சில மாற்றங்கள்
மாற்றம்-1

"வெல்கம் டு நெவார்க் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்" விமானப் பணிப்பெண் சாவி கொடுத்த பொம்மைபோல ஒப்பிக்கத் தொடங்கினாள். பதினைந்து மணி நேரம் பொறுமையாக உட்கார முடிந்தவர்கள், விமானம் முழுமையாக நிறுத்தப்படும் முன்பே, சீட் பெல்ட்டைத் துறந்து, செல்போனைச் சிணுக்கி, வீரபத்திராசனப் போஸில் நிற்க ஆரம்பித்தார்கள். எனக்கு அவசரமில்லை. நிதானமாக கைக்கடிகாரத்தை உள்ளூர் நேரத்துக்கு மாற்றிக் கொண்டேன். (சித்தார்த் தூங்கியிருப்பான்.) இமிக்ரேஷனில் வெளி நாட்டவருக்கான தர்மதரிசன வரிசையில் ஒரு மணி நேரம் நின்று, என் முழுநீளப் பெயரைக் கடித்துக் காமெடி பண்ணிய ஆபீசரைச் சகித்து, பேகேஜை சேகரித்து, கஸ்டம்ஸ் பகுதிக்கு வெளியே வந்து தினேஷுக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் என்னைப்பற்றி ஒரு அறிமுகம். நான் ஸ்ரீனிவாசன் ராமனுஜம். அமெரிக்க நண்பர்களுக்கு "ஸ்ரீ". இந்தியாவில் என்கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு "வெண்ணை"! பிறந்தது நாசிக்கில். வளர்ந்தது இந்தியாவில் பல பெயர் தெரியாத ஊர்களில். தற்சமயம் வசிப்பது சென்னையில்.

டாக்டராக ஆசைப்பட்டு நடக்காமல், டிகிரி முடித்து ரொம்ப அல்லாடாமல் ஒரு அமெரிக்க மருந்துக் கம்பெனியில் சேல்ஸ் ரெப் ஆனேன். வழவழ பேப்பர் பத்திரிகைகளில் கால் பக்கம் மருந்து என்ன பண்ணும் என்றும், மீதி முக்கால் பக்கம் வேண்டாத விளைவுகளும் போட்டு விளம்பரங்கள் பார்த்திருப்பீர்களே, அதே கம்பெனிதான். கடந்த பதினைந்து வருஷத்தில் இதே கம்பெனியில் பல அவதாரங்கள் எடுத்து, இப்போது இந்தியக் கிளையில் சீனியர் சேல்ஸ் மேனேஜர். 600 பேரை நிர்வகிக்கும் குட்டி சமஸ்தானாதிபதி.

ஜாதகம், நல்ல நேரம் பார்த்து கல்யாணம் பண்ணி, ஆச்சு-குழந்தை சித்தார்த்துக்கு எட்டு வயசும் ஆகிவிட்டது. முகப்பேரில் மூன்று பெட்ரூம் ஃப்ளாட், சோப்புப் பெட்டி ஹோண்டா சிவிக், இன்கம் டாக்ஸ் கட்டியும் மீதம் மூக்கால் அழாமல் கான்வெண்ட் ஃபீஸ் கட்ட முடியும் வருமானம், கொஞ்சம் இளம் தொந்தி, கொலஸ்ட்ரால் என்று குறை சொல்ல முடியாத வாழ்க்கை. அந்த ஒரு குறையைத் தவிர; அது... இப்போது வேண்டாம், இன்னொரு சமயம் சொல்கிறேன்.

தினேஷின் முகம் தென்படுகிறதா என்று தேடும் செயலைக் கைவிட்டு (நெவார்க்கில் இந்திய முகத்தைத் தேடுவதும், திருப்பதியில் மொட்டையைத் தேடுவதும் ஒன்று) இன்ஃபர்மேஷன் டெஸ்க் அருகே நின்றுவிட்டேன். "சாரிடா. ரொம்ப நேரமா வெயிட் பண்ணியா" தினேஷ் முதுகுப்பக்கம் தட்டி, என் டிராலியை நகர்த்தத் தொடங்கினான்.

"நீ மாறவே இல்லை. அப்டியே இருக்கே"

"தாங்க்ஸ்டா. தினம் ஒர்க் அவுட் பண்றேன். இந்த ஊர் ஜங்க் ஃபுட் அளவோட சாப்டறேன்"

"நான் அதை சொல்லலே. காலேஜ் நாளில் இருந்து எல்லாத்திலேயும், எப்பவும் லேட். அதை அப்படியே மெய்ண்டெய்ன் பண்றத சொன்னேன்" லேசாக ஒரு கண்ணடித்தேன்.

