிக் குறளே!
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா?

படபடக்கும் பட்டாசுகளின் நடுவே
பளபளக்கும் மத்தாப்பே!

சுருக்குப் பை இதழ் வழி
சிதறும் சிரிப்புச் சில்லரையே!

விமான நிலையமே!
விழி வழியே வெடிகுண்டு கொண்டு வந்தால்
விசாரிக்க மாட்டாயா?

ஒரு கண்ணில் யுரேனியம்!
மறு கண்ணில் தோரியம்!
நிழலோடு கூடங்குளமும் கூடவே வருகிறதே!

தீவிரவாதம் கூடாது என்று
எப்படி உன் விழிகளுக்குச் சொல்வது?

அடி, வள்ளுவன் எழுத நினைத்த ஒருவரிக் குறளே!
கண்ணகி அள்ளித் தெறித்த மாணிக்கப் பரலே!

என் ராமநாதபுர இதயத்தில்
தஞ்சையைத் தள்ளிவந்து நனைத்தவளே!

உன் தஞ்சை வயல் வெளிக்கு
நான் திருநெல்'வேலி'யாய் இருக்கவா?

இல்லை,
உன் திருவண்ணாமலை விழிக்கு
நான் நெய்'வேலி'யாய் இருக்கவா?

நான் உன்னைப் பார்த்து
நடை வரும்போது கன்னத்திலும்
விடை பெறும்போது கண்ணிலும்
மருதாணி போடும் முல்லையே!
நான்
உன்னை வர்ணிக்க வரைமுறை இல்லையே!

வைரமுத்துவின் வார்த்தை படாத தண்ணீர் தேசத்தில்
கண்ணதாசன் காணாத காதல் செய்யலாம் வா!
கம்பனே வியக்கும் கவிதை பெய்யலாம் வா!

லெனின் ராமச்சந்திரன்,
பாஸ்டன்

© TamilOnline.com