"இரு, உன்னை நடுக்காட்டுல இறக்கி விட்டுட்டுப் போறேன். உன்கிட்ட பெரிய மாற்றம் தெரியுது," செல்லமாக என் தொப்பையை சுட்டிக்காட்டிக் குத்தினான்.

தினேஷ் என் கல்லூரித் தோழன். என்னோடு சிலகாலம் சேல்ஸ் ரெப் வேலையும் பார்த்தவன். சென்னை வெயிலில் டை கட்டிக்கொண்டு, அழுக்குத் தோல் பையோடும், நோயளிகளோடும், குட்டி கிளினிக்குகளில் "தேவுடு காப்பது" அவனுக்கு ஒத்துவரவில்லை. "கழுத்துல டை, வாயில பொய்" உத்யோகம் எனக்கு சரிவராது என்றான். ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், ஏசி ரூம், டாலர் சம்பள – உத்தியோகக் கவர்ச்சியில், பத்து வருஷம் முன் வீசிய ஐடி புயலில் அமெரிக்காவுக்கு அடித்துச் செல்லப்பட்டவன். என்னை உரிமையோடு "டா" போட்டுக் கூப்பிடும் சிலரில் ஒருவன். என் அந்தரங்கம் ஒரளவு அறிந்தவன். இரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறேன். அதிகம் மாறவில்லை. வாழ்க்கையை அலட்டாமல் சுலபமாக நடத்தும் முறையினால், காதோர நரை தவிர, என்னைவிட இளமையாகவே இருந்தான்.

ஐஃபோனில் செய்தி உண்டா என்று துழாவிவிட்டு, மயிலாப்பூர் ஒண்டுக் குடித்தன ரூம் சைசுக்கு இருந்த ‘ஃபோர்டு எக்ஸ்ப்ளோரரை’ சீராக செலுத்தினான். வழியில் ஸ்டார்பக்சில் நிறுத்தி சின்ன பக்கெட் சைஸ் கப்பில் காபி குடித்தோம். வண்டிக்கு கேஸலீன். பிறகு ஆறுபாட்டை ஹைவேயில் வண்டி குடித்த கேஸலீனை ஜீரணித்து நியூஜெர்ஸி நோக்கிச் சென்றது.

"வாட்ஸ் யுவர் ப்ளான்?" இளையராஜாவின் சிம்பொனி சிடியை நிறுத்தி, எங்கள் மவுனத்தைக் கலைத்தான்.

"திங்கக் கிழமை மதியம் ஒரு மணிக்கு நியூயார்க் ஹெட் ஆபீஸில் இருக்கணும். இன்னிக்கு ராத்திரியே நியூயார்க் போகலாம்னு இருக்கேன். ஒரு வாரம் அங்கே வேலை, அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஜேஎஃப்கே வழியா ரிடர்ன். புது புராடக்ட் லாஞ்ச், ஒரு புது புராஜக்ட் ஆரம்பம். அதோட புராஜக்ட் மேனேஜரை செலெக்ட் பண்ணணும், வரிசையா மீட்டிங்ஸ்."

"ஏண்டா இப்படி ஆலாப் பறக்கற, ஒரு மூணு நாள் ரிலாக்ஸ்டா என்கூட இருந்துட்டுப் போவேன்னு பார்த்தேன்."

"நாட் திஸ் டைம், ஆனா இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சாச்சுன்னா அடிக்கடி வருவேன். அப்ப கண்டிப்பா ப்ளான் பண்ணலாம்."

"ஓகே. ஆனா ஒரு சின்ன மாற்றம். இன்னிக்கு ஒரு நாள் நம்ம வீட்டுல இருந்துட்டு நாளைக்குப் போகலாம். கார்த்தாலே ஆம்ட்ராக் ட்ரெயின் ஏத்திவிடறேன். டயத்துக்குப் போயிடலாம். தவிர உன்னாலே எனக்கு ஒரு காரியம் வேற ஆகணும். உன்னை நம்பி நானே ஒரு மாதிரி வாக்கு குடுத்துட்டேன். அதுக்காகவும் உன்னை இன்னிக்குத் தங்கச் சொல்றேன்."

"ம்ம்ம்..." பயண அசதியிலும், காரின் இதமான ஓட்டத்திலும் ஒரு மாதிரி தூங்கிக் கொண்டே முணுமுணுத்தேன்.

(மாற்றங்கள் தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

© TamilOnline.com